02/09/2026
பேரன்பின் விஜய்... நாயகனாகத்தான் உங்களை ரசித்தேன்; வியந்தேன்; பாராட்டினேன்; சீராட்டினேன். ஆனால், ‘ஜன’நாயகனாக உங்களின் செயல்பாடுகளை வியக்க முடியவில்லை; பாராட்ட முடியவில்லை; சீராட்ட முடியவில்லை!
அதிமுக - திமுகவிற்கு மாற்று அரசியல் தேவை என்றுதான் உங்களுக்கு மட்டுமல்ல, வேட்பாளர்கள் யார் என்றுகூட பார்க்காமல், நீங்கள் கைகாட்டியவர்களுக்கெல்லாம் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், ஒட்டுமொத்த அரசியல் தந்திரவாதிகளையும் தூக்கி விழுங்கி, ‘மகா நடிகன்’ என நிரூபித்துக் விடுவீர்கள் போல! வென்றுவிட்டோம் என்ற எகத்தாளத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் தோற்றுவிடாதீர்கள், விஜய்.
ஆட்சிக்கு வந்து 100 நாட்களைத்தான் கடந்திருக்கிறீர்கள். அதற்குள், விஜய்தான் பிரதமர் என புகழ் பாடுகிறார்கள். “வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க” என்பதை சீரியஸ் ஆக கூவிக்கொண்டிருக்கிறார்கள். கேட்டால், CM ஆக நினைத்தபோதும் விஜய்யை இப்படித்தான் கேலி செய்தார்கள். ஆனால், ஒரே தேர்தலில் CM ஆகவில்லையா? என கேள்வி எழுப்புவார்கள். அதெல்லாம், புளூ சட்டை மாறன் போல் விமர்சகராக இருக்கும்வரைதான்! தற்போது, தமிழ்நாட்டிற்கே இயக்குநர் ஆகிவிட்டீர்கள்.
இனி உங்களின் இயக்கம்; செயல்பாடுகள் சரியில்லையென்றால், ஆயிரமாயிரம் விமர்சகர்கள் எழும்பிக்கொண்டே இருப்பார்கள். வேட்பாளர் யாரென்றே தெரியாமல் வாக்களித்தார்கள். ஆனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் செயல்பாடுகளை மதிப்பீடு செய்துதான் வாக்களிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
உண்மையில் இந்த 100 நாள் ஆட்சியில் “வாய் மட்டும்தான் அசையுது மத்ததெல்லாம் அப்படியேத்தான் இருக்கு” என்ற ‘போக்கிரி’ பட காமெடியைப்போல்தான் ‘வாய்ப்பேச்சு... ரீல்ஸ் ரீச்சு...’ என மோடியை இன்ஸ்பிரேஷனாக்கி, மோடியையே முந்த துடித்துக்கொண்டிருக்கிறீர்கள். மோடியை நம்பும் மக்கள் நம்மை நம்பமாட்டார்களா? போட்டோ ஷூட்டிலேயே ஆட்சியை பிடித்துவிடலாம் என்றெல்லாம் கணக்கு போட்டு ‘ரூட்டு’ போட்டு கொடுக்கிறார்களோ உங்களது ஆலோசகர்கள்?
“மோடி பில்லா... கில்லாடி ரங்கா” என படமே இயக்கலாம் என்கிற அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இனி ரெண்டு பேருக்குள்ளதான் போட்டி. ஒன்று தவெக... இன்னொன்று பாஜக! ஏன், ஒலகத்துகே பிரதமர் வேட்பாளரா அறிவித்துவிட வேண்டியதுதானே? ஆட்சியமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த உங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் முதலில் ஆதரவுக் கொடுத்தது. ஆனால், அவர்களுக்கே நெருக்கடி கொடுக்கும் விதமாக அமைச்சர்கள் பேரானந்தப் பள்ளு பாடுகிறார்கள். உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட்களையே டெர்ரரிஸ்ட் ரேஞ்சுக்கு நடத்திவிட்டீர்கள். இப்போது, காங்கிரஸையும் டார்கெட் செய்கிறீர்கள்!
பிரதமர் கனவு இருப்பதில் தவறில்லை. ஆனால், நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் ஐந்தாண்டுகள் நல்லாட்சியை கொடுங்கள்! உங்களது நிர்வாகம்; ஆளுமைத் திறன்களை நிரூபியுங்கள். இது, எதையுமே செய்யாமல், 'அகிலத்தின் தலைவனே... பிரபஞ்ச நாயகனே.... உலகாளும் தளபதியே... அண்ட சராசரங்களின் அதிபதியே' ரேஞ்சுக்கு எப்படி புகழ்பாட முடிகிறது? அதையும் நீங்கள் பேரானந்தத்தோடு ரசித்துக் கொண்டிருப்பது எப்படி?
இப்படியே தொடர்ந்தால்... ‘தென்னாட்டு மோடி’ என அழைக்கவேண்டியிருக்கும் போல!
- வினி சர்பனா