09/09/2020
▼
மோர்தானா அணை நிரம்புகிறது! மக்களே உஷார்!!கலெக்டர் எச்சரிக்கை!!!
கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே உள்ள மோர்தானா அணை நிரம்பி வருவதால் அணையை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா கிராமம், கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே உள்ள மோர்தானா அணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா கிராமம், கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை 1990-ஆம் வருடம் பணிகள் தொடங்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டது.
கௌண்டன்யா ஆறு ஆந்திரமாநிலம் புங்கனூரிலிருந்து பலமநேர் வழியாக 25 கி.மீ தூரத்தை கடந்து தமிழக எல்லையான சைனகுண்டா கிராமத்தை வந்தடைகின்றது.
இந்த அணையானது 11.50 மீட்டர் உயரத்தில் நீரை தேக்கிவைக்கும் வகையிலும் 261.36 மில்லியன் கனஅடி கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் 19 ஏரிகள் மூலமாகவும் மற்றும் நேரடிபாசனமாகவும் 8367 ஏக்கர் நிலங்களும், 49 கிராமங்களும் பயன்பெறுகின்றன.
07.09.2020 அன்று பெய்த கனமழையால் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் இன்று(09.09.2020) அணையின் நீர் மட்டம் 10.20 மீட்டர், அதன் கொள்ளளவு 223.071 மில்லியன் கனஅடி உள்ளது.
மேலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மோர்தானா அணை முழு கொள்ளவை விரைவில் எட்டவாய்ப்புள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ள நிலையில் ஆற்று கரைப்பகுதியில் உள்ள மோர்தானா, கொட்டாரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, ஆண்டகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூர், முங்கப்பட்டு, சீவு+ர், குடியாத்தம் நகரம், இந்திராநகர், ஒலக்காசி, சித்தாத்தூர் மற்றும் ஐதர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்துறை மூலம் தண்டோரா மூலம் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து மோர்தானா கிராமம் பொதுமக்களிடம் தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் சேமிப்பு குளம் அமைத்தல் போன்ற பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகளான வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீர்வள ஆதாரம் எம்.சண்முகம், உதவி செயற்பொறியாளர் டி.குணசீலன், உதவி பொறியாளர் எம். தமிழ்செல்வன், வட்டாட்சியர் திருமதி. வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, திருமதி. ஹேமலதா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.