02/10/2023
வெல்லட்டும் மதச்சார்பின்மை!
மதுரையில் SDPI கட்சியின் மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு!
எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிவிப்பு
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (செப்.30) மதுரையில் உள்ள பிரசிடெண்ட் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாநில, மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறும்போது;
"நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மையாகும். அரசின் சேவைகள், குடிமக்களுக்கான உரிமைகளில் மக்களுக்கு மத்தியில் எந்த விதத்திலும் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், துரதிஷ்டவசமாக தற்போதைய ஆட்சியில் நாட்டின் உன்னதமான மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழிகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை ஆளும் ஒன்றிய பாஜக அரசே செய்துவருகின்றது.
மதச்சார்பின்மை மீதான மறைமுகத் தாக்குதல்கள் அரசின் ஆதரவுடன் இப்போது நேரடியாகவும் வெளிப்படையாகவும் மாறிவிட்டன. அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை வீழ்த்திட, அதன் மீது தாக்குதல் தொடுப்பதும், சிறுமைப்படுத்துவதும், இறுதியில் அதனை ஒழிப்பதுமான பாசிச திட்டங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருபுறம் மதச்சார்பின்மைக்கு எதிராக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் நடந்துவரும் வேளையில், மறுபுறம் மதவாதம் அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறிக்கொண்டிருக்கின்றது. மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதவெறுப்புகள் அங்கிங்கெனாதபடி நாட்டின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.
இவையெல்லாவற்றிற்கும் தீர்வாக, அரசியலமைப்பை, அதன் உன்னத உயர்ந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
ஆகவே, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை!' என்ற முழக்கத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் மதுரை மாநகரில் மாபெரும் 'மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு' நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள மதச்சார்பின்மையை காக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்திட வேண்டும்.என தெரிவித்தார்.
#வெல்லட்டும்_மதச்சார்பின்மை