06/09/2026
உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர இணை ஆணையர் உத்தரவு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு!
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், உத்தபுரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் மற்றும் அரசமர வழிபாட்டில் கடந்த 37 ஆண்டுகளுக்குக்கும் மேலாக பட்டியல் சமூக மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக 1989ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதுடன், நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வந்தன. இருப்பினும், இப்பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை.
எனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிப்பேராணை மேல்முறையீட்டு மனு எண் 1624 /2024 வழக்கில், 21.04.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசமர (தலவிருட்ச) வழிபாடு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை சட்ட விதி 63 (e) இன் கீழ் விசாரணை நடத்தி உரிய தீர்வு காணுமாறு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மனு எண் 10/2026 என பதிவு செய்யப்பட்டு, இருதரப்பினரிடமிருந்தும் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் 31.08.2026 அன்று அறநிலையத்துறை இணை ஆணையர் விசாரணை முடிவை வெளியிட்டுள்ளார்.
கோவில் வழிபாடு தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25ஆம் சரத்தின் கீழ் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவும், உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக உடனடியாக தேனி மாவட்ட உதவி ஆணையர் மற்றும் பேரையூர் சரக ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தபுரத்தில் சாதியப் பாகுபாடு, தீண்டாமைச் சுவர் தொடங்கி வழிபாட்டு உரிமை மறுப்பு வரையிலான பிரச்சினைகள் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது.
இதற்காக தொடர்ந்து களத்திலும் சட்ட ரீதியாகவும் போராடிய உத்தபுரம் பொதுமக்களுக்கும் வழக்கறிஞர் ராஜ்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இத்தீர்ப்பை ஏற்று அனைத்து பகுதி மக்களும் ஒற்றுமை நிலையை நாட்ட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.