21/02/2022
செல்வி ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்து, தன்னுடைய ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார். மக்களால் முதல் பெண் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர். 1999-ல் இருந்து கட்சிக் கூட்டங்களுக்கோ, இதர விசேஷங்களுக்கோ எப்போது சென்றாலும் தன் கட்சியின் செயல்பாடுகள் பற்றியும், எதிர்க்கட்சி செய்யும் தவறுகள் பற்றியும் குட்டிக்கதைகளாகச் சொல்ல ஆரம்பித்தார். அதில் ஒரு கதையை பார்ப்போம்
‘‘ஒரு மரத்தின் அடியில்... பகல் நேரத்தில், ஓர் இளைஞன் காலை நீட்டி... கைகளைப் பரப்பிப் படுத்துக் கிடந்தான். அந்தப் பக்கம் வந்த ஒரு பெரியவர்... அவனைப் பார்த்து, ‘தம்பி, இந்த வயதிலே உனக்கு இத்தனை சோம்பலா... உழைக்க வேண்டிய வயதல்லவா இது’’ என்றார். அதற்கு இளைஞன், ‘ஏன் உழைக்க வேண்டும்’ என திருப்பிக் கேட்டான். ‘பணத்துக்காக’ என்றார் அந்தப் பெரியவர். ‘பணம் எதற்காக’ என்றான் இளைஞன். ‘வீடு, கார் வாங்கலாம்; திருமணம் செய்யலாம்; குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியாய் இருக்கலாம்’ என்றார் பெரியவர். ‘பிறகு...’ என்றான் இளைஞன். ‘குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்; வேலை வாங்கித் தரலாம்; நல்ல சம்பளம் வாங்கச் செய்யலாம்’ என்றார் பெரியவர். இளைஞன் கேட்டான், ‘அதற்குப் பிறகு?’ ‘அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்; பேரக் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்றார். இளைஞன் விடவில்லை. ‘அதற்கு பிறகும்’ என்ன என்றான். ‘ஓய்வாக இருக்கலாம்; நிம்மதியாகக் கால்களை நீட்டித் தூங்கலாம்’ என்றார் பெரியவர். உடனே அந்த இளைஞன், ‘அதைத்தானே... இப்போது செய்துகொண்டு இருக்கிறேன். சென்று வாருங்கள்’ என்றானாம். ‘எனக்கு நன்றாக வேண்டும். வாயை மூடிக்கொண்டு வந்தவழியைப் பார்த்தபடியே போயிருக்கலாம்’ என்று புலம்பியபடியே போனாராம், அந்தப் பெரியவர்.
இந்தக் கதையிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? நம் நாட்டு மக்களுக்கு என்ன குறை... அறிவில் குறையா? இல்லை, ஆற்றலில் குறையா? இல்லவே இல்லை. அப்புறம் என்ன குறை? ஊக்கம் இல்லை என்பது குறை... உழைப்பு போதாது என்பது குறை. வளர்கின்ற நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறது அந்தச் சமுதாயம். அங்கே பணக்காரர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலதிபர்களும் நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். வளர்ந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணம் உழைப்புதான். உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள், கசப்பாக இருக்கலாம்; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை. உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உங்கள் அன்புச் சகோதரியாகிய நான்... நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?’’ என்று சொன்ன... அந்த ஜீவன், இப்படித் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்ததால்தான் என்னவோ தெரியவில்லை... நம்மைவிட்டுப் போய்விட்டது.
Edappadi K. Palaniswami O. Paneerselvam All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing D Jayakumar