31/05/2026
ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் எம். கோபாலகிருஷ்ணன் – 15ஆம் ஆண்டு நினைவு நாள்
தோழர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் திண்டிவனம் தாலுக்கா, மயிலம் ஒன்றியம், பெரியண்டப்பட்டு கிராமத்தில் ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். தனது தந்தையை இழந்த நிலையிலும், முதுமையடைந்த தாயாரின் பொறுப்புகளுக்கு மத்தியிலும், தன்னை முழுமையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) இயக்கப் பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டார்.
தனது சொந்த கிராமத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகப் போராடத் தொடங்கிய அவர், பின்னர் மயிலம் ஒன்றியம் முழுவதும் செயல்பட்டு, காலடிப்படாத கிராமங்கள் இல்லாத அளவுக்கு மக்களோடு இணைந்து பணியாற்றினார்.
திண்டிவனம் தாலுக்கா முழுவதும் சுற்றித் திரிந்து, வாலிபர் சங்கத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
மயிலம் ஒன்றிய செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், அன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
குறிப்பாக உறுப்பினர் சேர்க்கைப் பணியில் சிறப்பாக செயல்பட்டு, மயிலம் ஒன்றியத்தில் 8,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை DYFI-யில் இணைத்த பெருமைக்குரியவர்.
தனது குடும்பம் கடுமையான வறுமையில் வாடியபோதும், மூன்று பிள்ளைகள் பசியால் தவித்தபோதும், இயக்கப் பணிக்கே முன்னுரிமை அளித்த அவரது தியாகமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் முன்மாதிரியாகும்.
அவரது உழைப்பையும் இயக்கப் பற்றையும் மதித்து, 2010ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் அவர் விழுப்புரம் மாவட்ட DYFI மாவட்ட பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திருக்கோவிலூர் பகுதி பொறுப்பாளராகவும் திறம்பட செயல்பட்டார்.
2012ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முடித்துவிட்டு, திருக்கோவிலூரிலிருந்து தனது சொந்த ஊரான பெரியண்டப்பட்டு கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தோழர் கோபாலகிருஷ்ணனின் மறைவு, ஒரு மகத்தான தலைவரையும், துடிப்புமிக்க போராளியையும், அர்ப்பணிப்பு மிக்க இயக்கத் தோழரையும் வாலிபர் சங்கம் இழந்த துயரமான நிகழ்வாகும்.
அவரது தியாகமும் போராட்டப் பயணமும் என்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்!
செவ்வணக்கம் தோழரே! 🚩