06/12/2018
Story 27!
சத்தம்!
சத்தம் என்றால் என்ன? இரைச்சல், பேரிரைச்சல், கூச்சல் இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? கிறிஸ்டோபருக்கு புரியவில்லை. இசை எப்படி இருக்கும்? keyboard-யில் தட்டச்சு செய்யும்போது அந்த சப்தம் எப்படி வரும்? கடிகாரம் எப்படி ஒலி எழுப்பும், தொண்டை செருமும் சப்தம் என்றால் என்ன? செருமி பார்த்தான், தெரியவில்லை. ஓசை என்ன வடிவில் வரும்? ஏனிந்த கவலை திடீரென என்று அவனுக்கு புரியவில்லை.
அவன் உலகம் மௌனத்தால் நிறைந்தது. அவனுக்கு அவனது மௌனம் பிடித்திருந்தது. இரண்டு செவிகளும் பிறப்பில் இருந்தே கேட்காது. அவனுக்கு அது ஒரு குறையாக தெரியவில்லை. நேற்று வரை சப்தம் பற்றி அவன் சிந்தித்தது கூட இல்லை.ஆனால் இன்று ஏன் இந்த தடுமாற்றம்? சத்தம் என்றால் என்ன என்று இன்று தெரிந்தே ஆக வேண்டுமென்று புறப்பட்டான்.
சாலை முழுவதும் நடந்தான். வாகனங்கள், கடல் அலை ஓட்டம், குழந்தைகள் விளையாட்டு, பறவைகள் சரணாலயம், பேரம் நடக்கும் சந்தை, குதிரை பந்தயசாலை, சினிமா திரையரங்கம் அனைத்து இடங்களுக்கும் நடந்தான், கவனித்தான். அனைத்தும் காட்சிகளாகவே மனதில் பதிந்தன, சப்தம் என்னவென்று புரியவில்லை. சோர்வுடன் வீடு நோக்கி நடந்தான் கிறிஸ்டோபர். ஒரு சந்து திருப்பத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு லாரி வேகமாக இவன் மீது மோத வந்து, சுதாரித்து திரும்பியது. அந்த ஓட்டுநர் என்ன சொல்லி திட்டினானோ தெரியாது. ஆனால், அவன் இதயம் படபடத்து துடிப்பது அடங்க சிறிது நேரம் அடங்கியது. இதயத்தின் அந்த ஒலி அவனுக்கு மிக துல்லியமாக கேட்டது. சப்தமும் இசையுமாக அது ஒலித்தது.