28/08/2026
நேபாள இமயமலைத் துயரம் : நமக்கு இயற்கை விடுக்கும் எச்சரிக்கை.
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மனிதர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களின் மரணங்களையும், பொருளாதார அழிவையும், சொல்லில் அடங்காத துயரத்தையும் விட்டுச் சென்றுள்ளது.
இமயமலையில் பனிக்கட்டியும் பாறையும் உருகி தகர்ந்ததால், கட்டுக்கடங்காத வெள்ளமும், சேறும் கலந்த பேரலை சாலைகளையும், பாலங்களையும், குடியிருப்புகளையும் அடித்துச் சென்றுள்ளது.
நேபாளத்திலும், திபெத் பகுதியிலும் இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மீட்புக் குழுக்கள் தேடுதலைத் தொடர்ந்து வருவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் இந்திய யாத்ரீகர்களும் உள்ளதாகவும், தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளின்போது, 130-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்களும் இந்தப் பேரிடரில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே சமயம், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் சற்று ஆறுதல் அளிக்கிறது.
இயற்கைப் பேரிடரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காணாமல் போனவர்கள் மீண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்களுடன் உறுதுணையாக நாங்களும் உணர்வு ரீதியாக உடனிருக்கிறோம்.
இச்சவாலான சூழலில் மீட்புக் குழுவினர் ஒவ்வொரு உயிரையும் பத்திரமாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், உடமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்கள் தங்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான மனவலிமையையும் ஆதரவையும் பெற வேண்டும் எனவும் விழைகிறோம்.
இந்திய அரசு உடனடி நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது ; எனினும் இப்பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நேபாள அரசுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, கூடுதல் மீட்புக் குழுக்களையும் மனிதாபிமான உதவிகளையும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன், அங்குள்ள இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தாயகம் அழைத்து வருவதை உறுதிசெய்து, இந்நெருக்கடியான தருணத்தில் நேபாளத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் இந்தியா தொடர்ந்து வழங்க வேண்டும்
நிவாரணப் பணிகளுக்கு அப்பால், இத்துயரம் நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது.
இமயமலை வெறும் பாறைகள் சூழ்ந்த மலைகள் மட்டுமல்ல. அவை இயற்கை அரண்கள். தெற்காசியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் முக்கியமான சூழலியல் அமைப்பு.
இயற்கையை, வளர்ச்சிக்குத் தடையாகப் பார்க்கும் மனப்போக்கை நாம் இனியும் தொடரக் கூடாது.
கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் தீவிர காலநிலை மாற்றம் ஆகியவை இமயமலையின் மென்மையான சூழலை நிலைகுலையச் செய்து பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. பனிப்பாறை உடைவால் நிகழ்ந்த இப்பேரிடர், இமயத்தின் பலவீனமான தன்மையை மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளதாக சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்கள், உரிய தாக்க மதிப்பீடுகள், பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் காலநிலையைத் தாங்கும் உள்கட்டமைப்புகள் ஆகியவையே இப்போதைய அவசரத் தேவை.
இயற்கையைச் சிதைக்காத வளர்ச்சி மூலம் சூழலியல் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.
இது நேபாளத்தைப் பற்றியது மட்டுமல்ல.
இது இந்தியாவுக்கான எச்சரிக்கை. இது இமயமலைக்கான எச்சரிக்கை. இது உலகிற்கான எச்சரிக்கை.
அடுத்த பேரழிவுக்காகக் காத்திராமல் இப்போதே செயல்படுவோம்.
இயற்கையைப் பாதுகாப்போம். சூழலியல் சமநிலையை மீட்டெடுப்போம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவோம். இன்னும் தாமதிக்காமல் விரைந்து செயல்படுவோம்.
நேபாளப் பேரிடரில் உயிரிழந்தோர் மற்றும் மாயமானோரின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுச் சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் என்றும் துணையாக இருக்கும்.