14/03/2015
"மொழிப்போர் ஈகி" மயிலாடுதுறை *சாரங்கபாணி* தீயில் தன்னுயிர் ஈந்த நாள் 15.3.1965 (நாளையதினம் நினைவு நாள் )
இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை, தமிழன்னைக்கு எனது உயிரை துறக்கிறேன்… இப்படி இறுதியாகக் கூறி தனது இறுதி மூச்சையடக்கியவன் மாணவக்கண்மணி சாரங்கபாணி. அப்போது அவனுக்கு வயது 20. மயிலாடுதுறையில் உள்ள மருதவஞ்சேரியில் 1945ஆம் ஆண்டு பிறந்தான். சனவரி 26ஆம் நாளன்று தொடங்கிய இந்தி எதிர்ப்புப்போரில் தமிழர்கள் அடங்காது ஆர்ப்பரித்தனர். 50 நாட்கள் தாண்டியும் தீயின் நாக்குகளுக்கு தன்னுயிரை தின்னக் கொடுத்த வண்ணம் இருந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவக்கண்மணி இராசேந்திரன் துப்பாக்கிக் குண்டை தன்னுடலில் ஏந்தி மடிந்தான். அது முதல் மாணவர்களின் கோபம் அடங்க மறுத்தது. இந்தக் கோபம் மாணவக்கண்மணி சாரங்கபாணியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் இளங்கலை. முதலாமாண்டு படித்து வந்தான். தமிழ்மொழி காக்க தன்னுடலில் மண்ணெண்ணெயை ஊற்றி உயிர் துறப்போம் என்று முடிவுக்கு வந்தான். அப்போது மற்றவர் நம்மை காப்பாற்றி விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தான்.
ஒரு மரத்தின் கீழ் நின்று உடல் நனையும்படி மண்ணெண்ணெயை ஊற்றினான். பிறகு தான் கொண்டு வந்திருந்த கயிற்றைக் தன்காலில் கட்டினான். கயிற்றின் மறுபகுதியை மரத்தில் கட்டினான். பிறகு தலை கீழாக தொங்கிக் கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்டு தனது உடலுக்கு தீ வைத்தான். உடல் முழுக்க எரிந்தது. சிறிது நேரத்திலேயே மரணம் அவனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டது.
சாரங்கபாணியின் தாயார் மண்ணில் உருண்டு என் மகனின் சாவிற்கு காரணமானவர்கள் நாசமாய் போகட்டும் என்று அழுது புலம்பினார். அதன் பிறகு நடந்த தேர்தலில் பேராயக்கட்சி தோற்று நாசமான கதை அறிவோம்.
42 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரி வளாகம் அருகில் சாரங்கபாணி நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. சாரங்கபாணி ஈகத்தை இந்நினைவுநாளில் மாணவர் சமூகம் நினைவு கூறி போற்ற வேண்டும்!
நன்றி: Ingersol Selvaraj