Anti Imperialist Movement-AIM [ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்]

  • Home
  • India
  • Madurai
  • Anti Imperialist Movement-AIM [ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்]

Anti Imperialist Movement-AIM [ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்] உண்மையான சுதந்திரமும், ஜனநாயகமும் க?

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உலக முதலாளித்துவ நெருக்கடிச் சுமைத் திணிப்பான உலகமயமாக்கல் கொள்கைகளையும், அனைத்து விதமான ஒடுக்குமுறையையும், மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதையும் எதிர்க்கின்றது. மக்களின் நீதியான, நேர்மையான போராட்டங்களின் மூலம் எல்லாவகையான ஏகாதிபத்தியச் சுரண்டல் வடிவங்களையும், இறுதி முடிவுக்கு கொண்டு வரவும், உண்மையான சுதந்திரமும், ஜனநாயகமும் கொண்ட சுயசார்பு இந்தியாவைப் படைக்கவும் திடம் கொண்டுள்ளது.

மனிதன் பதிப்பகம் _ த்தின் தோழர் அறிவொளி அவர்கள் சற்று முன்  இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்துடன் தெரிவித்து கொள்கிறோம்...
01/02/2026

மனிதன் பதிப்பகம் _ த்தின் தோழர் அறிவொளி அவர்கள் சற்று முன் இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழருக்கான இறுதி நிகழ்வுகள் இந்த பதிவோடு இணைக்கப்பட்டுள்ள முகவரியான சிதம்பரத்தில் உள்ள அவரது சொந்த ஊரில்நடைபெறும்

 #வெண்மணி_நினைவு_தின_சாதி_சடங்கு_மறுப்பு_முற்போக்கு_இணையேற்பு_நிகழ்வுஅன்பார்ந்த உழைக்கும் மக்களே! வணக்கம். தமிழக வரலாற்ற...
28/11/2025

#வெண்மணி_நினைவு_தின_சாதி_சடங்கு_மறுப்பு_முற்போக்கு_இணையேற்பு_நிகழ்வு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

வணக்கம். தமிழக வரலாற்றில் அழியா வடுவையும், உழைக்கும் மக்களின் நீதியையும், மாபெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய கிராமத்தின் பெயர் கீழ்வெண்மணி. அங்கு விவசாய கூலிகளான தலித் மக்கள் பண்ணையார்களால் கொடூரமாக சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர். இதற்கு எதிராக அம்மக்கள் திராவிட இயக்கம் மற்றும் செங்கொடி இயக்கத்தின் கீழ் சங்கமாய் அணிதிரண்டனர். 1968 ம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைபடி நெல்லை கூலி உயர்வாகக் கேட்டு விவசாய கூலிகளான தலித் மக்கள் போராடினர். தன்னிடம் அடிமைகளாக இருந்த இந்த ஏழை தலித்துகள் தன்னை எதிர்த்து போராடியதையும் பொதுவுடைமைச் சங்கத்திலும் திராவிட இயக்கத்திலும் சங்கமாய் இணைந்து அவனை எதிர்த்து நின்றதையும் ஏற்க முடியாத பண்ணையார் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு மக்களின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஒடுக்கி வந்தான்.

ஆனால் பண்ணையடிமைகளாக இருந்த உழைக்கும் மக்களோ அன்றைய பொதுவுடைமை கட்சியிலும் திராவிட இயக்கத்திலும் தங்களை தீவிரமாக இணைத்துக் கொண்டு சுயமரியாதையோடும், நெஞ்சுறுதியோடும் சங்கமாய் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கூலி விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் கோழைத்தனமாக பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடுவோ, ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் கட்சி கூட்டத்திற்கு சென்றுவிட்டதை அறிந்து 1968 டிசம்பர் 25 அன்று தன் அடியாட்களை ஏவி கண்மூடித்தனமாக மக்களை தாக்கினான். தங்களை தற்காத்துக் கொள்ள அக்கிராமத்தின் கடைசி குடிசையான இராமையாவின் குடிசைக்குள் 19 குழந்தைகள், 20 பெண்கள், 5 வயதானவர்கள் என 44 பேர் தஞ்சம் புகுந்தனர். ஆனால் சாதிவெறியன் கோபாலகிருஷ்ண நாயுடுவோ 44 பேரையும் துள்ளத் துடிக்க உயிரோடு அந்தக் குடிசையில் எரித்துக் கொன்றான். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சாதிவெறியன் கோபால கிருஷ்ண நாயுடுவை "பணக்காரன் எப்படி தவறு செய்வான்" எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஆனால் மாபெரும் கொடூரத்தை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த சாதிவெறியன் கோபாலகிருஷ்ண நாயுடுவை அன்றைய நக்சல்பாரி தோழர்கள் சரியாக 12 ஆண்டுகள் கழித்து 1980ல் அதே டிசம்பர் மாதத்தில் 14 ம் தேதி வெட்டிக்கொன்றனர். அவன் உடலில் 44 வெட்டுக்கள் இருந்தன. "கொடூரமாக கொல்லப்பட்ட 44 உயிர்களுக்கு இது தான் மக்கள்மன்றத்தின் நீதி" என்று தங்களின் துண்டறிக்கையை இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனின் பிணத்தின் அருகில் வீசி சென்றனர்.

ஆண்டுகள் பல கடந்த போதிலும் கூலி உயர்வுக்கான போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. மேற்கண்ட நிலைமைகள் தற்போதும் நவீன வடிவில் அதே தலித் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு நிகழ்ந்து வருவது அவலத்திற்குரியதாகும். தமிழகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் கூட அரசு அறிவித்த சம்பள உயர்வையே கூட அரசு வழங்குவதில்லை. நாம் வாழ்ந்துவரும் இருபதாம் நூற்றாண்டில் சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ஏவுகணை அனுப்பும் அளவிற்கு வளர்ந்த விஞ்ஞான வளர்ச்சி இருந்தும் கூட கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க எந்த வகையிலும் அதை பயன்படுத்த ஆளும் வர்க்கம் நினைப்பதில்லை. சென்னையில் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட வேலையை திரும்பத்தரக் கோரி கடந்த 100 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். தற்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் திமுக அரசோ அவர்களை குப்பைகளாக தூக்கி எறிந்து இராம்கி போன்ற கார்ப்பரேட்களுக்கு சேவை செய்கிறது.

தலித் மக்களை குலத்தொழில் முறையிலிருந்து மீட்பதற்காகத்தான் தூய்மைப்பணிகளை தனியாருக்கு அரசு தாரைவார்க்கிறது என்று சிலர் தனியார்மயத்தை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் உண்மையிலேயே அரசிற்கு சமூக அக்கறை இருந்தால் அரசின் வேறு துறைகளில் அம்மக்களுக்கு மாற்றுப்பணி வழங்கியிருக்க வேண்டும். தூய்மைப்பணி முழுக்க இயந்திரமயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஒருபுறம் பாசிச-பாஜக அரசின் மோடி-ஷா கும்பல் தண்டகாரண்ய காடுகளில் உள்ள கனிமவளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க ஆப்ரேஷன் ககாரை நடத்திக்கொண்டுள்ளது. தன் தாயின் மார்பில் பால் அருந்திக்கொண்டிருந்த மங்லி என்ற 6 மாத பிஞ்சுக் குழந்தையை சுட்டுக் கொன்று விட்டு மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என கொக்கறிக்கிறது. சொந்த நாட்டு பழங்குடி மக்கள் மீது இராணுவமும் சிறப்புப் படைகளும் இரத்தவெறிபிடித்த போரை தொடுத்து வருகிறது. மறுபுறம் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு பரந்தூர் விமானநிலையத்திற்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழிக்க அனைத்து வேலைகளையும் துரிதமாக செய்து கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து வருடக் கணக்கில் போராடிவரும் பரந்தூர் விவசாய மக்களை காக்கி படைகளை ஏவி ஒடுக்கி வருகிறது. ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட தாராளமய-தனியார்மய-உலகமய கொள்கைகளே இது போன்ற நம் மக்கள் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் முதன்மை காரணமாக உள்ளது.

18 வயது நிரம்பியவர்கள் இந்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் பக்குவம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் காதலியை/ காதலரை திருமணம் செய்து கொள்வதென்பது இந்த சாதிய சமூகத்தில் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. சாதிமறுப்பு, மதமறுப்பு திருமணம் செய்பவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்படுவதும், ஒரே சமூகமாக இருந்தாலும் வர்க்கம் கடந்து காதலிப்பவர்கள் கொடூரமாக கொல்லப்படுவதும் அன்றாட செய்திகளாகவே உள்ளன. இத்தகைய "ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்" என பல்வேறு போராட்டங்கள் நடந்த போதும் இன்றுவரை தமிழ்நாட்டின் சமூகநீதி அரசால் அச்சட்டம் இயற்றப்படவில்லை. இதற்காக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டாலும் அது நம்பகத்தன்மையற்றதாகவே உள்ளது. ஏனெனில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மற்றும் நாங்குநேரி பள்ளி மாணவர்களின் சாதிவெறிக்கு எதிராக நீதிபதி சந்துரு தலையிலான ஆணையத்தின் அறிக்கை என இரண்டுமே தலைமை செயலகத்தில் தூங்கி கொண்டிருக்கின்றது. திமுக அரசு இவ்விரு ஆணையத்தின் பரிந்துரைகளையும் குப்பைகளாக தூக்கி எறிந்து விட்டது என்பதே நிதர்சனமாக உள்ளது.

ஆக நம் மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய இத்தகைய சூழலில் இன்றைய பார்ப்பனிய, சாதிய, நிலவுடைமைச் சமூகத்தில் கீழ்வெண்மணி தியாகிகளையும் அவர்களின் எஃகுறுதியுடனான வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடிப்பதும், சாதி சடங்கு மறுத்த முற்போக்கு இணையேற்புகளை முன்னின்று நடத்துவதும் இன்றியமையாதது. அதன் ஒரு பகுதியாக நடைபெறும் சாதி சடங்கு மறுப்பு முற்போக்கு இணையேற்பான இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள தோழமையோடு அழைக்கிறோம். சமத்துவ சமூகம் படைக்க சாதி ஒழிப்பை, ஆணாதிக்க ஒழிப்பை சாத்தியமாக்க, வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிக்க தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்புவோம். தாராளமய-தனியார்மய-உலகமய கொள்கைகளை எதிர்த்து நிற்போம்.

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு, சாதி ஒழிப்பு வர்க்க போராளிகளுக்கு செவ்வணக்கம்!

பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் உள்நாட்டுப் போரான ஆப்ரேஷன் ககாருக்கு எதிராக குரல் கொடுப்போம்!

சாதி ஒழிப்பை சாத்தியமாக்க வர்க்க போராட்டத்தை உயர்த்தி பிடிக்க கீழ்வெண்மணி நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் (AIM)
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் (SUMS)

9047035824 / 9488718431 / 7200568403

06/03/2024
 #மோடியின்_இன்னொரு_மோசடி_வித்தை: ிகித_இட_ஒதுக்கீடு_மோசடிமோடியின் 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற அதிரடி அறிவிப்பு  இந்திய அரச...
09/11/2022

#மோடியின்_இன்னொரு_மோசடி_வித்தை:
ிகித_இட_ஒதுக்கீடு_மோசடி
மோடியின் 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற அதிரடி அறிவிப்பு இந்திய அரசியல் அரங்கில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி பல்வேறு விதமான விவாதங்கள் இன்றுவரையிலும் நடைபெற்று வருகின்றன. மோடி வழங்கியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை பொருளியல் ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் கதையளக்கிறது. இதை "சமூகநீதிப் போராளி" மாயாவதி முதல் "வர்க்கப் போராளி" எச்சூரி வரை ஆதரிக்கின்றனர்.
மோடியின் ஒதுக்கீடு முன்னர் இடஒதுக்கீட்டை பெற்றிராத உயர்சாதியினருக்குத் தான் வழங்கப்படுகிறது. முன்னர் இட ஒதுக்கீட்டை பெற்றிராத உயர்சாதியினருக்கான (மேல் சாதியினர்) இடஒதுக்கீடு என்பதில் சாதிதானே அடிப்படையாக உள்ளது. இதன் பொருள் என்ன? இது மேல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு என்பது தானே? இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய 90 சதவிகித மக்களை இந்த இட ஒதுக்கீடு புறக்கணிக்கிறது. அப்படி இருக்கையில், இதை பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்று கூறுவது ஒரு மோசடி அல்லவா?
ஆண்டு வருமானம் 8 லட்சமும், ஐந்து ஏக்கர் நிலமும், ஆயிரம் சதுர அடிதான் வீடும் இதற்கான உச்சவரம்புகளாக மோடி அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை அரசாங்கம் அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்கான வரம்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கிராமப்புறத்தில் 32 ரூபாயும், நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் வருமானம் பெறுவது தான் வறுமைக் கோட்டின் உயர் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மோடியின் 10 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கானது என்பது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் என்பது நமக்குப் புரியும். சாதாரணமாகப் பார்த்தால் கூட எட்டு லட்ச ரூபாய் வருமானம் வாங்குபவரும், ஐந்து ஏக்கர் நிலம் உள்ளவரும், ஆயிரம் சதுரஅடி வீடு கட்டிக் கொண்டுள்ளவரும் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்கள் என்று கூறுவது இந்தியாவில் உள்ள ஏழை மக்களை கேலி செய்வது அன்றி வேறல்ல. எனவே, மோடியின் மேல் சாதிகளுக்கான இட ஒதுக்கீடு பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கானது அல்ல என்பது தெட்டத் தெளிவான விஷயமாகும்.
ஒருவேளை, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது என்ற உயர்ந்த நோக்கம் மோடிக்கு இருந்திருக்குமானால் ஏழை மக்களின் எண்ணிக்கையில் 90% த்தைக் கொண்டுள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்? பெரும்பான்மை ஏழை மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது பார்ப்பனிய சாதிய இட ஒதுக்கீடு தானே? இது ஒன்றே போதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது மோடியின் மோடி வித்தை என்பதை காட்டுவதற்கு.
#ஒரே_கல்லில்_பல_மாங்காய்கள்
முதலாவதாக, இந்த 10% இட ஒதுக்கீடு பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற பெயரில் முற்பட்ட சாதிகளுக்கான ஒரு இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்கள் என்ற அதனுடைய முகமூடி மிகவும் மோசடியானதும், மக்களை திசை திருப்பக் கூடியதும் ஆகும். மோடி ஏதோ ஏழை மக்களுக்காக இந்த இட ஒதுக்கீட்டை வழங்கி இருப்பது போலவும், அவர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உதவி செய்வது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
உண்மையில் மோடி யாருடைய பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார் என்பதை நமக்கு அவரது ஆட்சி நன்றாகவே காட்டியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் பார்த்தாலும்கூட மோடி அரசின் செயல்பாடுகள் ஏழை மக்களின் கல்வி உரிமையையும் வேலைவாய்ப்பையும் பறிப்பதாகவே உள்ளது. ஏழைகளுக்குக் கல்வியை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வு, ஆராய்ச்சிப் படிப்பில் ஏழைகளை ஒழித்துக்கட்டும் யுஜிசி மானியக் குறைப்பு, அரசு வேலைவாய்ப்பில் புதியவர்களை தேர்வு செய்யத் தடை, ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியர்கள் தேர்வு, பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்ற மோடியின் திட்டங்கள் அனைத்து சாதிகளைச் சேர்ந்த ஏழை மக்களும் உயர்கல்வி பெறுவதையும், அரசு வேலை வாய்ப்புகளை பெறுவதையும் ஏறக்குறைய தடை செய்து விட்டது என்றே கூறலாம். அது மட்டுமின்றி அனைத்து சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்களையும் மோடி அரசு கசக்கிப் பிழிந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் லாபத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், மோடி அரசு இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவிப்பதன் மூலம் ஏதோ பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உதவுவதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. குறைந்தபட்சம் மேல் சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டுமாவது உதவுவதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களின், இந்தியக் கார்ப்பரேட்டுகளின் மற்றும் நிலப்பிரபுக்களின் பிரதிநிதியான மோடி, தன்னை ஏழை மக்களின் பிரதிநிதியாகக் காட்டிக்கொள்ள இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை நயவஞ்சகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இரண்டாவதாக, இந்த மேல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை அறிவித்ததன் மூலம் சாதி ரீதியான ஒடுக்குமுறை காரணமாக பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்களுக்கான சமூக நீதியாக வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை, கோட்பாட்டு ரீதியாக ஒழித்துக் கட்டும் வேலையை செய்துள்ளார். சாதிகளுக்குள் வர்க்கங்கள் தோன்றி நிலைபெற்று விட்ட சூழலில் இருக்கும் இந்தியச் சமூகத்தில், அரை நிலவுடைமை அமைப்பின் விளைவாக இன்றளவும் சாதியமும் ஒரு பெரும் பாத்திரத்தை ஆற்றி வருகிறது. மேலும் பல நூறு ஆண்டுகளாக கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் சமத்துவத்தைப் பெறவேண்டும் என்பது ஒரு சமூக நீதி கண்ணோட்டமாகும்.
பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை மேலோட்டமாகப் பார்க்கையில் ஒரு முற்போக்கான கொள்கையாக தோன்றினாலும், அது இந்தியச் சூழலில் ஒரு சமூக நீதிப் பறிப்பு உத்தியாகவே உள்ளது. இந்திய வரலாற்றில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனிய சாதியம் மக்களை பிறப்பின் அடிப்படையிலான சாதிகளாகப் பாகுபடுத்தி, ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூக, அரசியல் உரிமைகளைத் திட்டவட்டமாக மறுத்து வைத்திருந்தது. அச்சமூகத்தின் அதிகாரமும் கல்வியும் இந்த ஆதிக்கச் சாதிகளின் கைகளிலேயே இருந்தது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு இந்த உரிமைகள் வன்முறை மூலம் மறுக்கப்பட்டன. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்ததன் விளைவாக, ஒடுக்கப்பட்டச் சாதிகளை சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் அதிகாரம் போன்றவற்றில் மிகக் குறைந்த பங்கையே பெற்றிருந்தனர். இத்தகைய சூழலில் பிரிட்டிஷாரின் ஆட்சியில் தோன்றிய முதலாளிய அரசு நிர்வாகம் மற்றும் கல்வித் துறையில் பார்ப்பனர்களும் இதர மேல் சாதியினரும்(மக்கள் தொகையில் சிறுபான்மையினரான இவர்கள்) ஏறக்குறைய அனைத்து இடங்களையும் கைப்பற்றிக்கொண்டனர். இந்தச் சூழலிலேயே காலங்காலமாக உரிமை மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தியாவின் தனித்துவமான சூழலில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை முன்னிறுத்தும் கொள்கையாகும். பல காலம் கல்வியும் அதிகார உரிமையும் மறுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள, அதில் பங்கு பெற்று அதைப் பயன்படுத்தக் கூடிய நிலையிலுள்ள சாதியைச் சார்ந்தவர்கள் உடன் போட்டியிடுவது என்பது சமமற்றவர்களுக்கு இடையிலான போட்டியாகவே இருக்க முடியும். இங்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கும் சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து அப்படியே நீடிக்க வைப்பதாகவே பொருள் தரும்.
#சமூக_நீதி_கோட்பாட்டுக்கு_சவக்குழி_வெட்டும்_மோடி
இந்த இட ஒதுக்கீடு கூட பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்கள் பல காலம் போராடி பெற்ற உரிமையாகும். இந்த உரிமையையும் கூட சதித்தனமாக பறிக்க, பார்ப்பனிய சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாம் அறிவோம். எண்பதுகளில் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் இதே வகையில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒன்றை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்த பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், அந்த முடிவை எம்ஜிஆர் தலைமையிலான அரசு கைவிட்டது. அதேபோல, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளிவந்த போது, அதை எதிர்த்து வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ் மேல் சாதியினரைத் தூண்டிவிட்டு மிகப்பெரும் கலவரங்களில் ஈடுபட்டது என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இந்த சமூகத்தில் வழங்கப்படும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது என்ற போதிலும், அது ஒரு சீர்திருத்தம் என்ற வகையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஓரளவேனும் பங்கேற்பதை உறுதி செய்கிறது. சமூகநீதிக் கண்ணோட்டத்தையும், பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கான எதிர்ப்பையும், சாதிவாரியான இட ஒதுக்கீட்டையும் மறுப்பதே மோடி அரசின் மேல் சாதிகளுக்கான 10 % இட ஒதுக்கீடு தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்றே கூறமுடியும்.
ீத_இட_ஒதுக்கீடு_மோடியின்_அரசியல்_உத்தியே
தனது மக்கள் விரோத, ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளாலும், தனது கொடூரமான பாசிச ஒடுக்குமுறைகளாலும், இன்று மோடி அரசு மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நின்றது. மறுபுறம் மோடி அரசு போட்டுக்கொண்டிருந்த ஊழல் எதிர்ப்பு வேடமும் ரஃபேல் ஊழல், வியாபம் ஊழல் போன்றவற்றால் அம்பலப்பட்டு போயிருந்தது. இத்தகைய சூழலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு உத்தியாகவே இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு கொண்டு வந்தது. ஒருபுறம், முன்னரே கூறியது போல தன்னை ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்வது, மறுபுறம் இந்த சர்ச்சைக்குரிய விசயத்தை முன் கொண்டு வருவதன் மூலம் தனக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் விவாதங்களை முழுக்க திசைதிருப்புவது. இதுவே மோடி அரசு 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததற்கான உடனடி அரசியல் தேவையாகும். சமூக நீதிக் கொள்கையை ஒழிப்பது என்ற பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் - ன் நீண்டகால செயல் திட்டமும் இதற்கான காரணங்களில் ஒன்று என்பதும் உண்மையே.
மோடி அரசின் இந்த இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைத் தவிர எந்தக் கட்சியும் எதிர்க்காமல் அறுதிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது என்பது பாராளுமன்ற அரசியலின் உண்மை முகத்தை நமக்குக் காட்டுகிறது.
துரோகிகளின் அணிவகுப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது!
#சமூகநீதி_வேடமிட்டுள்ள_துரோகிகள்
பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அடிப்படையில் பார்ப்பனிய சாதியத்தை ஆதரிக்கின்றன என்பது நமக்கு தெரிந்ததே. அவர்கள் இந்த 10 % மேல் சாதி இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆனால், இன்று பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளும், தலித்துகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளும் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரித்தது, அவர்களின் அப்பட்டமான சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையே நமக்கு காட்டுகிறது. லாலுவின் ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி,ராம் விலாஸ் பஸ்வான், இன்னும் பல்வேறு குடியரசு கட்சிகள் போன்றவை, சமூக நீதியை ஆதரிப்பதாகவும், மனு வாதத்தை எதிர்ப்பதாகவும், பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்து போர் முரசு கொட்டுவதாகவும் வேடம் போடுகின்றனர். ஆனால், நடைமுறையில் இவர்கள் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு இணைந்து ஆட்சி அதிகாரத்தை சுவைப்பதற்கு தயங்குவதில்லை. இந்த வகையில்தான், தாம் கூறிய சமூகநீதி, அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளை தூர எறிந்துவிட்டு மேல் சாதிகளுக்கான 10 % இட ஒதுக்கீட்டை தமது தேர்தல் அரசியலின் லாப நோக்கத்துக்காக மட்டும் இன்று ஆதரித்து நிற்கின்றனர். ஆளும் வர்க்கங்களின் பகுதியாக மாறி விட்ட இந்த பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட சாதிகளின் ஆளும் வர்க்கக் கட்சிகள் சமூக நீதியையும் அவர்கள் கூறும் கொள்கைகளையும் ஒரு கழிவறை காகிதத்தைப் போலத்தான் கருதுகின்றனர் என்பது இந்த நிலைப்பாட்டின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. இவர்களது நோக்கம், தமது வர்க்கத்தின் அதாவது ஆளும் வர்க்கத்தின் நலனைக் காத்துக் கொள்வது தானே ஒழிய, பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காப்பது அல்ல. இவர்கள் வெறும் இட ஒதுக்கீட்டில் மட்டும் இந்த துரோகத்தை செய்யவில்லை. பல ஆண்டு காலமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் உலகமய-தாராளமய கொள்கைகளை முழுவதுமாக ஆதரித்ததன் மூலம், இவர்கள் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சூறையாடியதில் முகவர்கள் போல செயல்பட்டு வந்ததே வரலாறு. தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், இந்த ஆளும் வர்க்க அரசியல் முகவர்களின் சூழ்ச்சிகளையும், சுயநலத்தையும் புரிந்துகொண்டு அவர்களை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகர ஜனநாயக அரசியலில் பங்கேற்பதன் மூலமே அவர்கள் உண்மையில் தமது இட ஒதுக்கீட்டையோ அல்லது தமது விடுதலையையோ சாதிக்க முடியும். மேலும் பாராளுமன்றவாதமும், அடையாள அரசியலும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஆளும்வர்க்கங்களுக்குத்தான் லாபம் தரும். அது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிராகவே செயல்படும் என்பதை இந்த துரோகம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.
#புரட்சி_வேடமிட்டுள்ள_துரோகிகள்
அடுத்தபடியாக தன்னை பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் சிபிஎம் கட்சியின் நிலைபாட்டை பார்ப்போம். சி.பி.எம் கட்சி ஆர்.எஸ்.எஸ் - ன் மேல்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் ஆதரித்தது. அதை ஆதரிப்பதற்கு அது பல்வேறு காரணங்களை முன்வைக்கிறது. முதலாவதாக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இட ஒதுக்கீடு வர்க்க அடிப்படையில் ஆனது என்பது போன்ற ஒரு வாதத்தை முன்வைக்கிறது. நாம் இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே இந்த இட ஒதுக்கீடு ஏழ்மை என்பதையையோ, பொருளாதார பின்தங்கிய நிலையையோ கணக்கில் கொள்ளவில்லை என்பதை விளக்கியுள்ளோம். மாறாக, பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்கனவே மைய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பையே தான் இதற்கும் வரம்பாக கூறியுள்ளனர். எனவே இது பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு அல்ல. இது இட ஒதுக்கீட்டில் பங்குபெறாத மேல் சாதிகளுக்கான இட ஒதுக்கீடு என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளோம். மோடி முன்வைக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற மோசடி முழக்கத்திற்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் சிபிஎம் கட்சி பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. முதலாவதாக, இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் ஒதுகீட்டில் 10 சதவீதம் குறையப் போகிறது. இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு தராமல் 'மேல்சாதி ஏழைகளுக்கு' மட்டும் ஒதுக்கீடு தருவது என்ற இந்த மோசடியை ஆதரிப்பதன் மூலம் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு சி.பி.எம் துரோகம் செய்கிறது. மேலும் சமூகநீதி அடிப்படையிலான சாதிவாரியான இட ஒதுக்கீடு என்ற கோட்பாட்டையே அரசுடன் சேர்ந்து சி.பி.எம் குழிதோண்டிப் புதைக்கிறது.
அடுத்ததாக, தமிழ்நாட்டில் உள்ள மேல் சாதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் வட நாட்டிலும் பிற மாநிலங்களிலும் பெரும் எண்ணிக்கையில் முற்பட்ட சாதிகள் உள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாக உள்ளனர்" என்று கூறுகிறது சிபிஎம் கட்சி. ஆனால் இந்த ஒதுக்கீடு குறைந்தபட்சம் மேல் சாதிகளில் உள்ள ஏழைகளுக்கானதா? அதன் வருமான வரம்பும் நில அளவும் யாருக்கு பயன் தரும்? மேல் சாதிகளின் மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தான் பயன்தரும். இதிலிருந்தே சி.பி.எம் கட்சி ஏழைகளுக்கானது என்று கூறுவது மோடியின் மோசடியை போன்றதே என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். வர்க்கப் பார்வை என்ற பெயரில் சிபிஎம் திரிபுவாதிகள் சமூகநீதியை அழித்தொழிக்கும் மற்றும் மோடிக்கு ஏழைப் பங்காளன் என்ற போர்வையை வழங்கும் ஆர்.எஸ்.எஸின் சதிக்கு முட்டு கொடுக்கின்றனர் என்பது தான் உண்மை. மேலும் பார்ப்பனிய சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் சி.பி.எம் கட்சி எப்போதுமே முழுமூச்சாக ஈடுபடுவதில்லை என்பதும், ஏதாவது ஒரு வகையில் பார்ப்பனிய சக்திகளுடன் சமரசம் செய்து கொள்கின்றது என்பதும் தான் வரலாறு நமக்கு காட்டும் உண்மை. தமிழகத்தில் எண்பதுகளில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று இதே மோசடியை எம்ஜிஆர் அரசு செய்த போது அதற்கு முழுவதுமாக துணை நின்றது சி.பி.எம் கட்சி என்பதை நாம் இப்போது நினைவில் கொள்வது சரியாக இருக்கும்.
#சமூகநீதி_காவலர்_வேடமிட்டுள்ள_துரோகிகள்
இறுதியாக இந்த இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் எதிர்த்ததன் மூலம் தம்மை சமூகநீதி காவலர்களாக காண்பித்து கொள்ளும் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளின் நிலையைப் பார்ப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர் காலத்திலேயே நடந்த தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாக இட ஒதுக்கீடு மிக முந்தைய காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அது மட்டுமின்றி, இங்குள்ள பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களின் காரணமாக இந்தியாவிலேயே மிக அதிகமான 69 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி வன்னியர் சங்கத்தின் போராட்டத்தின் விளைவாக பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு, அருந்ததிய மக்களின் போராட்டத்தின் விளைவாக தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு விசயங்கள் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளன. இவற்றிற்கெல்லாம் தாமே காரணம் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, இன்று திராவிட கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், தமிழகத்தில் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை ஆதரித்தால் இங்குள்ள பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், அதே ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சிக்கு வருவதற்கு திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி பல்லக்கு தூக்கின என்ற வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்ல இவர்கள் உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மைய அரசுகளில் தொடர்ந்து பங்கேற்று அந்தக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திய துரோகிகள் என்பதையும் கூட நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றுவரையிலும் இட ஒதுக்கீடு போன்ற சில (பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு பெரும்பயன் விளைவிக்காத) ஓட்டை சீர்திருத்தங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, தங்களை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு அரசியல் மோசடியை திமுக, அதிமுக கட்சிகள் செய்து வருகின்றன. அதிலும் நாம் முன்னரே கூறியது போல எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் பல சமயங்களில் சமூகநீதிக்கு எதிராகவே செயல்பட முயற்சி செய்து விட்டு, மக்களின் கடும் எதிர்ப்பால் அதை கைவிட்ட வரலாறு நாம் அறிந்ததே. திமுக, அதிமுக கட்சிகள் மற்றும் பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கட்சிகள் அல்லது தலித்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் அனைத்துமே சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது, சில பார்ப்பனிய அடையாளங்களை எதிர்த்துப் போராடுவது போன்ற விஷயங்களை மட்டுமே முன்னிறுத்தி மக்களை தமக்கு பின்னால் அணி திரட்ட முயற்சிக்கின்றன. நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இட ஒதுக்கீடு அல்லது இத்தகைய சில அடையாளப் போராட்டங்கள் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் மிக மிக அரிதாகவே இருக்கின்றன. 70 ஆண்டுகள் இட ஒதுக்கீட்டுக்கு பிறகும் மைய அரசு பணிகளிலும், உயர் அரசு பணிகளிலும், உயர்கல்வியிலும் பார்ப்பனர்களும், மேல் சாதிகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழ்நாடு போன்ற இடங்களில் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒப்பீட்டளவில் அதிக இடங்களை பெற்றிருந்தபோதும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் இதனால் பெற்ற பயன் அடிப்படையான ஒன்று அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
#சமூக_மாற்றத்துக்கான_போராட்டமே_சாதியை_ஒழிக்கும்_சமூக_நீதியை_வழங்கும்
பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட சாதிகளில் இன்று ஒரு புதிய பார்ப்பனிய வர்க்கம் ஆளும் வர்க்கமாக உருவெடுத்துள்ளது. அதுதான் இட ஒதுக்கீட்டின் பலன்களையும் கூட பெரும்பான்மையாக அனுபவித்து வருகிறது.
இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆளும் வர்க்கங்களின் கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன என்ற அதேசமயம் பல்வேறு பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளின் கட்சிகள் என்று கூறிக் கொள்பவர்கள் உழைக்கும் மக்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்வதற்குத் தடையாக உள்ளனர். தமது அடையாள அரசியலை அல்லது சாதி அரசியலை முன்னிறுத்தி அவர்களை பிளவுபடுத்துகின்றனர். மறுபுறம் இவர்கள் பார்ப்பனிய அல்லது ஆதிக்க சாதி கட்சிகளுடன் எந்தவித தயக்கமும் இன்றி தேர்தலில் ஒன்றாக சேர்ந்து தம்முடைய ஆளும்வர்க்க நலனை பறைசாற்றுகின்றன. இவர்களால் பார்ப்பனிய சாதியத்தை ஒழிப்பதும் மற்றும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வில் முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதும் என்பது சாத்தியமற்ற ஒன்றேயாகும்.
இந்தியாவில் நிலவும் பார்ப்பனிய சாதிய சமூக கட்டமைப்பு இங்குள்ள அரை\ நிலவுடைமை அமைப்பு முறையுடன் தொடர்பு கொண்டதாகும். இன்றளவிலும் கூட இந்த பிற்போக்கான அரை நிலவுடைமை அமைப்பு அழிக்கப்படாததால் சாதியம் இன்னும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. சாதியத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அரை நிலவுடமை அமைப்பையும், அதை முட்டுக்கொடுத்து தாங்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிய சுரண்டலையும் ஒழிக்காமல், ஒரு ஜனநாயக சமுதாயத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்காமல், அநீதியான சாதிய அமைப்பு விழுந்து விடாது. அதேபோல, உழைக்கும் மக்களின் வாழ்விலும் அடிப்படை மாற்றம் வராது. அனைத்து சுரண்டப்படும் மக்களின் விடுதலை மற்றும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை ஒழிப்பது ஆகிய கடமைகள் தவிர்க்க இயலாமல் ஒன்று கலந்துள்ளன. இட ஒதுக்கீடு அல்லது இது போன்ற சில சீர்திருத்தங்கள் மூலம், சாதியை ஒழிப்பதோ அல்லது தங்களுடைய விடுதலையை அடைவதோ சாத்தியமில்லை என்பதை தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி வணிகமயமாகியும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாகியும் வரும் உலகமயக் காலகட்டத்தில் இட ஒதுக்கீடு உழைக்கும் மக்களுக்கு பெரும் பலன் எதுவும் தராத ஒன்றாக மாறி வருகிறது என்பது தான் உண்மை.
எனவே, பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கையை மாற்ற இந்த ஓட்டைப் படகுகளை நம்பிப் பயனில்லை. மாறாக, அவர்கள் இந்த அநீதியான சமூகத்தை மாற்றியமைக்க வேண்டிய ஒரு வர்க்கப் போராட்டத்தில், சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டியுள்ளது. பார்ப்பனிய சாதியம் ஒழிக்கப்பட்ட, ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது முன்நிபந்தனை ஆகும். அத்தகைய போராட்டத்தின் பகுதியாகவே சமூக நீதியை மறுக்கும் பா.ஜ.க - வின் தந்திரங்களை எதிர்த்த போராட்டங்களும் அமைய வேண்டும். இந்த ஓட்டுக் கட்சிகளையும், சாதி சங்கங்களையும் புறக்கணித்து மக்கள் உண்மையில் சமூக நீதிக்காகவும், தமது விடுதலைக்காகவும் ஒன்றுதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதையே பாராளுமன்றத்தில் நடந்த இந்த கபட நாடகங்களும், கேவலமான துரோகங்களும், மோசடிகளும் நமக்கு காட்டுகின்றன.

குறிப்பு:
இது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் விடுதலைக்கனல் இதழில் வெளியான கட்டுரை

23/09/2022

தேசிய புலனாய்வு முகமையினால் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவைச் சார்ந்த 106 செயல்பாட்டாளர்கள்/தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த கைது நடவடிக்கையில் கேரளத்தில் 26 பேர், கர்நாடகாவில் மற்றும் மகாராஷ்ட்ராவில் தலா 20 பேர், தமிழகத்தில் 10 பேர், அசாமில் 9 பேர், உ.பியில் 8 பேர், ஆந்திராவில் 5 பேர், மத்திய பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி மற்றும் தில்லியில் தலா 3 பேர் மற்றும் ராஜஸ்தானில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்துத்துவ பாசிச மோடி அரசின் இந்த மதச் சிறுபான்மையினர் முஸ்லீம் மக்கள் விரோத போக்கினை எந்த மாநில அரசும் கண்டித்ததாக தெரியவில்லை. மேலும் மாநில அரசுகளின் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பட்டப்பகலில் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது NIA. விசாரணை இல்லை, வழக்கு இல்லை தடால் புடால் என மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவி பாசிஸ்டுகள் - ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் ஏவல் துறையாய் NIA செயல்பட்டு வருகிறது. இதற்கான வானலாவிய அதிகாரத்தை வழங்குவது UAPA சட்டமும் - NIAவுமாகும்.

UAPAவை இரத்து செய்!
NIAவைக் கலைத்திடு!
காவி கும்பல்களின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம்!

2022 உலக சமத்துவமின்மை அறிக்கையானது தற்போது வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள செல்வந்தர்களுக்கும், ஏழ...
22/09/2022

2022 உலக சமத்துவமின்மை அறிக்கையானது தற்போது வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி வரலாற்றில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. முதல் 10 சதவிகித பணக்காரர்கள் வசம் நாட்டின் மொத்த வருவாயில் 57 சதவிகிதம் உள்ளது. இது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் (1858 - 1947) இந்தியா இருந்த போது இருந்த 50 சதவிகிதத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவிதம் மக்கள் தொகையினர் தேசிய வருவாயில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே பெருகின்றனர்.

அக்ஸ்பாம் அறிக்கையின் படி, 2021ல் மட்டும் 84 சதவிகித இந்திய வீடுகள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள அதேசமயம் 102ல் இருந்து 142ஆக இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்தியாவில் உள்ள 98 கோடீஸ்வர குடும்பங்களுக்கு வெறும் 1 சதவிதம் சொத்து வரி விதிக்கப்படுமாயின் அதனைக் கொண்டு "ஆயுஷ்மான் பாரத்" என்கின்ற பொது சுகாதார காப்பீட்டு நிதிக்கு 7 வருடங்களுக்கு தேவைப்படும் நிதியைத் திரட்ட முடியும் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது. அந்த அளவிற்கு 57.3 இலட்சம் கோடிகளை (775 பில்லியன் $) தங்களது சொத்து மதிப்பாக 100 பணக்காரர்கள் கொண்டுள்ளனர்.

23.14 இலட்சம் கோடிகளாய் இருந்த இவர்களது சொத்து மதிப்பு பெருந்தொற்று காலகட்டத்தில் மட்டும் (மார்ச் 2020 முதல் நவம்பர் 2021 வரை) 53.16 இலட்சம் கோடிகளாய் அதிகரித்து உள்ளது. மேலும் 2020ல் மட்டும் 4.6 கோடிக்கும் மேலான இந்தியர்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது உலகெங்கிலும் புதியதாய் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் என ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அவலநிலைக்கான காரணம் எழைகளை விடவும் பணக்காரர்களுக்கு சேவை செய்கின்ற வகையிலான பொருளாதார அமைப்பு முறையே காரணம்.

வழக்கமாக நாட்டின் பொருளாதாரம் அளவிடுவதற்கான குறியீடாக ஜி.டி.பி பயன்படுத்தப்படும். அவ்வாறாக ஜி.டி.பியில் பெரும்மாறுதல் இல்லாமல் குறிப்பாக குறையாமல் இருக்குமாயின் அது பொருளாதார ஸ்திரதன்மையைக் குறிப்பதாய் ஆட்சியாளர்களாலும், பொருளாதார நிபுனர்களாலும் வாதிடப்படும். ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக (2008 பொருளாதார நெருக்கடி காலத்தைத் தவிர)இந்நாட்டின் ஜி.டி.பி 7 சதவிகிதம் என்ற நிலையிலேயே உள்ள போதும் பொருளாதார ஏற்றத்தாழ்வானது, வருமான ஏற்றத்தாழ்வு பாரதூரமாக மாறியுள்ளதைக் கொண்டு பார்க்கையில் நாட்டின் ஜி.டி.பிக்கும் ஏழை-எளிய மக்களின் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லாததை விளங்கிக்கொள்ள முடியும்.

நிச்சயமற்ற வாழ்க்கை நிலமைகள் இந்திய உழைக்கும் மக்களை அழுத்தி வருகின்ற நிலையில். பெருந்தொற்று காலத்திற்கு முன்பு வரையிலும் கூட 30 முதல் 40 சதவிகித நிலையான சம்பளம்(regular salaried) பெருகின்ற வயது மூத்த தொழிலாளர்கள் மட்டுமே தொழில் பாதுகாப்பு, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட சமூக பாதுகாப்புகளை வாய்க்கப் பெற்றவர்களாய் இருந்த நிலையில் தற்போது அது இன்னும் மோசமாகியுள்ளது. சுயதொழில் புரிவோரது நிலை சொல்லவே தேவையில்லை, 2019 கணக்கின்படி இவர்களே நாட்டின் 60 சதவிகித தொழிலாளர்கள் ஆவர்.

மேலதிகமாக, 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமான ஏற்றத்தாழ்வானது சாதி, பாலினம், குடும்ப பின்னணி உள்ளிட்ட காரணிகளால் ஏற்படுவதாக 2022 உலக சமத்துவமின்னமி அறிக்கை தெரிவிக்கிறது. பழங்குடிகள், பட்டியல் சாதியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட மீதமுள்ள 30 முதல் 35 சதவிதத்தினருக்கும் இவர்களுக்கும் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வானது மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது.

சாதி மட்டுமே வருமான ஏற்றத்தாழ்விற்கு காரணம் இல்லாவிடினும் கூட அந்த ஏற்றத்தாழ்விற்கு இதன் பங்களிப்பு 7 சதவிகிதமாக உள்ளது என்பது குறைவாக பார்க்கப்பட வேண்டிய விடயம் அல்ல. அதே சமயம் பாலினம் மற்றும் குடும்பப் பின்னணிகள் வருமான ஏற்றத்தாழ்விற்கு 30 சதவிகித காரணமாக உள்ளது. பாலினம் என பார்க்கையில் பெண்கள் பெரும் வருமான ஏற்றத்தாழ்விற்கு உள்ளாவது நிதர்சனமான உண்மை எனும் போதும் கூட பழங்குடியின, பட்டியல் சாதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்கள் இரட்டை அழுத்ததிற்கு உள்ளாகின்றனர் என்பதனையே ஆய்வுத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.

மேற்கூரிய விசயங்களில் இருந்து நாம் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும்; அது பிரிட்டிஷ் இந்தியாவின் நிலைமைகள் சமானிய மனிதனுக்கு, இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கு என்னவாக இருந்தனவோ அந்த நிலை மாறிவில்லை என்று கூறுவதை விட அதைவிடவும் பின்தங்கிய நிலைக்கு ஆட்சியாளர்கள் குறிப்பாய் பார்ப்பனிய இந்துத்துவ பாசிஸ்டுகள் கடந்த 75 ஆண்டுகளில் நாட்டை இட்டுச்சென்றுள்ளனர் என்பதையே தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கையும், சொத்துமதிப்பும் அதிகரித்த அளவிற்கு இந்திய உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலை இங்கே ஏற்றமடையவில்லை.

Address

Madurai

Telephone

+919488239969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anti Imperialist Movement-AIM [ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்] posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share