05/03/2015
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது சங்கரன் கோயில். இக்கோயில் பெயரிலேயே இவ்வூரின் பெயரும் வழங்கி வருவது தான் இதன் சிறப்பு அம்சமாகும். இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். இக்கோயில் கி.பி.1022யில் உக்கிரப் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இங்கு சங்கரநாராயணர் சிறப்பு மூர்த்தியாக உள்ளார். இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டுள்ளது.
இக்கோயிலில் புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள் மற்றும் மண்ணை நீரில் கரைத்தும் சாப்பிடுகின்றனர். இதனால் கெடுபலன்கள் குறையும் என்று சொல்வார்கள். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் ஒன்றாக அருளுகின்றனர். இதனால் சிவாலய வழக்கப்படி விபூதி, குங்குமப் பிரசாதங்களோடு, விஷ்ணு கோயில் வழக்கம்போல் தீர்த்தமும் இங்கே உண்டு. மார்ச், செப்டம்பர் மாதங்களில், 21ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் சங்கரலிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது. சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.
சித்திரை, மார்கழி திருவிழாவின்போது சிவன், ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று தெப்பத்திருவிழா நடக்கிறது. ஐப்பசியில் திருக்கல்யாணவிழா மற்றும் ஆடி மாதம் ஆடித்தபசு விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.