30/04/2026
நீலகிரியில் மற்றுமொரு முன் வரலாற்றுக்கால பாறை ஓவிய ஓய்விடம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ளது வெள்ளரிக்கோம்பை கிராமம். இவ்வூர் தொன்மையான ஆலுகுறுமர், இருளர் பழங்குடி மக்கள் வாழும் மலைக்கிராமம் ஆகும். இவ்வூரை சுற்றியுள்ள எழுத்துப்பாறை, தொளிக்கிப் பாறை ஆகிய இடங்களில் பதிவான ஓவியங்கள் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றவையாகும். கடந்த மார்ச் மாதத்தில், யாக்கை அறக்கட்டளை குழுவினர் இங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது, இவ்வூரின் வடமேற்கு திசையில் உள்ள “ஊர் பரெ(ஊர் பாறை)” எனுமிடத்தில் பாறை ஓவியத்தொகுப்பு ஆவணப்படுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பழங்குடி மாவட்டம் என்று அழைக்கத் தகுதிவாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஆறு அழிநிலைப் பழங்குடிக் குழுக்கள் வாழ்கின்றனர். இதில் குறுமர் எனும் பழங்குடி மக்கள் குன்னூர், கோத்தகிரி வட்டாரத்தில் வனங்களுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் தீவிர சடங்குகளில் ஈடுபடுகின்றனர். வாழ்வின் பல்வேறு படிநிலைகளையும் சடங்குகளால் கடத்தும் வல்லமையைக் கொண்டுள்ளனர். செவ்வியல் இலக்கியங்களில் சொல்லப்படும் மலை உச்சிகளில் தெய்வங்கள் உறையும் எனும் தொல்நம்பிக்கை இவர்களின் வழிபாட்டு நம்பிக்கையில் எஞ்சியிருப்பது காணமுடிகிறது. இங்கு வாழும் குறுமர் பழங்குடி இன மக்கள் மரபார்ந்த தொழில்நுட்ப அறிவு, சூழலியல் அறிவு மிக்கவர்களாக விளங்குகின்றனர். இதுகுறித்து விரிவாக “நீலமலைத் தொல்லியல்” நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பகுதியில் மேலும் புதிதாக ஒரு பாறை ஓய்விடம் வெளிவந்திருப்பது இப்பகுதியின் தொல்லியல் வரலாற்றை மேலும் செம்மைப்படுத்தும் சான்றாக அமைகிறது.
ஊர் பரெ என்று பழங்குடி மக்கள் அழைக்கும் இவ்விடம் கடப்பதற்கு சவாலான இடமாகும். மலையின் பாறைச் சரிவில் சுமார் 450 மீட்டர் தூரம் ஏறிச்சென்று காணக்கூடிய அமைப்பில் உள்ளது. இந்த மலையின் உச்சியில் பல இடங்களில் ஊற்றுகள் உள்ளன. மழைக்காலங்களில் பெரிய அருவியைப்போல இம்மலைப் பரப்பு முழுவதும் நீர்க்கொட்டுவதால் இந்த இடத்திற்குச் செல்வது சாத்தியமில்லை. கோடைக் காலங்களில் மட்டுமே இங்கு செல்ல முடியும். அதுவும் பழங்குடி மக்கள் தேனெடுக்கப் பயன்படுத்தும் கொடியேணியைப் பயன்படுத்தியே இங்கு செல்லமுடியும். இவ்விடம் பழங்குடி மக்கள் தேனெடுக்கும் சடங்கில் ஈடுபடும்போது நாட்களில் ஓய்வெடுக்கும் இடமாகவும் விளங்குகிறது.
ஊர் பரெ பாறை ஓய்விடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீ உயத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பு 1030 செ.மீ. நீளமும் 1100 செ.மீ. உயரமும் கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 638 செ.மீ நீளமும் 540 செ.மீ. உயரமும் கொண்ட பரப்பில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றில் முப்பது ஓவியங்கள் அடையாளம் காணக்கூடிய வகையிலுள்ளது. சில இடங்களில் தெளிவற்ற உருவங்களும் பதிவாகியுள்ளன. இவை, முழுவதும் செஞ்சாந்து நிறத்தில் வரையப்பட்ட ஒற்றை நிறத்தன்மை உடைய ஓவியமாகும். இந்த ஓவியத் தொகுப்பை அதன் வரைகலை தன்மையில், நுண் கோடுகளால் வரையப்பெற்றவை, தடித்தக் கோடுகளால் வரையப்பெற்றவை, வடிவியல் குறியீடுகளை இணைத்து உருவம் கொண்டுவரும் பாங்கில் வரையப்பெற்றவை என வகைப்படுத்தலாம்.
நீலகிரி மலையில் இதுகாறும் கிடைத்த ஓவியங்களில் ஊர் பரெ பாறைக் கலைப்படைப்புகள் கருப்பொருள் தன்மையில் தனித்துவம் பெறுகின்றன. இங்கு பதிவான ஓவியங்கள் கருப்பொருள் தன்மையில், கூம்பு வடிவ தலைப்பாகை கொண்ட மிகை மாந்த உருவங்கள், மிகைசக்தியாகக் காட்டப்பெற்ற மாந்த உருவங்கள், நீண்ட கால்களை உடைய மாந்த உருவங்கள், ஏணி போன்ற உடலமைப்பு கொண்ட மாந்த உருவங்கள், செவ்வக வடிவ கட்டத்தில் புள்ளிகள் இட்டு நிரப்பப்பட்ட சடங்குக் குறியீடுகள் என பன்மைக் கருப்பொருளுடன் பதிவாகியுள்ளன. ஊர் பரெ ஓவியங்களின் கருப்பொருள் பழங்குடி மக்களின் மீயியல் உருவங்களின் மீதான நம்பிக்கை, மீயியல் சடங்கு வழக்கங்களைக் காட்டும் ஆவணங்கள் தொடர்பானவை என்பதை அறிய முடிகின்றது. ஊர் பரெ ஓய்விடத்திற்கு அருகிலுள்ள எழுத்துப் பாறை, தொளிக்கிப் பாறை ஆகிய ஓய்விடங்களில் பதிவான ஓவியங்கள் மீயியல் தன்மையில் இருப்பினும், மூன்று இடங்களும் ஒன்றுக்கொன்று உருவ வடிவம், வெளிப்படுத்தும் மீயியல் நம்பிக்கைகளில் மாறுபட்ட பண்புகளை வெளிப்படுத்துகின்றன. மிகை மாந்த உருவம் ஒன்று சுமார் 40 செ.மீ. உயரம் அளவில் பெரியதாகவும், சடங்குப் புள்ளிகள் 3 மி.மீ. அளவில் சிறியதாகவும் காணமுடிகின்றது. நீலகிரி மலையில் வெள்ளரிக்கோம்பை சுற்றுவட்டப் பகுதியில் மட்டும் இத்தகு தன்மையிலான ஓவியங்கள் கிடைத்திருப்பது மானுடவியல் பார்வையில் இங்கு வாழும் மக்களின் தொடர்புறவுகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது.
ஊர் பரெ ஓய்விடத்தில் வெவ்வேறு காலவெளியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியத்தொகுப்பில் பல்வேறு அடுக்குகளில் மீளவும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதைக் கொண்டு இதனை அறியலாம். எழுத்துப்பாறை ஓய்விட ஓவியங்கள் அதிகபட்சமாக நான்கு வெவ்வேறு பண்பாட்டுக் காலவெளியில் வரையப்பெற்றவை என யாக்கை வெளியிட்ட “நீலமலைத் தொல்லியல்” நூலில் தொழில்நுட்ப உதவியுடன் நிறுவி உள்ளனர். இங்கும் அதுபோன்று கால அடுக்குகளைப் பகுப்பாய்வு செய்யும்போது எவ்வளவு பண்பாட்டுக் கால இடைவெளி என்பதை அறிய முடியும்.
ஊர் பரெ ஓய்விடம் மழை நீர்க் கசிவினால் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. ஓவியங்கள் வரையப்பெற்ற பாறையின் மேற்பரப்பில் தொடர்ந்து நீர் வழிந்து பாசிகள் வளரத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் பூச்சிகள் மண்கூடு கட்டியுள்ளன. சூழல் மாசுக்கள் ஓவியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் படிந்துள்ளன. தொல் மாந்தர்களின் இருப்பைப் பதிவு செய்யும் இவ்வகை ஓவியங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததிகளுக்கு தர வேண்டிய கடமை நம் சமூகத்திற்கு உண்டு. தொன்மையான மக்கள் சமூகத்தின் ஆவணமாக விளங்கும் ஓவியங்களைப் பாதுகாக்க தேவையான செயல்திட்டங்கள் கொண்டுவர வேண்டும். கடினமான இவ்விடங்களுக்கு செல்வது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆகவே, நீலகிரியின் தொல்லியலை ஆய்வுசெய்ய விரும்பும் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு தேவையான படங்கள், தரவுகளை வழங்க யாக்கை அறக்கட்டளை தயாராக உள்ளது.
நன்றி: ஊர் பரெ பாறை ஓவியங்கள் குறித்த செய்தியை வெளியிட்ட New Indian Express, The Hindu, Deccan chronicle, தினகரன், தினமணி நாளிதழ் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நம் நன்றி.