Pattali Makkal Katchi

Call Directions

Pattali Makkal Katchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pattali Makkal Katchi, Political organisation, 97/50 Bhraminar Street, Venguppattu Village, Sholinghur.

சேலம் மாநகரை ஹிட்லரின் இன அழிப்புமுகாமாக மாற்றுவதா? குப்பை எரிஉலைஅமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!பா.ம.க. தலைவர் மருத்...
19/09/2026

சேலம் மாநகரை ஹிட்லரின் இன அழிப்பு
முகாமாக மாற்றுவதா? குப்பை எரிஉலை
அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.

சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா, குப்பை எரியுலை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி சேலம் மாநகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.

குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.

மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.

இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அதன் பங்குக்கு சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் குப்பை எரிஉலை அமைக்கத் துடித்து வருகிறது.

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் கருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் இருந்தும் திடக்கழிவு குப்பைகள் சாலைவழியாக் கொண்டு வரப்பட்டு சேலம் குப்பை எரிஉலையில் எரிக்கப்படும். இவற்றில் 60% வரை ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் ஒரு பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்றாலும், பெரும்பகுதி நீர் நிலத்திலிருந்து தான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டத்தின் மீது மிகப்பெரும் அழுத்தம் ஏற்படும்.

சேலம் ஜாகிர்பாளையத்தில் ஏற்கனவே 119 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.800 கோடியில் அமைக்கப்படும் இந்த ஜவுளி பூங்காவில் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஒருபுறம் நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்படுவது மட்டுமின்றி, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு ஆகிய மூன்றையும் நஞ்சாக்கி விடும். அதே பகுதியில் தான் இப்போது குப்பை எரிஉலை அமைக்கப்படவுள்ளது என்பதால், அதையொட்டி 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர் ஆகியவையே புற்றுநோய், இதயநோய் என பட்டியலிட முடியாத எண்ணிக்கையில் நோய்களை ஏற்படுத்தி விடும். இவ்வளவு பேரழிவுகளையும் ரூ.291 கோடி மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டுமா? என்பது தான் பா.ம.க.வின் வினா.

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட யூதர்கள் ஜெர்மனியில் அமைக்கப்பட்டிருந்த கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரிஉலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தமிழர்கள் படுகொலையை தமிழக அரசுகண்டிக்கக் கூடாதா? சி.பி.ஐ விசாரணைநடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்!பா.ம.க. தலைவர் மருத...
19/08/2026

தமிழர்கள் படுகொலையை தமிழக அரசு
கண்டிக்கக் கூடாதா? சி.பி.ஐ விசாரணை
நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது கர்நாடகத்தின் சட்டம் - ஒழுங்கு சார்ந்த விவகாரம் என்பதால் அது குறித்து தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ எந்தக் கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கவும், சிபிஐ விசாரணை கோரவும் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘எந்த மாநிலமும் இன்னொரு மாநில நிர்வாகத்தில் தலையிட முடியாது. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது கர்நாடகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்பதால் அதில் தமிழக அரசு தலையிட முடியாது. தமிழ்நாடு அதன் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்; நாங்கள் எங்கள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதியில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சார்ந்த சிக்கல் என்று கூறுவதே இந்த விவகாரத்தை திசை திருப்பும் செயலாகும். காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒவ்வொரு நாளும் புதிய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி, மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சுநாத் ஆகியோர் வனத்துறையினரின் விளக்கத்தை ஏற்க மறுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.

3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து புத்தம் புதிய காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உயிரிழந்தவர்களில் ஒருவர் அணிந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு இருந்தால் புதிய காலணிகள் கரைபடாமல் இருக்க வாய்ப்பில்லை என காவல்துறை அதிகாரிகளில் சிலரே கூறியுள்ளனர். இந்த ஐயங்களை போக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க கர்நாடக அரசு முயல்கிறது. இத்தகைய தருணத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். இதை செய்யக் கூடாது என்று சொல்ல இந்தியா சர்வாதிகார நாடும் அல்ல... கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சர்வாதிகாரியும் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களோ, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களோ இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் தாக்கப்படும் போது அல்லது படுகொலை செய்யப்படும் போது, அதைக் கண்டிக்கவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தவும் பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீக மாநிலம் அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தமிழ்நாட்டு அரசும், மக்களும் கண்டித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் சிக்கலில் மத்திய அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டு. காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அதை தமிழ்நாடு கண்டித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 1991-92ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 05.01.1992-ஆம் நாள் கர்நாடகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற வரலாறு உண்டு.

கடந்த பத்தாண்டுகளில் கோவா மாநிலத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை தாக்கப்பட்ட போது அதற்கு கர்நாடக சட்டப்பேரவையே கண்டனம் தெரிவித்திருக்கிறது. 2008-ஆம் ஆண்டு மும்பையிலும், மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் பிகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட போது, அதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததும், அவர்களின் கோரிக்கையை ஏற்று மராட்டிய முதலமைச்சருக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதியதும் நடந்தது. அதனால், கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசவும், நீதிக்காக போராடவும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.

எனவே, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்று இனியும் நம்பிக் கொண்டிருப்பது தவறு ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.

பால் கொள்முதல் விலை ரூ.3  உயர்வுபோதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது7 ரூபாயாவது உயர்த்த வேண்டும்!பாமக தலைவர் மருத்துவர் அன...
19/08/2026

பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு
போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது
7 ரூபாயாவது உயர்த்த வேண்டும்!

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 36 ரூபாயாகவும், ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும்.

03/07/2026

மேட்டூர் அணையின் தற்போதைய நிலை.!

#காவிரிகாப்போம் #மேகதாதுஅணைதடுப்போம்

30/06/2026

காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!

தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.

காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.

சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.

அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!

உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!

#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்


26/06/2026

வாருங்கள் அன்புக்குரிய தமிழக மக்களே...

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.

காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.

மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?

இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!

#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்


மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்துக்குஉரிமை இல்லை என்பதா? கர்நாடகத்தின்சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்!பா.ம.க. தலைவர் ...
22/05/2026

மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்துக்கு
உரிமை இல்லை என்பதா? கர்நாடகத்தின்
சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் வெகுவிரைவில் தாக்கல் செய்து, அனுமதி பெற்று மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டுவோம் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். எந்தத் தேவையும் இல்லாமல் கட்டப்படும் மேகதாது அணையால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டிற்கு அத்திட்டத்தை எதிர்க்க உரிமையில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார்,‘‘ தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் வழங்க வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அதைக் கடந்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மேகதாது அணைக்கான புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது. அதை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்து, அனுமதி கிடைத்தவுடன் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும். அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப் பட்டு விட்டன’’ என்று கூறியிருக்கிறார். இது மேகதாது அணை சிக்கலை திசை திருப்பும் செயலாகும்.

காவிரி ஆறு என்பது காவிரி பாசனப் பகுதி உள்பட மொத்தம் 14 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் 14 மாவட்டங்களின் வேளாண்மையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் எனும் நிலையில் அதை எதிர்க்கும் முழு உரிமையும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு தான் உள்ளது. இன்னும் கேட்டால் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது; அதை உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது.

மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். இது தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க முடியாது என்று தான் கூறியதே தவிர, மேகதாது அணை திட்டத்தை தமிழகம் எதிர்க்க கூடாது என்று கூறவே இல்லை. இன்னும் கேட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படும் போது, தமிழ்நாடு அரசு அதன் எதிர்ப்பை பதிவு செய்யலாம்; அதையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உண்மைகளை மறைத்து விட்டு கர்நாடகம் பொய் பரப்புரை செய்வதை ஏற்க முடியாது.

மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் கூட விவாதிக்கக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஏனென்றால், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு பெறவே கூடாது என்பது தான் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சம் ஆகும். 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் இதை உறுதி செய்திருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தை கர்நாடகம் தாக்கல் செய்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இது தான் மிகவும் சரியான நிலைப்பாடு.

ஆனால், அதை மீறி, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததும், அதனடிப்படையில் கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியதும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செய்யப்பட்ட துரோகங்கள் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதன் அடிப்படையில் தான், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முந்தைய திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், அந்த வழக்கை திமுக அரசு சரியாக நடத்தாததால் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையே தமக்கு சாதகமான தீர்ப்பாக எடுத்துக் கொண்டு மேகதாது அணையை கட்டி முடிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சதி செய்கிறது.

70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரித்து விடும். அதன்பின், இப்போது கிடைக்கும் வெள்ள நீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. எனவே, இந்த சிக்கலில் கர்நாடக காங்கிரஸ் அரசின் சதித் திட்டங்களை விழிப்புடன் செயல்பட்டு தமிழக அரசு தடுக்க வேண்டும்.

அதற்காக, மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு புதிதாக தயாரித்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் பெற்றுக் கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

+2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தைஉயர்த்த அரசு பள்ளிகளை மேம்படுத்தும்வகையில் சிறப்புத் திட்டம் வேண்டும்!பா.ம.க. தலை...
08/05/2026

+2 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தை
உயர்த்த அரசு பள்ளிகளை மேம்படுத்தும்
வகையில் சிறப்புத் திட்டம் வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 0.17% அதிகமாக நடப்பாண்டில் 95.20% மாணவச் செல்வங்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காகவும், சிறந்த முறையில் உயர்கல்வி கற்பதற்காகவும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை என்னவென்றால், மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது, அரசு பள்ளிகளின் நிலை, தரம் ஆகியவை குறித்து, குறிப்பாக வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து பெரும் கவலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7536 மேல்நிலைப்பள்ளிகளில் 2639 பள்ளிகள், அதாவது 35% பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றில் மொத்தமுள்ள 3,152 தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 1854 பள்ளிகள், அதாவது 58.81% பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,168 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 489 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது 15.43% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் மிக மோசமாகவே இருக்கிறது. மாநிலத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 95.20% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 27 மாவட்டங்களின் சராசரி அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் இந்த அளவை எட்ட முடியவில்லை. ஈரோடு, சிவகங்கை, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், இராமநாதபுரம், நாமக்கல், தூத்துக்குடி, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 95%ஐ தாண்டியிருக்கிறது. எட்டு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 90%க்கும் கீழ் சரிந்திருப்பதும், அந்த மாவட்டங்கள் டெல்டா மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதும் கவலையளிக்கக் கூடியவை.

அதேபோல், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 10 இடத்தை பிடித்துள்ள விழுப்புரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தருமபுரி, மயிலாடுதுறை ஆகியவற்றில் 7 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், மீதமுள்ள 3 மாவட்டங்கள் காவிரி பாசன பகுதிகளையும் சேர்ந்தவையாகும். தேர்ச்சி விகிதத்தில் கடைசி 11 முதல் 15 இடங்களைப் பிடித்திருக்கும் திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகியவற்றில் 3 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டையும், நாகை மாவட்டம் டெல்டாவையும் சேர்ந்தவை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் வட தமிழகத்தை சேர்ந்தவை என்பதிலிருந்தே கல்வித்தரத்தில் வட தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை உணர முடியும்.

வட மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியிருப்பதில் ஆச்சரியமடையவும், அதிர்ச்சியடையவும் எதுவும் இல்லை. பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் சுமார் 45 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்கள் பின்தங்கியே தான் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களும் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கத் தொடங்கியுள்ளன.

பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்களும், அண்மைக்காலமாக காவிரி பாசன மாவட்டங்களும் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களை கண்டறிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களை நடத்துவதற்குக் கூட ஆசிரியர்கள் இல்லை. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தப் பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று செல்வது தான் இதற்கு காரணம்.

வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியரும், பட்டியல் சமூகத்தினரும் தான். அவர்களில் வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில் தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை. காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்; அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது. வாழ்வாதாரப்பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். இந்த சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு கண்டால் தான் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் வட தமிழ்நாடு பின்தங்கியிருப்பதற்கு முடிவு கட்ட முடியும்.

தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழ்நாடு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அவற்றின் கட்டமைப்புகளையும், மனிதவளத்தையும் மேம்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதை பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இனியாவது அதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் மறைவுக்கு அன்புமணி இராமதாஸ் இரங்கல்.சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியின் முன்ன...
27/04/2026

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் மறைவுக்கு அன்புமணி இராமதாஸ் இரங்கல்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவருமான பெ.கண்ணையன் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே இரு அமைப்புகளின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர் பெ.கண்ணையன் ஆவார். வன்னியர் இட ஒதுக்கீடு கோரி 1987&ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உள்பட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக போராடி பல முறை சிறை சென்றவர்.வன்னியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று மிகவும் திறம்பட செயலாற்றிய பெருமைக்குரியவர்.

2006&ஆம் ஆண்டு தாரமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணையன் அவர்கள், அத்தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும், சமூகநீதிக்காகவும் அவையில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பெ.கண்ணையன் அவர்கள், சம்பு முனிவர் நடத்திய யாகத்திலிருந்து வீர வன்னிய மகராஜா அவதாரம் எடுத்த பெருநாளான பங்குனி உத்திரத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர். என் மீது மாறாத அன்பும், பற்றும் கொண்டு இருந்தவர். அவரை சாமி என்று தான் நான் அன்புடன் அழைப்பேன். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பெ.கண்ணையன் இருந்தார். சில மாதங்களுக்கு முன் நான் சேலம் சென்றிருந்த போது என்னை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், எனக்கும் நீண்டகாலம் துணையாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பெ.கண்ணையன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Address

97/50 Bhraminar Street, Venguppattu Village
Sholinghur
631102

Telephone

919597572404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pattali Makkal Katchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share