21/04/2014
கடந்த வாரம், முதல்வர் ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியில் பிரசாரம் செய்யும் போது, "அன்னிய முதலீட்டில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2012 - 13ல், தமிழகம், 15,252 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை ஈட்டி உள்ளது. இதே காலத்தில், குஜராத்தில் வெறும், 2,676 கோடி ரூபாய் மட்டும், அன்னிய முதலீடாக பெறப்பட்டுள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில், தமிழகம், நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத், 11வது இடத்தில் உள்ளது' என்று, பல புள்ளிவிவரங்களை அடுக்கி, குஜராத் மாநில வளர்ச்சியை விமர்சனம் செய்தார்.
முதலில், இந்த அணுகுமுறைக்கு, நாம் தலை வணங்கி, முதல்வருக்கு, நம் பாராட்டை தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளோம். ஏனெனில் வளர்ச்சி குறித்த அரசியல், முன்னுக்கு வரும்போதெல்லாம், அதுகுறித்த வாதங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம், மற்ற மாநில முதல்வர்கள் மவுனம் சாதிக்கின்றனர், அல்லது சம்பந்தமில்லாத மதச்சார்ப்பின்மை அரசியலை பதிலாக தருகின்றனர். ஆனால், தமிழக முதல்வர், வளர்ச்சியை முன்மொழிந்து, "தமிழகம் தான், இந்தியாவிற்கு, ஒரு அளவுகோலாக திகழ வேண்டும்' என்று, வலியுறுத்தினார். தமிழகம், உண்மையிலேயே அளவுகோலாக இருந்தால் சந்தோஷம் தான். ஆனால், அப்படி இருக்கிறதா? முதல்வர் முன்வைக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் சரியா?
கடந்த, 2005 - 2012ல், இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதம், 8.5 சதவீதம். இதே காலகட்டத்தில், குஜராத் மற்றும் தமிழத்தின் வளர்ச்சி விகிதம், 10.25 சதவீதமாக இருந்தது. அதாவது, தேசிய அளவை விட அதிகம். ஆனால், 2012 - 13ல், தமிழகத்தின் வளர்ச்சி, 4.14 சதவீதமாக சரிந்தது. அதே ஆண்டு, தேசிய வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது. அதாவது, சராசரி தேசிய வளர்ச்சியை விட, தமிழகத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன?
கடந்த, 2012 - 13ல், தமிழகத்தில், வேளாண் துறை, வரலாறு காணாத சரிவை கண்டு
உள்ளது. திட்ட குழுவின் புள்ளிவிவரங்களின் படி, தமிழகத்தில், வேளாண் வளர்ச்சி, 12 சதவீதம் சரிவைடைந்து உள்ளது. இதை வளர்ச்சி என, கூறமுடியாது. வீழ்ச்சி என்று தான், கூறமுடியும்.
இதில் வியப்பான செய்தி என்னவென்றால், ஊடகங்களிலோ, எதிர்க்கட்சி பிரசாரங்களிலோ, இதுபற்றி விமர்சனங்கள் எழுவதில்லை. இதிலிருந்து, எதிர்க்கட்சிகளுக்கும் வேளாண்மை மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில், ஏறத்தாழ, 50 சதவீத மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இந்த துறை, 12 சதவீத சரிவை எட்டியது என்றால், இதை சார்ந்து உள்ள, 50 சதவீத மக்களின் வாழ்க்கையும் சரிவை தான், சந்தித்து உள்ளது. இதைவிட கொடுமை, 2013 - 14ல், தமிழகம் பெரும் வறட்சியை சந்தித்தது. இந்த வறட்சி, 50 சதவீத மக்களின் வாழ்க்கையை, தற்போதைய நிலையை விட, மேலும் மோசமான நிலைக்கு தான் தள்ளும். இந்த நிலைக்கு காரணம், "அண்டை மாநிலங்களின் பிடிவாத போக்கு' என, தமிழக அரசு கூறும்.
ஆனால், நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அங்கும் அரசியல்வாதிகள் உண்டு. அவர்களும், தண்ணீரை வைத்து தான், அரசியல் செய்கின்றனர். அதனால், கர்நாடகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்புவது, தமிழர்களின் வெகுளித்தனம்.
கிடைக்கும் நீரையாவது சரிவர பயன்படுத்துகிறோமா என்றால், 80 சதவீத காவிரி நீரை வங்க கடலில் தொலைத்து வருகிறோம். இந்த தவறை தான், குஜராத் செய்யவில்லை. குஜராத்தில், மாநிலம் தழுவிய கால்வாய்கள் மற்றும், 1.50 லட்சம் சிறு அணைகள் அமைக்கப்பட்டு, தண்ணீரை, ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் சென்று உள்ளனர்.
இதன் காரணமாக, பாலைவனமாக இருந்த குஜராத்தில், 2005 - 13ல், வேளாண் வளர்ச்சி விகிதம், 8.50 சதவீதத்தை எட்டியது. இது, தேசிய சராசரியை விட, மூன்று மடங்கு அதிகம். இதற்கு எடுத்துக்காட்டு, குஜராத்தின் பருத்தி உற்பத்தி.
கடந்த, 2002ல், 20 லட்சம் பொதிகளாக இருந்த பருத்தி உற்பத்தி, தற்போது, 1.20 லட்சம் பொதிகளாக விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதனால் மட்டுமே, சர்வதேச பருத்தி சந்தையில், இந்தியா ஒரு மாபெரும் சக்தியாக மாறி உள்ளது. இதன் அடிப்படையில், நூல், துணி, ஜவுளி தொழில்களை உருவாக்கி, ஏற்று
மதிக்கு ஒரு பெரிய திட்டத்தை மோடி வகுத்து உள்ளார். இதற்காக, மற்ற மாநில ஜவுளி வர்த்தகர்களையும் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.
சுருக்கமாக சொன்னால், விவசாயத்தில் இருந்து, பெரிய வியாபாரம்; உள்நாட்டு சந்தையில் இருந்து, வெளிநாட்டு சந்தை என்பது தான் மோடியின் பார்வை. குஜராத்தின் உற்பத்தி துறை, 2005 - 13ல், 10.50 சதவீதம் விகிதத்தில் வளர்ந்தது. இதே காலகட்டத்தில், தமிழகத்தில், 9.50 சதவீதமாகவும், இந்தியாவில், 7.50 சதவீதமாகவும் வளர்ச்சி விகிதம் இருந்தது. குஜராத்தின் அசுர வளர்ச்சிக்கு, இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தடையில்லா மின்சாரம். மற்றொன்று, அனைத்து பணிகளையும், அனைவருக்கும் பகிர்ந்தளித்தல்.
இதற்கு, நேர்மாறாக, கடந்த ஐந்து ஆண்டு களாக, தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி காலம் என, பாரபட்சம் இல்லாமல், தமிழகம், மின்வெட்டின் பிடியில் உள்ளது. இது, முதலீடுகளுக்கு தடையாக உள்ளது என்பதை, 2011-12ல், 6.6 சதவீதமாக இருந்த உற்பத்தி துறை வளர்ச்சி, 2012-13ல், 5.40 சதவீதமாக குறைந்தது,
எடுத்துக்காட்டுகிறது. மேலும், இரு திராவிட கட்சிகளின் பாரம்பரியத்தை எடுத்து பார்த்தோமானால், முடிவு எடுக்கும் அதிகாரம், முதல்வரிடத்தில் மட்டும் தான் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில், மந்திரி சபை ஒரு ஆடம்பர பொருள் தான். தி.மு.க., ஆட்சியிலும் மந்திரி சபை பெரிய அளவிற்கு முடிவு எடுக்கவில்லை. அதிகாரத்தை மையப்படுத்தும் இந்த போக்கு, தமிழகத்தின் வளர்ச்சியை, பெரிய அளவிற்கு பாதித்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா கூறியது போல், மனித வளர்ச்சி குறியீடு, தமிழகத்திற்கு சாதகமாக தான் இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இந்தியாவில், அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்கள் தமிழகமும், கேரளாவும் தான். அதேபோல், சில வல்லுனர்கள், "சமூக நீதி வழங்குவதில், குஜராத்தை விட, தமிழகம் பெரும் அக்கறை காட்டுகிறது' என, கூறுகின்றனர். ஆனால், அவர்கள் அப்படி கூறும்போது, முக்கியமான விஷயத்தை மறந்து விடுகின்றனர். மோடி, ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியை சார்ந்தவர். மேலும், அவர், தேநீர் கடையில் பணி புரிந்து தான், இன்றைக்கு, உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். மோடி, சமூக நீதியின், ஒரு சிறந்த எடுத்துக் காட்டு அல்லவோ? இதை ஏன், தமிழக அறிவுஜீவிகள் மறந்து விடுகின்றனர்?
தமிழகத்தில், சமூக நீதி ஏற்பட்ட காலங்கள் போய், இன்றைக்கு, வெறும் கோஷமாக திகழ்கிறது. இங்கு, ஜாதி சான்றிதழ் வாங்கு வதற்கு கூட குறைந்தபட்சம், 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் அல்லது ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். "சமூக நீதி இல்லாத' குஜராத்தில், ஒரே நாளில், லஞ்சம் இல்லாமல் வாங்க முடியும். ஜாதி சான்றிதழ் மட்டுமல்ல, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற அரசு சான்று களை உடனுக்குடன் பெற முடியும். இதை, திராவிட கட்சிகள் சமூக நீதியில் சேர்த்து கொள்வார்களா அல்லது, இதை எல்லாம் சமூக நீதியே இல்லை என்று வாதாடுவார்களா? முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்காட்டிய புள்ளி விவரங்கள் குறித்து, அவருக்கு ஆலோசனை சொன்னவர்கள், நிச்சயமாக முதல்வரின் விசுவாசிகள் அல்ல. காரணமும், உதாரணமும்: "தமிழகத்தில், 11 சதவீதம் மக்களே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். குஜராத் மாநிலத்தில், 17 சதவீதம் பேர் உள்ளனர்' என, முதல்வர் கூறினார். ஆனால், திட்டக்குழுவின், புள்ளி விவரங்கள் வேறு மாதிரியாக உள்ளன. அதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ், குஜராத்தில், 17 சதவீதம், தமிழகத்தில், 22 சதவீத மக்கள் உள்ளனர். அதாவது, தமிழகத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள், குஜராத்தை விட அதிகம்.
ஒருவேளை, முதல்வர் தெரிவித்தது போல், 11 சதவீத தமிழர்கள் மட்டும், வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால், ஏழ்மையில் வாடும் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு, 64 ஆயிரம் ரூபாயை அரசு செலவழிக்கிறது! ஆம், முதல்வரின் கணக்குப்படி, 77 லட்சம் ஏழைகள், 50 ஆயிரம் கோடிக்கு மானியங்களும், இலவசங்களும். வகுத்துப் பாருங்கள். இப்படி தாராளமாக செலவழித்தால், நியாயமாக, அவர்கள் ஏழைகளாகவே இருக்கக்கூடாது. கணக்கு எங்கேயோ இடிக்கவில்லையா?
இதில், வியப்பான விஷயம் என்னவென்றால், ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய்க்கு, உணவு மானியம் வழங்கும், தமிழக அரசு, "டாஸ்மாக்' மூலம், 25 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கிறது. அதாவது, ஏறத்தாழ, 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடித்து, 5,000 கோடி ரூபாய் மானியம் பெறும், பொருளாதார அதிசயம், தமிழகத்தில் தான் நடக்கிறது. குஜராத்தில், டாஸ்மாக் மதுபான கடையும் இல்லை; இலவச அரிசியும் இல்லை. இதை தான், "ஒரு தனி மனிதனுக்கு, ஒரு அரசு, தினமும், ஒரு மீன் கொடுக்கலாம். அல்லது மீன் பிடிக்க கற்று கொடுக்கலாம்' என்று, ஒரு சீன பொருளாதார நிபுணர் சுருக்கமாக கூறினார்.
திராவிட கட்சிகள், ஒவ்வொரு நாளும், தமிழர் களுக்கு, ஒரு மீன் துண்டு போடுவது தான், தங்கள் கடமை என்று நம்புகின்றன. இதை சுற்றி தான், அவர்களின் சிந்தனை மற்றும் கொள்கை சுழல்கிறது.
ஆனால், இதற்கு நேர்மாறாக, குஜராத் முதல்வர் மோடி, ஒரு தனி மனிதனுக்கு, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது தான், அரசின் முதல் கடமை என்று, நம்புகிறார். அதனால் தான், அவர், கட்டுமான பணிகள், மின்சாரம், சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் இலவசத்திற்கு இடம் இல்லை. ஆனால், குஜராத் மக்களை வசப்படுத்தி, இன்று, தேசிய அளவில், குஜராத்தின் வளர்ச்சியை, முன்மாதிரிஆக திகழ வைக்கிறார். தமிழர்கள், இலவச மீனை விரும்புவார்களா அல்லது, மீன் பிடிக்க ஆசைப்படுவார்கள? இதை, வரும் 24ம் தேதி தேர்தல் வெளிப்படுத்தும்.