29/12/2020
அதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவரே சட்டமன்ற உறுப்பினர், அவரே எம்.பி, என்ற நிலையில் தேர்தல் நிர்வாக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
பதவிக்காகவோ, செல்வாக்குக்காகவோ யார் காலிலும் விழுந்ததில்லை. அப்படிப்பட்டவர், அதிமுக தான் வெல்ல போகிறது என்று தெரிந்தும், தேர்தல் சமயத்தில் பச்சை குத்தும் விவகாரம் காரணமாக எம்ஜிஆருடன் சண்டை போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். தேர்தல் வெற்றிக்கு பின் எம்ஜிஆரே அவர் வீட்டுக்கு தேடி வந்து அவரை மீண்டும் அழைத்துக் கொண்டார். தன்மானம் சுயமரியாதை என்றால் என்ன என்பதை அமரர் கோவை செழியனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
கவுண்டர் சமுதாய இட ஒதுக்கீடு போராட்டங்கள் துளிர் விட்ட சமயம். அமரர் கோவை செழியன் அப்போது காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வாக இருந்தார். பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது எந்தெந்த சாதிக்கு எவ்வளவு பதவிகள் ஒதுக்கப்பட்டது என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
கோவை செழியன் அவர்கள் எழுந்து, 'கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் என்ன விதத்தில் முன்னேறி விட்டார்கள்? எங்க சாதிக்கு ஒரு பதவிகூட இல்லாதது முறையா?' என்று தனது சொந்த கட்சி முதல்வரைப் பார்த்து சட்டசபையில் அனைவர் முன்னிலையில் பொட்டில் அடித்தது போலக் கேட்டார்.
நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என்ற மூத்த உறுப்பினர் 'கட்சி கூட்டத்தில் பேச வேண்டியதை இங்கே ஏன் பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்.
'உன் சாதிக்கு எல்லா சலுகையும் கிடைச்சிருச்சு னு நீ பேசுற.. இதுபற்றி பேச கட்சி கூட்டத்தை கூட்டினார்களா?? உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கொடுத்த முதல்வர் எங்கள் சாதியை ஏன் மறந்தார்?' என்று கொட்டு வைத்தார்.
பின்னாளில் காங்கயத்தில் கட்சி விரோதமாக, இட ஒதுக்கீட்டை ஆதரித்து முதல்வரை விமர்சித்து பேசினார் என்று கட்சியில் இருந்தும் விலக்கப்பட்டார்!
இறுதியாக இட ஒதுக்கீடு அறிவிக்கும் இறுதிகட்ட காலத்தில் மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் கவுண்டர்களுக்கு இடஒதுக்கீடு வந்தால் அவரது சமூகத்தின் பங்கு குறையும் என்று ஆட்சேபித்தார். அந்த இடத்திலும் சுள்ளென்று பதிலடி கொடுத்தார். 'உங்களுக்கு வேண்டுமானால் இன்னும் அதிகம் பெற்றுக் கொள்ளுங்கள், எங்கள் சமூக உரிமையை கேட்பதை தடுக்க வேண்டாம்' என்று கூறிவிட்டார்.
பல சூழல்களில் தனது பேர் வெளியில் வராவிட்டாலும் பரவாயில்லை, கவுண்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று அதில் வழுவாமல் இருந்தார்.கட்சி தலைமை மட்டுமில்லை, கவுண்டர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்த தன் சொந்த சாதி பரம்பரை நிலசுவாந்தார்கள், பணக்காரர்கள், சமூக தலைவர்கள் என்று யாரையும் எதிர்க்க தயங்கியதில்லை.
தனது கட்சி, தனது அரசியல் எதிர்காலம், தனது தனிமனித உறவுகள் என்று பாராமல் கவுண்டர் சமுதாயத்துக்கு ஒரு தீங்கு என்றால் வெகுண்டெழுந்து யாரையும் எதிர்க்கும் துணிச்சலும் உத்தம குணமும் கொண்ட கோவை செழியனால் நமது சமுதாயமும் ஆரோக்கியமாக வளர்ந்தது...