31/10/2025
வெற்றியைக் கொண்டாடாமல் வெறுப்பு அரசியல் செய்யும் இந்துத்துவ அமைப்புகள்
வாலிபர் சங்கம் கண்டனம்
மகளிர் கிரிக்கெட் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்று வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கத்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நியூசிலாந்து ஆகிய 8 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்று கோப்பையை வெல்ல விளையாடினார்கள்.
இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் ஆதிக்கத்தை செலுத்தி அடுத்த சுற்றான அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியது. நான்காவது அணியாக இந்தியா கடுமையாக போராடி 3 வெற்றிகள், 3 தோல்விகள், 1 சம புள்ளி என பரபரப்பான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரையிறுதிக்கு முன்னேறியது .
இரண்டாவது அரை இறுதி போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தது. ஒரு பக்கம் 7 முறை உலக சாம்பியன் மற்றும் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, மறுமுனையில் இரண்டு முறை இறுதிப்போட்டிகளில் விளையாடி தோல்வியே சந்தித்த இந்திய அணி.
ஆகையால் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லாத உலகக் கோப்பை இரண்டாவது அரை இறுதி ஆட்டம் 30.10.2025 நவிமும்பையில் நடைபெற்றது.
டாஸ்சில் தோல்வி, 339 என்ற மிகக் கடினமான இலக்கு, நாக்அவுட்ஸ் ஜாம்பவான் ஆஸ்திரேலியா அணியோடா? வாய்ப்பே இல்லை இந்தியா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்கப் போகிறது என இரண்டாவது இன்னிங்ஸ்க்கு முன்பு வரை அனைத்தும் இந்திய அணிக்கு எதிரான சூழ்நிலைகளாகவே இருந்தது.
அதிரடி ஆட்டநாயகி சஃபாலி வர்மா துவக்கத்திலேயே ஆட்டமிழக்க, அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா 24க்கு பெவிலியன் திரும்ப; இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அணியின் கேப்டனும் அனுபவ வீராங்கனையுமான ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி கைகளில் இந்தியாவின் உலகக் கோப்பை கனவு சவாலாக வந்து சேர்ந்தது.
ஒருபுறம், அனுபவமும் நிதானமும் கலந்த பொறுப்பான ஹர்மன்பிரித் கவுரின் (89 ரன்) நிதானமான ஆட்டம். மறுபுறம் சொந்த ஊர் மைதானத்தில் (home ground) விளையாடும் இளம் திறமைசாலி ஜெமிமாவின் (127 ரன்) தொடர் விடாப்பிடியான வெற்றிக்கு ஆன போராட்டம். தொடர்ந்து தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமஞ்சோத் கவுர் ஆகியோரின் பங்களிப்பு என ஒற்றுமைக்கும் விடாமுயற்சிக்கும் வித்திட்ட அரை இறுதியின் வெற்றி, தேசத்தில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகளிர் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸ் என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மகத்தான சாதனைக்கும், வருகின்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை DYFI இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில குழு இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறது.
விளையாட்டில் வெறுப்பு அரசியல் விதைக்க அனுமதியோம்
விடாப்பிடியான மன உறுதியாலும், போராட்ட குணம் மிக்க ஆட்டத்தினாலும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீது சமூக வலைதளங்களில் வகுப்புவாத வலதுசாரி சக்திகளால் நிகழ்த்தப்பட்டு வரும் கேடுகெட்ட வன்முறையை இந்திய மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
பொதுவாக விளையாட்டுகளில் தனது வெற்றிக்கு தான் நம்பக்கூடிய கடவுள் காரணம் என்று வரலாற்றில் அனைத்து விளையாட்டுகளிலும் பல வீரர்கள் வீராங்கனைகளும் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்க, தான் நம்பக்கூடிய கடவுளின் பெயரை பயன்படுத்திய ஒரே காரணத்திற்காக ஜெமிமா கொல்லப்பட வேண்டியவர், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற மனிதத் தன்மையற்ற அளவுக்கு சங்கிகளால் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் ஒரு நபர் ஒரு படி மேலே சென்று மகாராஷ்டிரா பிஜேபி கட்சி முதல் கட்டமாக ஜெமிமாவை தாக்க வேண்டும் என்ற அளவிற்கு தனது வன்மத்தையும் மத துவேசத்தையும் எக்ஸ் வலைதளத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். பின்பு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டை நீக்கி கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
விளையாட்டை விளையாட்டாக, கூட்டு முயற்சியின் வெளிப்பாடாக பார்க்க தெரியாத ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, சங்பரிவார கும்பலின் இந்த மோசமான போக்கை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ் மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த காலம் தொட்டு ஜெமிமா அவர்களின் குடும்பமும் மத துவேசத்திற்கு பல ஆண்டுகளாக உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னரே விளையாட்டு வீரர்கள் முகமது அசாருதீன் துவங்கி முகமது சமி, சஃப்ராஸ் கான் என பலர் வகுப்புவாத கும்பலின் வன்முறைகளை அனுபவித்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீது தொடர்ந்து கருத்து தாக்குதல்களை நிகழ்த்தும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு உடனடியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவர்கள் மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜெமிமாவை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு தரப்பில் நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
வகுப்புவாத கும்பலிடம் இருந்து பல கோணத்தில் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்த ஆட்ட நாயகி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவர்களுக்கு DYFI எப்போதும் துணை நிற்கும்.
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்