30/08/2023
அவனுக்கும் நண்பர்கள் இருந்திருப்பார்கள் . அவனும் ஞாயிறுகளில் மதிய சாப்பாட்டிற்கு கூட போகாமல் கிரிக்கெட்டே கதி என்று விளையாடி இருந்திருப்பான். அந்த விளையாட்டின் அத்தனை விதிகளும் தெரிந்துருக்கும். ஊனி நிற்கும் அந்த கால்கள் ஆரோக்கியமாக இருந்த போது அவனும் ஓடி ஓடி தனது டீமிற்கு ரன் எடுத்திருப்பான். நிறைய சண்டைகள் நடந்திருக்கும். நிறைய சந்தோஷ தருணங்களில் இப்படி தான் சிரித்திருப்பான்.
ஏதோ நடந்து, வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறி வீட்டிலிருந்து வெளியேறியோ, வெளியேற்றப்பட்டோ தெருவுக்கு வந்துருப்பான். மாற்றுத்துணிகள் கிழிந்து, சிதைந்து காணாமல் போய் ஒரே அழுக்கு துணியுடன் பசிக்கு பிச்சையெடுத்திருப்பான். எதுவும் கிடைக்காத பசிமிகுந்த நாளொன்றில் குப்பையிருந்ததை கிளறி தின்றிருப்பான். பார்ப்பவர்கள் ஓரடி தள்ளி நடக்கும் இந்த கோலத்திலயே பல நாள் சுற்றி வந்தவன் நினைவில் புகை போல் படர்ந்திருக்கும் குழந்தைப்பருவ கிரிக்கெட் நாட்களை இந்த கூட்டம் தூண்டிவிட்டு இருக்கும். "ஒரு பால் ஆடிக்கவா" என்று கெஞ்சியிருப்பான். மட்டையை கையில் தூக்கிய கணம் வெயிலை மதிக்காமல் விளையாடிய குழந்தைப் பருவத்துக்கு சென்றிருப்பான். சுற்றி இருந்த அத்தனை பேரும் தனது குழந்தப்பருவ நண்பர்களாக தெரிந்திருப்பார்கள். பசி , சோர்வு மறந்து சில நொடிகள் சிரித்திருப்பான். இனி அடிக்கடி இங்கு விளையாட வராமல் போகலாம். எங்கெங்கோ திரிந்து ஒரு நாள் அனாதைப் பினமாக இறந்து கிடக்கப்போகும் அவனுக்கு சில நிமிடங்கள் சிரிக்கும் வாய்ப்பளித்த அந்த அன்பு நிறைந்த சிறுவர் கூட்டத்தை இல்லாத இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.