04/05/2026
நாளை 11 மணிக்கு எல்லாம் தெளிவான நிலவரம் தெரிந்து விடும். இப்போது சும்மா, எக்ஸிட் போல் முன்வைத்து , விஜய் கட்சிக்கு ஏன் இவ்வளவு அமோக ஆதரவு? உண்மையான ஓட்டு எண்ணிக்கையிலும் , அதுவே எதிரொலித்தால், ஏன் இப்படி நடந்தது... என்பதைப் பற்றிய என்னுடைய பார்வை.
பலரும் விஜய் கட்சிக்கு 10 முதல் 15% ஓட்டு கிடைக்கும் என்றே நினைத்தார்கள், நான் உட்பட. ஆனால் நிலைமை வேறு மாதிரி என்பது புரிய வருகிறது. நாம் நினைத்ததை விட அதிகம் பேர் விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள்.
ஓட்டு சதவீதம் வேறு, எம்எல்ஏ சீட் ஜெய்ப்பது வேறு. சமச்சீராக ஓட்டுக்கள் அனைத்து தொகுதியிலும் விழுந்தால்தான் சில எம்எல்ஏக்களையாவது பெறலாம்.
விஜய் கட்சி எத்தனை எம்எல்ஏக்கள் பெறுகிறார்கள் என்பதை கூட விட்டு விடலாம். ஒருக்கால் தமிழக வெற்றி கழகம், 20 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் வாங்கினாலோ, அல்லது அதற்கு மேல் வாக்குகள் பெற்றாலோ, அல்லது சில பல எம் எல் ஏ சீட்டுக்கள் ஜெயித்தாலோ, அல்லது அதிர்ச்சிகரமான முறையில் ஆட்சியை பிடித்தாலோ அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
கட்சிக்காரர்கள் மட்டும்தான் தொடர்ந்து திமுகவையும் அதிமுகவையும் ஆதரித்து வருகிறார்கள், வருவார்கள்.
பொதுமக்கள் என்று சொல்லப்படுபவர்கள், தொடர்ந்து இரண்டு கட்சிகளையும் கவனித்து வருகிறார்கள். இரண்டு கட்சியின் அரசியல்வாதிகளும் தொடர்ந்து கொள்ளையடித்து பெரும் பணக்காரர்களாக வலம் வருவதை எரிச்சலுடனும் கோபத்துடனும் கவனித்து வந்திருக்கிறார்கள்.
அரசு திட்டங்களின் மூலம் பணம் கொடுத்தாலும், ஓட்டுக்கு பணம் பெற்றாலும்,
இதெல்லாம் எங்க காசுதான் என்ற எண்ணம்தான் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
"எங்க கிட்ட புடுங்கி தானே திரும்ப கொடுக்கிறார்கள் " இந்த டயலாக்கை பலதரப்பட்ட பொதுமக்களிடம் , நான் நேரில் கேட்டிருக்கிறேன்.
அளவுக்கு அதிகமான ஊழல், பெரும் கொள்ளை, அரசியல்வாதிகள் பகட்டாக வாழ்வது (எந்த உழைப்பையும் போடாமல்) இவையெல்லாம் பொதுமக்களை எரிச்சல் ஊட்டும் விஷயங்கள்.
அதற்காக பொதுமக்கள் மிக மிக நல்லவர்கள் , அறம் சார்ந்து வாழ்பவர்கள் என்று அர்த்தமல்ல.
இன்னொருவரை பார்த்து பொறாமைப்படுபவர்கள். நாம இவ்வளவு கஷ்டப்படுகிறோம், இவனுங்க அரசியல்வாதியாக இருந்து கொண்டு , இவ்வளவு கொள்ள அடிச்சு, ஜாலியா இருக்கானுங்க என்ற பொறாமை தான் காரணம்.
அதனால்தான் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எந்த குற்ற உணர்வு இல்லாமல் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை.
சில வருடங்களுக்கு முன்பு கூட, ஊழல் மற்றும் கொள்ளைகளை கொஞ்சம் மறைமுகமாக செய்வார்கள். கொஞ்சம் கூச்சமிருக்கும். வெட்கம் இருக்கும்.
இப்போது அதெல்லாம் சுத்தமாக போய்விட்டது.
பச்சை பச்சையாக மக்களுக்கு தெரிவது போலவே செய்கிறார்கள். யாரேனும் அதில் மாட்டிக் கொண்டால் கூட, கட்சி அவருக்கு துணை நிற்கிறது. கூட்டுக் கொள்ளையில் கூட்டாளியை எப்படி விட்டுக் கொடுப்பது? கூட்டுக் கொள்ளை எதிக்ஸ் ஒழுங்காக வேலை செய்தால் தானே கூட்டுக் கொள்ளை சிஸ்டம் நிலை நிற்கும்.
நான் ஒரு குக்கிராமத்தில் இருந்தபோது, ஒரு கட்சி ஓட்டு சேகரிக்க வந்தது. வேட்பாளர் மிகப்பெரிய பார்ச்சூனர் காரில் வந்தார். அவருக்குப் பின்னால் 20 கார்கள். பெரும்பாலும் விலை உயர்ந்த கார்கள். ஒரே ஹோதாவாக, ஒரு மாபியா கேங்க் கிராமத்திற்குள் நுழைவது போல இருந்தது.
இதையெல்லாம் பார்க்கும் பொதுமக்களுக்கு வயிறு எரியாதா?
ஒரு எம்எல்ஏ வேட்பாளருக்கு உதவுவதற்காக வரும் அல்ல கைகளுக்கே இவ்வளவு பெரிய கார்கள் என்றால்....என்று பொதுமக்கள் யோசிக்க மாட்டார்களா?
இதைப் போன்ற அல்ல கைகள் எல்லாம் எந்த வேலைக்கும் போவதில்லை... எந்த நேர்மையான தொழிலும் செய்வதில்லை.
ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு பாடாய்படும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் கோடிக்கணக்கில் சுருட்டுபவர்களை பார்த்தால் வயிறு எரியாதா?
என்னைப் பொறுத்தவரை, விஜய்க்கு நாம் நினைப்பதை விட அதிக வாக்குகள் விழுந்தால், அது விஜய் க்காக விழுந்த வாக்குகள் அல்ல. அரசியல்வாதிகளும், அவரை சார்ந்தவர்களும் எந்த உழைப்பும் இல்லாமல், கோடிக்கணக்கில் சுருட்டி கன்னா பின்னா என சொத்து சேர்த்து , கூத்தடிப்பதை பார்த்த வயிற்றெரிச்சலில் விழுந்த ஓட்டுகள் தான்.
இன்னொன்று, கட்சித் தலைமைகள் பகட்டாக வாழ்வது, மற்றும் அவர்களது குடும்ப சொந்தங்கள் செல்வ செழிப்பில் மிதப்பது , இவற்றையெல்லாம் பார்த்து, அவர்கள் ஆக்சுவலாக கொள்ளையடித்து சேர்த்து வைத்திருப்பதை விட, பொதுமக்கள் அதீதமாக கற்பனை செய்தும் கொள்கிறார்கள்.
மற்ற மாநிலத்தை ஒப்பிட, கொள்கை சார்ந்து, அலசி ஆராய்ந்து ஓட்டளிப்பதில், தமிழக வாக்காளர்கள் எப்போதும் முன்னணி தான். ஆனாலும் கடந்த பல வருடங்களாக , இரண்டு கட்சிகளும் , அவற்றைச் சார்ந்த பலரும் வெளிப்படையாக வெட்கமே இல்லாமல் ஊழல் செய்து சொத்து சேர்த்ததை பார்த்து, வெறுப்பின் உச்சத்திற்கு போய் , கடுப்பாகி, ஏதேனும் ஒரு மாற்றம் செய்வோம் என விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டதாக தான் இதை நான் எடுத்துக் கொள்கிறேன்.
அதாவது கொள்கையை அடகு வைத்து அல்லது பூச்சாண்டி காட்டி ஊழல் செய்வதை பொதுமக்கள் ஏற்கவில்லை என எடுத்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில் நான் விஜய் கட்சிக்கு பொதுமக்கள் நிறைய அளவில் ஓட்டு போட்டு இருப்பின் , இதை ஒரு தீர்வாக எடுத்துக் கொள்ள வில்லை.
ஆனால் இரண்டு கட்சிகளும், இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ளலாம்.
மோகு
அரசியல் விமர்சகர்
7904061385