28/01/2025
திண்டிவனம் வட்டம் விட்டாலாபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்து, நீரோடையை தூர்த்து முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன் என்பவர் தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் விட்டாலாபுரம் கிராம அருந்ததியர் சமூக சுடுகாட்டையும் ஆக்கிரமித்து அராஜகம் செய்து வருகிறார் முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன்.
நீலகண்டனிடம் லஞ்சம் பெற்றுகொண்டு விட்டாலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிபதி ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார், திண்டிவனம் வருவாய் ஆய்வாளரும் இதற்கு உடந்தை.
நீரோடையை தூர்த்து விவசாயம் செய்வதால் மழை காலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது என்றும்,
அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டிவனம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.
இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திண்டிவனம் வட்டாட்சியரும் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார் .
இன்று 28.01.2025 ஓடை புறம்போக்கு மற்றும் வண்டிபாதை புறம்போக்கில் சவுக்குமர கன்றுகளை நடவு செய்தும், மக்கள் பயன்படுத்தும் பாதையில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவுக்கு குழி வெட்டியும் உள்ளார் முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன்.
இந்த தகவலை திண்டிவனம் வட்டாட்சியரிடம் மாலை 4.30 மணியளவில் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார் DYFI நிர்வாகி திருமுருகன்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விட்டாலாபுரம் திரும்பிய திருமுருகனை 5 மணியளவில் வழிமறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டனின் ஆதரவாளரும், நீலகண்டன் நிலத்தை பராமரிப்பு செய்து வருபவருமான ஜெயபால் என்பவர் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லி மனு கொடுப்பியாடா என்று சொல்லி தன் கையிலிருந்த மண்வெட்டியால் DYFI நிர்வாகி திருமுருகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார்.
அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு மற்றும் வண்டிபாதை புறம்போக்கை ஆக்கிரமித்த விட்டாலாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன் மீதும்,
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்த DYFI நிர்வாகி திருமுருகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விட்டாலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும்,
அரசுக்கு சொந்தமான வண்டிபாதை புறம்போக்கு மற்றும் ஓடை புறம்போக்கில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் விட்டாலாபுரம் கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் வருவாய் ஆய்வாளர், திண்டிவனம் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும்,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும், தமிழக அரசையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்...