22/07/2026
மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது Ex MLA வெளியிடும் அறிக்கை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, மக்களின் 40 ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்த அரசு கல்லூரி என்ற கோரிக்கையை நான் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த போது திமுக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி கடந்த 2022 ஆம் ஆண்டு மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.
தற்போது சுமார் 1000 மாணவ மாணவியர்கள் பயிலும் இந்த கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், இதனால் கல்வி பயில வரும் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளவதாகவும் செய்திகள் வருகின்றன.
குடிநீர், பேரூந்து வசதி மற்றும் விளையாட்டு திடல் போன்ற அடிப்படை தேவைகளில் குறைபாடு உள்ளதால் எதிர்வரும் கல்வி ஆண்டில் இக்கல்லூரியில் கல்வி பயில மாணவர்கள் விண்ணப்பிப்பார்களா என கேள்வி எழுந்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறையால் அவதியுறும் நிலையில்,இக்கல்லூரிக்கு சென்று வர இவ்வழியே அரசு பேரூந்து வசதி இல்லாததால் மாணவர்கள் வெகு தொலைவிலிருந்து நடந்து கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.
மணப்பாறை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளில் நலன்கருதி கல்லூரிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், கல்லூரிக்கு செல்ல வசதியாக பேரூந்து வசதியை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ப.அப்துல் சமது Ex.MLA
பொதுச் செயலாளர
மனிதநேய மக்கள் கட்சி
#மணப்பாறை