24/12/2024
பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகத்தைத் தரைமட்டமாக்கிய `ஈரோட்டுப் பூகம்பம்’ தந்தை பெரியாரின் 51-ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.
அவர் இறந்து அரை நூற்றாண்டு ஆனாலும் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே இன்று பெரியாரின் தேவையை உணர்ந்து, அவர் கொள்கைகளைப் பேசுகிறது. சாதிய, மதவாத, ஆணாதிக்கச் சக்திகளோ பெரியாரின் பெயரைக் கேட்டாலே அலறுகின்றன. `நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், அவர்தான் பெரியார்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை மனதில்கொண்டு, பெரியார் கொள்கைகளைப் பரப்புவதிலும் அதைச் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்துவதிலும் எப்போதும் முனைப்புடன் இயங்குகிறது, நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதை திருமணத்துக்கு, சட்ட அங்கீகாரம் தந்தார் பேரறிஞர் அண்ணா.
பெண்களுக்குச் சொத்துரிமை, இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்துதல், அருந்ததியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள் இட ஒதுக்கீடு, உள்ளாட்சிப் பொறுப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாகப் பெண்களையே நியமித்தது,
பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள், அந்தச் சமத்துவபுர வீடுகளின் பட்டாக்களைப் பெண்கள் பெயரிலேயே வழங்குதல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்துக்குக் கல்வித் தகுதியை நிர்ணயித்ததன் பெயரில், பெண் கல்வியை ஊக்குவித்தல், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரல்களை எதிரொலிப்பது என்ற தந்தை பெரியார் கொள்கைகளின் அடிப்படையில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என்று விளிம்புநிலைச் சமூகத்தின் நலன்களில் அக்கறை செலுத்தியது என்று பெரியார் வழி நின்று ஆட்சி புரிந்தார், முத்தமிழறிஞர் கலைஞர்.
`பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமலே புதைக்கிறோம்’ என்று `அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ பற்றிக் குறிப்பிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த முள்ளை அகற்றி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிக் காட்டியதுடன் `புதுமைப்பெண்’, ‘விடியல் பயணம்’, ‘ கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்று பெண்களின் கல்வி, பொருளாதார உயர்வுக்கான திட்டங்களைக் கொண்டுவந்தது, `பெரியார் மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை சமூகநீதி நாள்’, `சமத்துவநாள்’ என்று அறிவித்தது, `அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’, `காலை உணவுத்திட்டம்’, `தமிழ்ப்புதல்வன் திட்டம்’, பெரியாரின் அறிவியல் பார்வையை வலியுறுத்தி, கலைஞர் கொண்டுவந்த `டைடல் பார்க்’கைத் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் பரவலாக்குவது என்று பெரியார் வழியில் சிறிதும் விலகாது, திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார், நம் கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத்தலைவர் வழியில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக்கூட்டங்களை நடத்துவது, திராவிட இயக்க வரலாற்றை எடுத்துச் சொல்ல `முரசொலி பாசறைப் பக்கம்’, `முத்தமிழறிஞர் பதிப்பகம்’, `என் உயிரினும் மேலான’ கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, பெரியார் வழியில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்று `பெரியார் பணி’ தொடர்கிறார், நம் கழக இளைஞர் அணி செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. Udhayanidhi Stalin அவர்கள்.
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் என்ற பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்போம். `எல்லோருக்கும் எல்லாம்’ என்ற பெரியாரின் கனவை நனவாக்குவோம்!