12/07/2013
plz pry fr thm..
தூத்துக்குடி.ஜூலை.13 - தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த இடத்தில் மதுரையை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலியாயினர். மதுரை திருநகரில் உள்ள சி.எஸ்.ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர் 42 பேர், மாணவியர்கள் 71 பேர் என மொத்தம் 113 பேர் இரண்டு பஸ்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். இதில் ஆசிரியர்கள் ஹரிகுமார், கார்த்திக், ஆசிரையைகள் தீபா, கிறிஸ்டி, செல்வராணி ஆகியோரும் இந்த பஸ்ஸில் வந்துள்ளனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் வந்து அங்கு கப்பல்களை சுற்றி பார்த்துள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகம் கடற்கரைக்கு சென்றுள்னர். அப்போது மாணவர்கள் கடலில் குளித்துள்ளனர். அப்போது கடற்கரையிலிருந்து 50 அடி தூரத்தில் கடலுக்குள் நங்கூரம் பாய்ச்சு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் 6மாணவர்கள் ஏறியுள்ளனர். பின்னர் அவர்கள் கடலுக்குள் டைவ் அடித்து விளையாடியுள்ளனர். அப்போது பலத்த காற்று காரணமாக கடலில் சுழி ஏற்பட்டுள்ளது. இதனால் எழும்பிய ராட்சத அலையில் 6 பேரும் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனைப் பார்த்த கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பிற மாணவர்கள், இந்த 6 பேரையும் காணவில்லை என கூச்சலிட்டனர். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், துறைமுகம் மற்றும் தெர்மல் நகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கடலுக்குள் மூழ்கிய 6 பேரையும் தேடும் முயற்சியில் ்ஈடுபட்டனர். இதில் 2 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறிது நேரத்திற்கு பின் 3 மாணவர்கள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். அவர்கள் மதுரை எஸ்ஆர்வி நகர் முருகன் மகன் சதீஷ்குமார் (17), திருநகர் ஜோசப் நகர் ராதாகிருஷ்ணன் மகன் விஷ்ணுதரன் (17), களிக்கன்குளம் ஐயர் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் தேவ் ஆனந்த் ஆகிய3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கடலுக்குள் மூழ்கிய மதுரை திருநகரைச் சேர்ந்த சரவணன் மகன் பரமேஷ்வரன் என்பவரை தீயணைப்பு படையினர், சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் விசைப்படகில் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் சக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பிற மாணவர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பிற மாணவ, மாணவியர்கள் அனைவரும் துறைமுக சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலியான மாணவர்களின் உடலை பார்த்து சக மாணவ, மாணவியர்கள் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தினை மாவட்ட எஸ்பி துரை, துறைமுகசபை தலைவர் நடராஜன், டிஎஸ்பி பெஸ்கி, மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு ஆறுதல் கூறினர். துறைமுகசபை நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், சக மாணவர்களை இழந்த சோகத்தில் சாப்பிட மறுத்துவிட்டனர்.