Kr.Venkadaraman

Kr.Venkadaraman பாட்டாளி மக்கள் கட்சி

19/08/2026
15/08/2026

அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துகள்.!

மது, வேலைவாய்ப்பின்மை, சமூக அநீதியில் இருந்து விடுதலை பெற உறுதியேற்போம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 80-ஆம் விடுதலை நாளை இன்று கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா 78 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத் தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள் தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால், ஆங்கிலேயர்களின் அடிமைத்தளையில் இருந்து மட்டும் விடுதலை பெற்றால் மட்டும் போதுமா? நம்மை சுரண்டும் சக்திகள், மது, போதை, வேலைவாய்ப்பின்மை, சமூக அநீதி, பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமை, சுற்றுச்சூழல் சீரழிவு, கனிமக் கொள்ளை என நாம் விடுதலை பெற வேண்டிய அடிமைத்தளைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை வென்றெடுத்தால் மட்டும் தான் நாம் உண்மையான விடுதலையை பெற முடியும். இந்த இலக்குகளை எட்டும் நாள் தான் நமக்கு உண்மையான விடுதலை நாள்.

கடந்த ஆண்டு இதே நாளில் விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த போது, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிகழ்ந்ததை விட அதிகமான சுரண்டல்களும், அத்துமீறல்களும் நடைபெறும் ஆட்சியை அகற்றுவதே நமது இரண்டாவது விடுதலை என்று தெரிவித்திருந்தேன். அந்த இலக்கை நாம் வென்றெடுத்து விட்டோம். எனினும் அதுமட்டுமே போதுமானதல்ல. நாம் வென்றெடுக்க வேண்டிய இலக்குகள் இன்னும் உள்ளன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மதுவும் போதையும் இன்னும் ஒழியவில்லை; சமூகநீதி தழைக்கவில்லை; வேலைவாய்ப்பு கனவுகள் நனவாகவில்லை. அவற்றையும் நாம் வென்றெடுக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தின் முதல் அடியாக, நாட்டிற்கு விடுதலை தேடித் தந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில் மது இல்லா தமிழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறோம். இந்த பயணத்தின் நிறைவில் நமது அனைத்து இலக்குகளையும் வென்றெடுத்து உண்மையான விடுதலையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை நனவாக்குவதற்காக இன்று முதல் கடுமையாக உழைக்க நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.!

13/08/2026
13/08/2026

5,000 தொகுதி 2, 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 821 இடங்களை நிரப்புவதா? இளைஞர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது!

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தது 3000 பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு &2க்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.

இரண்டாம் தொகுதி பணிகளுக்கு வெறும் 41 பேர் காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றிலும் கூட 4 பணியிடங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாததால் ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே இரண்டாம் தொகுதி பணியிடங்கள் இவ்வளவு குறைவாக நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு 50 பேர் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அந்த வேதனையான சாதனையை இப்போதைய தவெக அரசு முறியடித்திருக்கிறது. இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது.

2011&ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 16 ஆண்டுகளில் 2021, 2021 ஆகிய ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறன்றனர். மிக அதிகமாக 2022&ஆம் ஆண்டில் 6500 பேரும், 2011&ஆம் ஆண்டில் 6241 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஆண்டுகளில் 2025&ஆம் ஆண்டைத் தவிர மற்றவற்றில் குறைந்தது 1086 பேர் முதல் 3842 பேர் வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும் வெறும் 821 பேரை தேர்ந்தெடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். இந்தப் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முதல் 5 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படாதது அரசின் தோல்வி ஆகும்.

2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26, தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் 821 என 2147 பணியிடங்களுக்கு மட்டும் தான் 4 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இவையும் கூட முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை தான். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 50,000 பேருக்கு கூட அரசு வேலைகளை வழங்க முடியாது; அரசுத்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாது. வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் தவெக தோல்வியடையும்.

2026&ஆம் ஆண்டில் தவெக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு தவெக அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். அதை செய்யாமல் இருப்பதை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும். இது தவிர, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

12/08/2026

தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி இழப்பு: மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத் திருத்தம் தேவையற்றது!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தக் கூடிய இச்சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த முன்வரைவின் மூலம் சேர்க்கப்படவுள்ள 9டி பிரிவு மிகவும் ஆபத்தானது. அந்த பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக விதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளால் ஏற்கனவே இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டு, அதை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும் போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை. கனிமங்கள், அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும் தான் வரி விதிக்க முடியும்.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த முன்வரைவு மாநில அரசின் வரி விதித்து, வருவாய் ஈட்டும் அதிகாரத்தைப் பறிக்கிறது. நிலங்கள், கனிமங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கூட, வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதை பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முயல்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

2025&26ஆம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்ட அம்சங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ரூ.4100 கோடி வருவாய் ஈட்டியது. 2026&27ஆம் ஆண்டில் இந்த வருவாயை ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழ்நாட்டின் கனிமவளங்கள் முறையாக கையாளப்பட்டால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும். எந்தெந்த வகைகளில் எல்லாம் இந்த வருவாயை ஈட்ட முடியும் என்பதை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி தெளிவாக விவரித்திருக்கிறது.

சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு சட்டம் 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டு விட்டது. மதிப்புக் கூட்டு வரி, மோட்டார் வாகன வரி, பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் கனிமங்கள் மீதான வரிகள் மூலமாகத் தான் மாநில அரசுகள் தங்களுக்கான வருவாயைத் திரட்ட வேண்டியுள்ளது. அதையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்களை முடக்கி மக்களுக்கு எந்த வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தான் இந்த சட்டத் திருத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெற்றது. கனிமக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததைத் தொடர்ந்து கனிமக் கொள்ளைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றின் மீது பல்வேறு வரிகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தவணை முறையிலும் செலுத்தலாம் என்று சலுகை வழங்கப்பட்டதால், அவற்றில் பெரும்பாலான தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. இப்போது கனிமச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கனிமக் கொள்ளை நடத்தியவர்களிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய வருமானம் தடைபடும் ஆபத்து உள்ளது.

கனிமங்களைத் தாங்கி நிற்கும் நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் கடந்த 25.07.2024ஆம் நாள் தீர்ப்பளித்த 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாக அறிவித்தது. அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தங்கள் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது. எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தவெக அரசு வந்த பிறகு சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் Sowm...
11/08/2026

தவெக அரசு வந்த பிறகு சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் Sowmiya Anbumani மற்றும் கணேஷ்குமார் ஆகியோரின் உரைகளை மக்கள் இன்று நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. Pattali Makkal Katchi முன்வைக்கும் யோசனைகளைக் கண்ட மக்கள் அதைப் பாராட்டுவதோடு, சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நேரலை ஒளிபரப்பை திராவிட அரசுகள் முன்பே அமல்படுத்தி இருந்தால், பாமக இன்று அதிகாரத்தில் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆண்டுகளாக ஊடகங்கள் மேற்கொண்ட இருட்டடிப்பை, இன்று Gen Z இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் உடைத்தெறிகிறார்கள். இதுவே பாமகவின் வரும் காலத்திற்கு நல்ல அறிகுறி!

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kr.Venkadaraman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share