Manambadi

Manambadi வீரநாராயணபுரமான இலச்சிக்குடி, வீரநா?

சோழப் பேரரசர்கள் காலத்தில் இவ்வூர் வடகரை இராஜேந்திர சிம்ம வளநாட்டு மிழலை நாட்டு வீரநாராயணபுரமான இலச்சிக்குடி என அழைக்கப்பெற்றதாகவும், முதலாம் குலோத்துங்க சோழன்காலம் முதல் வீரநாராயணபுரமான மாறம்பாடி எனக் குறிக்கப் பெற்றதாகவும் ஸ்ரீகைலாசத்துக் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன. மாறம்பாடி காலப்போக்கில் மானம்பாடியாகி வீரநாராயணபுரம் என்ற பழம்பெயரும் மறைந்துவிட்டது.

13/02/2026

26/09/2021
26/09/2021
27/05/2021

| தாய் மொழியில் பொறியியல் படிப்பு!

www.news7tamil.live | | |

24/02/2021
11/08/2017

இராஜேந்திர சோழன் எடுத்த மானம்பாடி சிவாலயம் by Kudavayil Balasubramanian
கும்பகோணத்திலிருந்து விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதல் பத்து கி.மீட்டர் தொலைவிற்குள்ளேயே சோழபுரம் என்னும் பேரூரை அடுத்து மானம்பாடி என்றதோர் சிற்றூர் உள்ளது. அந்த ஊரினை நடுவே பிளந்தவாறு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் சாலையின் இருமருங்கும் அவ்வூரின் அய்யனார் கோயிலும், அம்மன் கோயிலும், தற்போது நாகநாதசுவாமி கோயில் என வழங்கப் பெறும் பண்டைய ஸ்ரீகைலாசம் என்னும் சிவாலயமும் ஊரின் வீடுகளும் அணி செய்தவாறு விளங்குகின்றன. சோழப் பேரரசர்கள் காலத்தில் இவ்வூர் வடகரை இராஜேந்திர சிம்ம வளநாட்டு மிழலை நாட்டு வீரநாராயணபுரமான இலச்சிக்குடி என அழைக்கப்பெற்றதாகவும், முதலாம் குலோத்துங்க சோழன்காலம் முதல் வீரநாராயணபுரமான மாறம்பாடி எனக் குறிக்கப் பெற்றதாகவும் ஸ்ரீகைலாசத்துக் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன. மாறம்பாடி காலப்போக்கில் மானம்பாடியாகி வீரநாராயணபுரம் என்ற பழம்பெயரும் மறைந்துவிட்டது.

வீரநாராயணன் என்பது பராந்தக சோழனின் பெயராகும். அவன் தோண்டிய பேரேரிதான் வீரநாராயணப் பேரேரி. அது தற்போது மானம்பாடிக்கு அணித்தே வீராணம் ஏரி என்ற பெயரில் திகழ்கின்றது. பராந்தக சோழன் பெயரால் இவ்வூர் முற்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற ஓரூராக இருந்திருக்கிறது. இவ்வூர் அய்யனார் ஆலயத்திற்கு முன்பு திறந்தவெளியில் மிகப்பெரிய அமர்ந்த கோல புத்தரின் திருவுருவச்சிலை இடம் பெற்றிருந்தது. கிழக்காசிய நாடுகளிலிருந்து பௌத்தர்கள் இங்கு வருகை புரிவர். அண்மையில் பேரழகு வாய்ந்த இந்த சிலை திருடர்களால் களவாடப்பெற்று பின்னர் காவல்துறையினர் அதனை மீட்டனர். தற்போது அந்த அரிய சிற்பம் அம்மன் ஆலயத்தில் வைக்கப்பெற்று பாதுகாக்கப்பெறுகின்றது. கலையழகு வாய்ந்த அந்த புத்தர் சிலையினை நம் மக்கள் காக்காது இருந்தது போன்றே ஸ்ரீகைலாசம் என்னும் அவ்வூரின் அற்புத சிவாலாயத்தினையும் முறையாகப் பேணிக்காக்காததால் அது அழிவின் விளிம்பினைத் தொட்டவாறு எண்ணற்ற கலைச் செல்வங்களைச் சுமந்து கொண்டு நிற்கின்றது.

கி.பி. 1012 இல் மாமன்னன் இராஜராஜ சோழனால் இளவரசுபட்டம் சூட்டப்பெற்றவன் இராஜேந்திர சோழன். கி.பி. 1014இல் தொடங்கி 1044 வரை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். “கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்” என இவன் புகழை ஒட்டக்கூத்தர் குறிப்பிட்டுள்ளார். வடக்கே வங்காள தேசம் வரை வென்று புனித கங்கை நீரை பொற்குடங்களில் எடுத்து வந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் அவன் வெட்டிய சோழகங்கம் என்னும் பேரேரியில் விடுத்ததோடு அந்த நீரால் கங்காபுரியில் உள்ள கங்கைகொண்ட சோழீச்வரருக்கு மகாஅபிடேகமும் செய்தவன். தற்போதைய மலேசியா, இந்தோனிசியா (ஜாவா, சுமத்திரா, போர்னியோ), தாய்லாந்து போன்ற நாடுகளைத் தன் கடற்படை வலிமையால் வென்றவன். அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி அவ்வெற்றியைத் தழுவியதாக அவன் கல்வெட்டுக்கள் உரைக்கின்றன. அப்பேரரசன் எடுப்பித்த சிவாலயமே மானம்பாடி சிவாலயம் என்பது பெருஞ்சிறப்பாகும். இவ்வாலயத்தில் மாமன்னன் இராஜேந்திரனையும் அவன் தேவியையும், அவன் இராஜகுருவையும், உயர் அலுவலர்களையும் சிற்பவடிவில் ஆடவல்லான் அருகில் நாம் காணலாம் என்பது இக்கோயிலுக்குரிய ஒரு தனிச்சிறப்பாகும். அவன் எடுப்பித்த கங்கை கொண்ட சோழபுரமாம் பெருங்கோயிலில் கூட இத்தகைய காட்சியை நாம் காண முடியாது.

தரையில் திகழும் அதிட்டானத்தில் தொடங்கி முதற்தளம் வரை கல்ஹாரமாக (கருங்கற்கட்டுமானமாக) கோயில் எடுக்கப்பெற்றிருந்தாலும் ஸ்ரீவிமானத்தின் மேல் நிலைக் கட்டுமானங்களான கிரீவம் சிகரம் ஆகியவை செங்கற்களாலேயே எடுக்கப்பெற்றிருப்பதால் காலப்போக்கில் அவை சிதைந்தும், மரங்கள் முளைத்தும் இடிபாடுற்றும் காணப்பெறுகின்றன. கருவறையும் முகமண்டபமும் இணைந்து திகழும் மூலக் கோயிலின் உள்ளே ஸ்ரீகைலாசமுடைய மகாதேவரின் (நாகநாதசுவாமி) சிவலிங்கத்திருமேனி காட்சி நல்குகின்றது. தென்புறம் உள்ள கோஷ்டங்களில் முறையே பிச்சை உகக்கும்பெருமான், நடராஜர், கணபதி, தட்சிணாமூர்த்தி ஆகிய திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நடராஜர் திருவுருவம் செப்புச் சிலைபோல் காணப்பெறுகின்றது. அவருக்கு வலப்புறம் அதிகார நந்தி அமர்ந்தவாறு குடமுழவம் இசைக்கின்றார். அடுத்து சிவாச்சாரியார் ஒருவர் நிற்க எதிரே மாமன்னர் இராஜேந்திர சோழன் முடியப் பெற்ற கொண்டை, எடுப்பான மீசை திகழ வணங்கிய கோலத்தில் நிற்கும் திருவுருவம் காணப்பெறுகின்றது. அவருடன் அவர்தம் தேவியும், குழந்தையும் காணப்பெறுகின்றனர். நடராஜருக்கு இடப்புறம் காளிதேவி ஆட அருகே மாமன்னனின் இராஜகுருவான சர்வசிவ பண்டிதரும் உயர் அலுவலர்களும் காணப்பொறுகின்றனர். இந்த கோஷ்டத்திற்கு மேலாகவுள்ள மகரதோணத்தில் இடபத்துடன் ஈசனார் யோகத்தில் அமர்ந்திருக்க அவர்மேல் மன்மதன் மலர் அம்பு தொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

கருவறையின் பின்புறம் உள்ள கோஷ்டத்தில் வராகம், பிரமன் ஆகியோருடன் இலிங்கோத்பவர் திகழ இருமருங்கும் பிரமனும், மாலவனும் வணங்கி நிற்கின்றனர். வடபுற கோஷ்டங்களில் தாடியுடன் பிரமன், உமையொருபங்கன், கொற்றவை, உமையுடன் கங்காதரர் ஆகியோர் திருவுருவங்கள் காணப்பெறுகின்றன. அங்கு திகழும் மகர தோரணங்களில் இரண்டு மிகவும் குறிப்பிடத்தக்கவையாம். காவிரித்தாய் சாமரம் வீச, நாவல் மரத்தில் சிலந்தி திகழ கிழேயுள்ள இலிங்கத்தை யானை பூஜிக்கும் காட்சி ஒரு தோரணத்தில் உள்ளது. மற்றொன்றில் கண்ணப்பர் இலிங்கத்திருமேனிக்கு தன் கண்ணைக் கொடுக்க முற்பட ஈசனின் திருக்கரம் அதனைத் தடுக்க முற்படுகிறது. அருகே சிவகோசரியார் நிற்கிறார். ஒவ்வொரு தோரணமும் உயரிய கலை வண்ணத்தோடு படைக்கப்பெற்று அங்கு இடம் பெற்றுள்ளன.

திருச்சுற்றில் உள்ள சண்டீசர் ஆலயமும், அம்மன் கோயிலும் சிதைந்து காணப்பெறுகின்றன. மற்ற பரிவாராலயங்கள் சிதைந்தமையால் அவற்றில் இருந்த திருமேனிகள் மகாமண்டபத்தில் இடம் பிடித்துள்ளன. அதிட்டானம் முழுவதும் சோழர்கால கல்வெட்டுக்கள் காணப்பெறுகின்றன.

இங்கு திகழும் கல்வெட்டுக்களில் தொன்மையானது கங்கைகொண்ட இராஜேந்திர சோழனின் நான்காம் ஆட்சியாண்டுக்கு (கி.பி. 1016) உரியதாகும். வீரநாராயணபுரம் என்னும் இலச்சிக்குடி நகரத்தார் (வணிக மக்கள்) இராஜேந்திர சோழன் பெயரில் இக்கோயிலுக்கென ஒரு நந்தவனம் அமைத்ததைப் பற்றி விவரிக்கின்றது. மற்றொரு கல்வெட்டில் கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனின் அரண்மனையில் திகழ்ந்த அவனுடைய தனிப்பட்ட வழிபாட்டுக் கோயிலில் (தேவாரம்) நாயகமாகப் பணிபுரிந்த மறைக்காடன் பதஞ்சலி பிடாரன் மூன்று நுந்தா விளக்கு எரிப்பதற்காக அளித்த கொடை பற்றி விவரிக்கின்றது. குலோத்துங்க சோழனின் 18ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1088) இக்கோயிலில் தமிழ்க் கூத்து நடத்துவதற்காக திருமுதுகுன்றன் என்பவனுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றி எடுத்துரைக்கின்றது. இவ்வாறு இக்கோயில் முழுதும் காணப்பெறும் சோழர் கல்வெட்டுக்கள் அக்கோயிலின் நிருவாகம் பற்றியும், பூஜைகள் பற்றியும் பல செய்திகளைக் கூறி நிற்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இக்கோயிலுக்கு அண்மையில் ஒரு பேராபத்து நெருங்கியது. சாலை விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு எடுத்துச் செயல்படுத்த முற்பட்டது. ஊர்மக்களும், தொல்லியல் வல்லுநர்களும், கலை ஆர்வலர்களும், சமயஞ்சார்ந்த அன்பர்களும் பொங்கி எழுந்தனர். எதிர்ப்புக் குரல் தலைநகர் தில்லி வரை எட்டியது. தமிழக அரசின் கோயில் சார்ந்த துறைகளும் விழிப்புற்றன. இடிக்கும் முயற்சி தடுக்கப்பெற்றது. கோயிலைச் செப்பம் செய்து மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பாலாலய ஸ்தாபனமும் செய்துள்ளனர். விரைவில் அறநிலையத் துறையினர் திருப்பணியைச் செயல்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். இவை அனைத்தும் நிகழ்ந்தால் இராஜேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு ஆண்டாகிய 2014இல் அவன் பண்டு எடுத்த ஒரு கோயிலைக் காப்பாற்றிய புண்ணியம் நம் தலைமுறைக்கு நிச்சயம் வந்து சேரும்.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

09/08/2017
07/08/2017

Address

Manambadi
Kumbakonam
612503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manambadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share