11/04/2026
🌳 *அகலக்குடை மரங்களை (அரசு, ஆல், இலுப்பை) சரியான இடத்தில் நடவும்...*
ஆல், அரசு, இலுப்பை போன்ற மரங்கள் பிரம்மாண்டமாக அகலக்குடை விரித்து வளரக்கூடியவை. முக்கியமாக அரச மரம் மற்ற மரங்களை இரண்டு மரங்கு வேகமாக வளரக்கூடியது. வெறும் 20 வருடங்களில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிடும். எனவே அதற்கு போதுமான இடவசதி உள்ள சரியான இடத்தை தேர்வு செய்து நடுவது அவசியமாகும். மேலும் மற்ற மரங்களுடன் அரசு மற்றும் ஆல மரங்களை நடும்போது மரத்திற்கு மரம் இடைவெளியை அதிமாகக் கொடுக்கவேண்டும்.
சரியான இட வசதியில்லா நிலத்தில் நடும்போது சில ஆண்டுகளிலேயோ அல்லது வளர்ந்த மரங்களையோ வெட்டும் சூழ்நிலை ஏற்படும்போது, மன வருத்தத்தை அளிப்பதோடு மரம் வளர்ப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியும் வீணாகிவிடும். மரக்கூண்டு அமைப்பது கால்நடை மேய்ச்சலில் இருந்து காப்பாற்றும்.
*அரச மரம் நடுவதற்கு உகந்த இடம்*
குளம் மற்றும் ஏரிக்கரைகள், விசாலமான ஊர் பொது நிலம், விசாலமான கோயில் நிலம், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அகன்ற சாலையோரங்கள் போன்ற இடங்களில் நட்டு வளர்க்கலாம். மேலும் கன்று நட்டு சில வருடங்களுக்கு கன்றுகளை கவனித்து பராமரிக்க உகந்த இடமாக இருக்க வேண்டும்.
*தவிர்க்க வேண்டிய இடங்கள்*
*கட்டிடக்கழிவுகள் கொட்டிய இடம்*
சாலையோரங்கள் மற்றும் ஊர் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டி அதன்மேல் சிறிது மண் போட்டிருப்பார்கள், அத்தகைய இடங்களில் மரங்களை நடுவதை தவிர்க்க வேண்டும்.
*குறுகிய சாலைகள் தவிர்க்கவும்*
குறுகிய சாலைகளில் அரச மரம் நடும்போது, சில வருடங்களில் போக்குவரத்திற்கு இடையூராக மரம் வளர்ந்துவிடும் என்பதால் மரத்தை வெட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.
*சுற்று சுவர் அருகே நடக்கூடாது*
அரச மரங்கள் வேகமாக வளர்ந்துவிடும் என்பதால் பள்ளி, கல்லூரி், கோயில், அலுவலக வளாகங்களில் நடும்போது சுற்று சுவருக்கு அருகில் நடக்கூடாது. சுற்றுச் சுவரில் இருந்து குறைந்த பட்சம் 10 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். சுற்றுச்சுவரை ஒட்டி நடவு செய்தால் 5 - 10 ஆண்டுகளிலேயே சுற்று சுவரை உடைத்துவிடும் என்பதால் அரச மரத்தை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
*தண்ணீர் மற்றும் கழிவு நீர் குழாய் அருகில்*
அரச மரம் உள்ள நிலத்திற்கு கீழே தண்ணீர் குடிநீர் குழாய்கள், கிராம தண்ணீர் குழாய்கள் இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் அரச மர வேர்கள் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.
*மேல்நிலை மின்கம்பி (Aerial cables)*
பொதுவாக உயரமாக வளரக்கூடிய மரங்கள் என்றால் மேல்நிலை மின் கம்பிகள் (Aerial cables) செல்லாத இடத்தில் நடுவது உகந்தது. அரசமரம் என்றால் சுற்றிலும் கவனித்து நடவேண்டும்.
*நிலத்தடி மின்கம்பி (UG cables)*
நகரங்களில் பல்வேறு கேபிள் இணைப்புகள் இருக்கும். மின்சாரம், தொலைத்தொடர்பு இணைப்புகள் செல்லும் பாதைகளில் அரச மரம் நடக்கூடாது.
*அகலப்படுத்தக்கூடிய சாலைகள்*
சில சாலைகளை அகலப்படுத்துவற்கு திட்டமிட்டிருப்பார்கள், அத்தகைய சாலைகளில் அரச மரங்கள் நடக்கூடாது.
*வேளாண்நிலங்களில் நடும்போது*
பொதுவாக வேளாண் நிலங்களில் ஆல்,அரசு மரங்கள் நடுவதில்லை, எனினும் இலுப்பை மரங்களை வேளாண் நிலங்களில் நடுவார்கள். பழங்களுக்காக இலுப்பை மரங்களை நடவு செய்தால் இரண்டு இலுப்பை மரத்திற்கு நடுவில் 25 அடி இடைவெளி விட்டு நடவேண்டும். ஏனெனில் மரம் பிரம்மாண்டமாக வளரும். மேலும் வேலியோரங்களில் நடவு செய்தால் 20 அடி உள்ளே தள்ளி நடவேண்டும்...