15/08/2022
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழு சார்பாக அனைவருக்கும் *75வது சுதந்திர தின நல் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொண்டு,
''இந்திய தேச விடுதலைக்காக இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு'' இதைப் பற்றிய ஒரு கட்டுரையை கீழே பதிவு செய்துள்ளோம்.
75 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும் நம் இந்திய தேசமும், இந்த தேசத்தின் அனைத்து சமய மக்களும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிகழ்வுகளும், வரலாற்றுப் பார்வைகளும் ஏராளம்.
இந்த தேசத்தில் சொந்தம் கொண்டாட எந்த ஒரு உரிமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பது போன்ற ஒரு மாயையை ஃபாஸிஸ, வகுப்பு வாத கும்பல்கள் உருவாக்கி, வரலாற்றில் எண்ணற்ற பல திரிபுகளை ஏற்படுத்தி இந்த தேசத்தின் வெகுஜன மக்களிடையே பரப்பி வருகின்றனர்.
மிகப் பெரும் துரதிஷ்டம் என்ன வென்றால் ”இந்த தேசத்தின் விடுதலைக்கும், உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் எல்லா வகையிலும் முஸ்லிம்களே முன்னோடிகளாக திகழ்ந்திருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம்களே அறிந்து வைத்திருக்க வில்லை” என்பது தான்.
இந்த தேசத்தின் எல்லையை தீர்மானித்தவர்கள் முஸ்லிம்கள்! இந்த தேசத்தின் வரைபடத்தை ஒழுங்கு படுத்தியவர்கள் முஸ்லிம்கள்!
சிறு, குறு நில ஆட்சி முறையை ஒழித்துக் கட்டி ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் மொகலாய ஆட்சியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கின்ற முஸ்லிம்களின் தியாக வரலாற்றை, குறிப்பாக இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் அரும் பெரும் தியாகங்களை சகோதர சமய மக்களுக்கு காய்தல், உவத்தலின்றி வெளிச்சம் போட்டு காட்டுவோம்.
பூரண சுதந்திரம் கோரி முதல் முழக்கமிட்டவன் இஸ்லாமியனே.
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாகப் போரில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
*அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்*
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
*வரி தர மறுத்த வரிப்புலிகள்*
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடினார் பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ஆம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.
*கதி கலக்கிய கான் சாஹிபு (எ) மருதநாயகம்*
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
*அஞ்சாத புலி ஹைதர் அலி*
18ஆம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
*தீரன் திப்பு சுல்தான்*
‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ஆம் ஆண்டு முதல் 1792ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
*பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்*
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும் பணியாற்றினார்கள்.
இப்படி இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.
இந்திய நாடு எங்கள் நாடு, என்றும் நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மறைத்து, இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளை அடையாளம் காட்டுவோம்.
மீண்டும் ஒருமுறை *அனைவருக்கும் இனிய 75வது சுதந்திர தின வாழ்த்துக்கள்*
*பெற்ற சுதந்திரத்தை காத்து நிற்போம்.*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*இன்குலாப் ஜிந்தாபாத்*
*இந்தியா ஜிந்தாபாத்*
--------------------------------------
*வெளியூர் வாழ் அரூர் இஸ்லாமிய சொந்தங்கள் குழுமம்*
*15/8/2022*