15/08/2026
கத்தாரில் GFK Bowling Night – Season 5 சிறப்பாக நடைபெற்றது!
கத்தார் வாழ் கல்முனை உறவுகளிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், Gulf Federation for Kalmunai (GFK) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “GFK Bowling Night – Season 5” கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை கத்தாரில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கத்தார் வாழ் கல்முனை உறவுகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். வெறும் விளையாட்டுப் போட்டியாக மட்டுமன்றி, உறவுகளை ஒன்றிணைத்து அவர்களிடையே நட்புறவு, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர உதவியை மேலும் வலுப்படுத்தும் சந்தர்ப்பமாகவும் இந்நிகழ்வு அமைந்தது.
ஐந்தாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்வு, GFK உப தலைவர் முஹம்மத் இஜாஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
Bowling போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற ஒன்றுகூடலில், GFK தலைவர் முஹம்மத் றிகாப் உரையாற்றி, அமைப்பின் நோக்கம், கடந்தகாலப் பணிகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக, கத்தார் வாழ் கல்முனை உறவுகளை மேலும் ஒன்றிணைத்து, ஒருவருக்கொருவர் உதவும் வலுவான சமூக வலையமைப்பை (Community Network) உருவாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, GFK முன்னாள் தலைவர் முஹம்மத் அன்வர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, GFK உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் சமூகப் பங்களிப்புகள் குறித்து எடுத்துரைத்ததுடன், அமைப்பின் எதிர்காலப் பயணத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கத்தாரில் செயற்பட்டு வரும் GFK அமைப்பானது, குடும்ப ஒன்றுகூடல்கள் (Family Gatherings), பெருநாள் சந்திப்புகள் (Eid Gatherings), கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் மற்றும் Bowling நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் மூலம் கத்தார் வாழ் கல்முனை உறவுகளிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து வருகின்றது.
அதேவேளை, GFK தனது செயற்பாடுகளை கத்தாருடன் மட்டுப்படுத்தாமல், தாயகமான இலங்கையிலும் சமூக மற்றும் மனிதாபிமான உதவிகளை (Community & Humanitarian Support) முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, அவசர மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் கத்தார் வாழ் கல்முனை உறவுகளின் பங்களிப்புடன் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது.
எதிர்காலத்தில், கத்தாரில் வேலைவாய்ப்பைத் தேடி வரும் கல்முனை உறவுகளுக்கு தேவையான வழிகாட்டல் மற்றும் உதவிகளை (Employment Support) வழங்குவதுடன், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சிகளை (Career Guidance Programmes) ஏற்பாடு செய்வதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. GFK-இன் எதிர்காலப் பயணத்தை மேலும் வலுப்படுத்த கத்தார் வாழ் கல்முனை உறவுகள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.
Bowling போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளை ABM.றினோஸ் சிறப்பாக முன்னெடுத்தார்.
மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்கள் (Winners) மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்கள் (Runners-up) ஆகியோருக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் GFK அமைப்பின் செயலாளர் முஹம்மது ஜெஸ்னி அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டதுடன், GFK Bowling Event – Season 5 இனிதே நிறைவடைந்தது.
தகவல்: ஊடகப் பிரிவு (GFK-Q)