27/07/2026
தமிழக அரசே! வனத்துறையை!
காட்டு யானைகளின் படுகொலையை தடுத்து நிறுத்து!!
வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.
சட்டவிரோதமாக சோலார் மின்வேலிகளில் மாற்று மின்சாரம் (AC) செலுத்தப்படுவதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை வெளிப்படையாக மீறுவதோடு, சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
மேலும், மேட்டுப்பாளையம்-ஊட்டி பிரதான சாலையோர வனப்பகுதிகளில் யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகள் தடுப்பு சுவர்கள், புதிய கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டுள்ளதால், அவை தங்களது இயல்பான வழித்தடங்களை பயன்படுத்த முடியாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழையும் சூழல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக மனித–யானை மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதேபோல், விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பெயரில் பட்டாசுகள் மற்றும் பிற ஆபத்தான பொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய செயல்கள் யானைகளுக்கு கடுமையான காயங்களையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகின்றன.
விவசாயிகளின் உயிரும், வாழ்வாதாரமும், வாழை, கரும்பு போன்ற பயிரிடப்பட்டவைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், வனவிலங்குகளை கொல்லும் நோக்கத்துடன் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவோருக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படக் கூடாது.
எனவே, SDPI கட்சி கோவை வடக்கு மாவட்டம் தமிழக அரசையும், மேட்டுப்பாளையம் வனத்துறையையும் வலியுறுத்துவது:
🔊 சட்டவிரோதமாக மின்வேலிகளில் மாற்று மின்சாரம் (AC current) செலுத்துவோர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
🔊 யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளை உடனடியாக அடையாளம் கண்டு பாதுகாத்து, ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
🔊 மனித–யானை மோதல்களை குறைக்கும் வகையில் அறிவியல் அடிப்படையிலான நிரந்தர தீர்வுகளை செயல்படுத்த வேண்டும்.
🔊 வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, வனவிலங்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முழுமையாக தடுக்க வேண்டும்.
🔊 விவசாயிகளின் பாதுகாப்பையும், வனவிலங்குகளின் உயிர் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் நீடித்த திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
வனவிலங்குகளை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நமது அரசியலமைப்பு மற்றும் மனிதநேயக் கடமையாகும். எனவே, இதுபோன்ற உயிரிழப்புகள் இனி மீண்டும் நிகழாத வகையில் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என SDPI கட்சி கோவை வடக்கு மாவட்டம் வலியுறுத்துகிறது.
S. அஷ்ரப் அலி,
மாவட்டச் செயலாளர்,
SDPI கட்சி, கோவை வடக்கு