18/12/2023
விழலுக்கு இறைத்த நீராக மாறும் மாவட்ட ஆட்சியரின் சமூக வலைதள கோரிக்கை திட்டம்
முன் குறிப்பு: இந்தப் பதிவு மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறித்தோ, அவர்களின் செயல்பாடுகள் குறித்தோ, அதிகாரிகள் குறித்தோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் பதியப்பட்டது அல்ல, மாறாக ஒரு சிறப்பான செயல்பாடு முழுமையாக அதன் நோக்கத்தை அடைந்து, பொதுமக்களுக்கு பயன் தர வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன், அதிகாரிகள் தங்களின் முழு ஈடுபாட்டை இதில் காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக வேண்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். பணியே உயர்ந்தது. ஐ.ஏ.எஸ். என்பது, அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணியாகும். ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளைச் செய்ய முடியும். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி இருக்க வேண்டுமென்றால் – தனது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக் கொண்டு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கு அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
ஐ.ஏ.எஸ். பணிக்கான தகுதிகள் என்னவென்றால் – நேர்மறை எண்ணம், தலைமைத்துவ பண்பு, ஆளுமைத்திறன், தைரியம், உறுதியான மனப்பாங்கு, தன்னம்பிக்கை, ஒவ்வொரு நெருக்கடியான சூழலிலும் அமைதியைக் கடைப்பிடித்தல், நல்ல அறிவுத்திறன், சிறப்பான பொது அறிவு, நல்ல தகவல் தொடர்பு திறன் எனப் பட்டியலிடலாம்.
கல்வி, மருத்துவம் மற்றும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றவுடன் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற நாள் முதல், அருண் தம்புராஜ் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். பொதுமக்களின் குறைகளை அறிந்து பதிலளிப்பதுடன், பிரச்சனைகளுக்குத் தீர்வும் காண்கிறார். மக்களிடம் காட்டிவரும் இந்த நெருக்கம்தான், அவரைப் பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறது.
மாவட்டத்தின் தேவைகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவும் செய்கின்றனர். மக்கள் கேள்வி கேட்பதும், மாவட்ட ஆட்சியர் பதிலளித்து தீர்வு காண்பதும், அரசாங்கம் இவற்றுக்கு இசைவதும் ஆரோக்கியமான செயல்பாடுகள் அல்லவா!
‘எந்த மாவட்ட கலெக்டரும் சொல்லாததை, செய்யாததை நமது கடலூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் அருண் தம்புராஜ் செய்து வருகிறார். "எல்லா மாவட்டத்துக்கும் உங்களை மாதிரி ஆட்சியர் இருந்தால், எல்லாம் கண்டிப்பாக முன்னேறி விடும். கொடுத்து வச்ச கடலூர் மாவட்டம்" என்கின்றனர் பிற மாவட்ட மக்கள்.
அந்த அடிப்படையில் கடந்த மே மாதம் இறுதியில், கடலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வாட்ஸ் அப்பில் (whatsapp): 8248774852 - என்ற எண்ணிற்கும், சமூக வலைதளங்களான முகநூல் (Face book), User Id District Collector Cuddalore, படவரி (Instagram) User Id : Collector Cuddalore, கீச்சகம் (Twitter) Userld : Collector Cuddalore ஆகிய வலைதளங்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம். பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடலூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான அதிகாரிகள் அடங்கிய தனிக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று பார்க்க முடியாத பொதுமக்களுக்கும், திடீரென்று ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கும் என பல்வேறு பொது நன்மைகளை உள்ளடக்கிய திட்டம்.
மக்களின் பல்வேறு பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்காக துவக்கப்பட்ட இந்த செயல்பாடு, மாவட்ட ஆட்சியரின் தூரநோக்கு சிந்தனையின் பிரகாரம் செயல்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்து பார்த்தால் இந்த குழுவில் செயல்படும் சில அதிகாரிகளின் பொறுப்புத் துறப்பினால் பல்வேறு புகார்களுக்கு தீர்வுகளே கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.
அதாவது, மேற்கூறப்பட்ட வகையில் ஒரு புகாரை அல்லது குறையை அனுப்பி வைத்தால் அதை கவனிக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட துறைக்கு அதை மாற்றி விடுவார்கள் (சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத துறைகளுக்கும் அனுப்பி வைப்பார்கள், அது தனி கதை). அதற்கான செய்தியை புகார் தந்தவர்களுக்கும் தருவார்கள்.
சில புகார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அனுப்பி வைக்க மாட்டார்கள். தாங்களும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்கள். அது குறித்து மீண்டும் நினைவூட்டினாலும் எவ்வித பதிலையும் வழங்க மாட்டார்கள்.
பொதுமக்களின் புகார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கிடைத்தவுடன் சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புகார் அளித்தவரிடம் தொலைபேசி வாயிலாக குறைகளை கேட்பார்கள். என்னதான் புகாரில் தெளிவாக எழுதியிருந்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பேசுகிறோம் என சொல்வார்கள். அதற்கு பிறகு அந்தத் துறை அதிகாரிகள் தருகின்ற பதிலை நமக்கு நடவடிக்கை எடுக்கபட்டுவிட்டதாக தருவார்கள்.
ஆனால், வைக்கப்படும் புகாரின் தன்மை என்ன? எத்தனை முறை அந்தப் புகார்கள் வைக்கப்படுகின்றன? அதிகாரிகள் தருகின்ற பதில்கள் உண்மையில் நியாயமானவைதானா? மீண்டும் அந்த பதில் குறித்து புகார்கள் வருகின்றனவே என்பதை எல்லாம் மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த துறையை கையாளும் அதிகாரிகள் சிறிதுகூட பார்க்க மாட்டார்கள்.
தங்களுக்கு வரக்கூடிய புகார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாற்றி விடுவதும், அவர்களிடமிருந்து வரக்கூடிய பதில்களை மனுதாரருக்கு வழங்குவதும் என அஞ்சலக பணிகளை மட்டும் செய்து கொண்டிருந்தால் எப்படி பொதுமக்களுக்கு சரியாக தீர்வுகள் கிடைக்கும்? என மக்கள் கேட்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, ஒரே ஊர் / பகுதி, அல்லது ஒரே துறையை குறித்து அல்லது ஒருவரே தொடர்ந்து புகார்களை அனுப்பிக் கொண்டிருந்தால் அந்தப் புகார்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளாமல், அதற்கான தீர்வுகளை பெற்று தராமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பவர்கள் குறித்து தவறான தகவல்களை சொல்லி போட்டுக் குடுப்பதும், எந்தப் புகாருக்கும் நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை பாயாமல் இருக்கவும் இவர்கள் பக்கபலமாக இருப்பதாகவும் அரசல் புரசலாக செய்திகள் வந்து கொண்டுள்ளன.
எனவே, மாவட்ட ஆட்சியரின் இந்த சிறப்பான திட்டம் உண்மையில் பொதுமக்களுக்கு பயன்பெற வேண்டுமானால் ஒவ்வொரு புகாரையும் மாவட்ட ஆட்சியரின் இந்த அதிகாரிகள் குழு தங்களின் முழு ஈடுபாட்டுடன் அந்த கோரிக்கைகள் ஆராய்ந்து, அவை முழுவதுமாக நிறைவேறும் வரை தொடர் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும்.
இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உன்னதமான இந்த செயல்பாடு விழலுக்கு இறைத்த நீராகத்தான் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
- கலீல் பாகவீ, ஒருங்கிணைப்பாளர், பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் (PNO-PNS) | நிறுவனர், சமூக கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளை (SEA-ToP), பரங்கிப்பேட்டை