SDPI வேட்டுவப்பாளையம் கிளை

  • Home
  • India
  • Tirupur
  • SDPI வேட்டுவப்பாளையம் கிளை

SDPI வேட்டுவப்பாளையம்  கிளை பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்துவிடுதலை
அணைத்து சமூக மக்களுக்கான அரசியல்

04/06/2026

மீன்பிடி துறைமுகங்களை சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டம்:

மீனவர்களின் சுதந்திரத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது! - SDPI கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தியாவின் கடற்கரைப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் உள்ள 1,200 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) கீழ் கொண்டு வர ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் இத்திட்டத்தால் தமிழகத்தில் உள்ள சென்னை - காசிமேடு தொடங்கி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களும், நூற்றுக்கணக்கான மீன்பிடி இறங்கு தளங்களும் மத்திய பாதுகாப்புப் படையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நிலை உருவாகும்.

விமான நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பொதுத்துறை பெருநிறுவனங்களுக்குரிய கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை மீன்பிடி துறைமுகங்களில் திணிப்பது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் படகுகளும் வந்து செல்லும் ஒரு சுறுசுறுப்பான பணியிடமே இத்துறைமுகங்கள் ஆகும். இங்கு பயோமெட்ரிக் கண்காணிப்பு, ஸ்மார்ட் அடையாள அட்டை, கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகள் என்ற பெயரில், சொந்த மண்ணிலேயே மீனவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஒரு உளவுப் பிரதேசமாக மாற்றும் முயற்சி நடக்கிறது. துறைமுகத்திற்கு வரும் சாதாரண தொழிலாளர்களிடம் துப்பாக்கி ஏந்திய மத்தியப் படையினர் காட்டக்கூடிய அணுகுமுறை, பெரிய அளவிலான மோதல்களுக்கும் அச்ச உணர்வுடன் கூடிய சூழலுக்கும் வழிவகுக்கும்.

இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளும் சோதனைகளும் மீன் வணிகத்தின் வேகத்தைக் குறைப்பதோடு; மீனவர்கள், சுமை தூக்குவோர், வியாபாரிகள் மற்றும் ஐஸ் ஃபேக்டரி ஊழியர்கள் சுதந்திரமாக வேலை செய்யும் சூழலை முடக்கி, அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும். மேலும், இந்த இ-பாதுகாப்புக்கான பெரும் தொகையை 'துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணமாக' (Harbour User Fee) தொழிலாளர்களிடமிருந்தே வசூலிக்க வாய்ப்புள்ளது, இது ஏற்கனவே நலிவடைந்துள்ள மீன்பிடித் துறையை மேலும் வீழ்த்தும்.

காலங்காலமாக எவ்வித தடையுமின்றி கடலுக்குச் சென்று வரும் நம் பாரம்பரிய மீனவ குடும்பங்களை, கார்ப்பரேட் நிறுவனங்களின் காவலாளிகள் போல சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மூலம் கட்டுப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. சாதாரண மனிதர்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கும் துறைமுகங்களை, 'மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக' (Strategic Zones) அறிவித்து, கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான சதி முயற்சியே இதற்குப் பின்னால் உள்ளது.

கடல்சார் பாதுகாப்பு மத்திய அரசின் கீழ் வந்தாலும், 12 கடல் மைல் வரையிலான மீன்பிடித் தொழில் மற்றும் கடலோர வாழ்வாதாரங்களை முறைப்படுத்தும் முழு அதிகாரமும் மாநில அரசுகளுக்கே உரியது. மாநில அரசுகளிடமோ அல்லது சம்பந்தப்பட்ட மீனவ பிரதிநிதிகளிடமோ எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக இத்தகைய கண்காணிப்பு முறையைத் திணிப்பது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும், மீனவர்களின் ஜனநாயக உரிமைகளையும் அப்பட்டமாகச் சீர்குலைக்கும் செயலாகும்.

எல்லையோரக் கடலில் இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே அன்றாடம் இன்னல்களுக்கு உள்ளாகும் நம் மீனவர்களுக்கு, உள்நாட்டிலேயே மத்திய பாதுகாப்புப் படைகள் மூலம் புதிய நெருக்கடியை உருவாக்குவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களின் கலாச்சாரத்தையும், உரிமைகளையும், தன்னாட்சியையும் சிதைக்கும் இந்த மக்கள் விரோத நடவடிக்கையிலிருந்து ஒன்றிய அரசு உடனடியாகப் பின்வாங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். மாநிலத்தின் உரிமையைக் காக்கவும், லட்சக்கணக்கான தமிழக மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இத்திட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாகத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

மீனவ சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் இந்த வாழ்வாதாரப் போராட்டத்தில், ஒட்டுமொத்த மீனவ அமைப்புகளுடனும், கடலோர மக்களுடனும் எஸ்டிபிஐ கட்சி எப்போதும் தோளோடு தோள் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chief Minister of Tamil Nadu

04/06/2026

நீண்ட கோடை விடுமுறைக்குப் பிறகு, புத்துணர்ச்சியோடும் புதிய இலக்குகளோடும் இன்று மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி என்பது வெறும் புத்தக அறிவை மட்டும் வளர்ப்பதல்ல; அது உங்களைச் சிறந்த மனிதர்களாகவும், சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்கும் உன்னதக் கருவியாகும்.

​ புதிய வகுப்புகளுக்கு செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவரும் சாதி, மத பேதங்களைக் கடந்து சக மாணவர்களுடன் அன்போடும் சகோதரத்துவத்தோடும் பழக வேண்டும். அத்துடன், உங்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

​ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை நல்வழியில் வழிநடத்த வாழ்த்துகிறேன். மாணவர்கள் அனைவரும் இந்த புதிய கல்வியாண்டில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி, நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்க எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

01/06/2026

தஞ்சையில் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடிய விவசாயிகள் மீதான காவல்துறை அத்துமீறல் கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும், பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை மேற்கொண்ட அத்துமீறல்களும், கைது நடவடிக்கைகளும் கடும் கண்டனத்திற்குரியவை.

தேர்தல் களத்தில், "விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் வகையில் அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.

விவசாயிகளைத் தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் ஏமாற்றும் செயலாகும். 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார முறை என்றும் அரசு அறிவித்திருப்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்துக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஜனநாயக ரீதியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், காவல்துறையைக் கொண்டு அவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

எனவே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்றும் வகையில், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் உடனடியாக, முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

01/06/2026

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்வி - அரசு மருத்துவர்களுக்கான 50% உள் இடஒதுக்கீடு பறிபோகும் ஆபத்து!

தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் காக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வீரியமாகப் போராட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல; அவை பல கோடி ஏழை, எளிய மக்களின் உயிரைக் காக்கும் உன்னத இடங்கள் ஆகும். இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற மிக முக்கியமான, உயர்தர மருத்துவப் படிப்புகளில் (Super Speciality), தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கென 50% உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்திப் பெற்ற இந்த உரிமை, இன்று தமிழக அரசின் மெத்தனப்போக்கால் பறிபோகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 215 இடங்களில், கடுமையான தகுதி மதிப்பெண் (Cut-off) நிபந்தனைகளால் தற்போது வரை 74 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை ஒன்றிய அரசின் ‘அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு’ (All India Quota) தாரை வார்ப்பதற்கான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

வழக்கமாக இது போன்ற சூழல்களில் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து, முதலில் தமிழக மருத்துவர்களைக் கொண்டுதான் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், தமிழக அரசின் பலவீனமான வாதத்தாலும், தவறான அணுகுமுறையாலும் நமது மாநில இடங்கள் வெளிமாநிலத்தவருக்குச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்தக் காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்குத் தாரை வார்ப்பது ஏழை, எளிய பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இதன் விளைவாக, சிக்கலான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஏழை நோயாளிகள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து, தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது தமிழக பொது சுகாதாரத் துறையையே ஒட்டுமொத்தமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தகுதி மதிப்பெண்களைக் குறைக்கும் போதெல்லாம், அதே சலுகையைத் தமிழக அரசு மருத்துவர்களுக்கும் நீட்டித்து, காலி இடங்களை நமது மாநில மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும். கடந்த காலங்களைப் போல உச்ச நீதிமன்றத்தில் வலுவான, வீரியமிக்க சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் தமிழக அரசு உடனே பாதுகாக்க வேண்டும்.

ஆகவே, தமிழக மருத்துவர்களின் உரிமையையும், ஏழை எளிய மக்களின் இலவச உயர் சிகிச்சைக்கான உரிமையையும் நிலைநாட்ட, சட்டப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

31/05/2026

அரசமைப்புச் சட்டத்தின் மத உரிமைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் குர்பானி தடை உத்தரவு விவகாரம்:

தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பக்ரீத் பெருநாள் அன்று எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை அரசு அனுமதியுள்ள பதிவு செய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பலியிடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு, இஸ்லாமியப் பெருமக்களின் சமய உரிமைகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொன்றுதொட்டு விலங்குகளைப் பலியிட்டு வழிபடும் வழக்கம் கொண்ட தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பூர்வகுடி சமூகங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

இந்துத்துவ ஆதரவாளரால் தொடரப்பட்ட இந்த வழக்கில், பக்ரீத் பண்டிகையின் முதல் நாள் அன்று மாலை இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்பதை உணர்த்துகிறது. பண்டிகைக் காலத்தையும், அதற்குப் பிந்தைய சூழலையும் இலக்கு வைத்து இத்தடை அமலாக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் ஆபத்தான போக்காகும். இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய சட்டப் பொறுப்பு இருந்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்திற்கே வழிவகுக்கும்.

நீதியரசர் அவர்களின் உத்தரவின்படி, அரசு அனுமதி பெற்ற இடங்களைத் தவிர பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி, தனி நபர்களின் சொந்த இடங்களிலும் மாடு உள்ளிட்ட எந்தவொரு கால்நடையையும் பலியிடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு, இஸ்லாமியர்களின் 'குர்பானி' கடமையை முடக்குவது மட்டுமல்லாமல், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும், அனைத்து சமூக மக்களின் பாரம்பரிய உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கும். இத்தகைய ஆபத்தான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை மேல்முறையீடு செய்யாமல் மௌனம் காப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, வடமாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க இந்துத்துவ அமைப்புகள் முயன்றுள்ளன. அதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குர்பானி கொடுப்பதற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுகளும், இந்துத்துவ அமைப்புகளுடன் இணைந்து காவல்துறை மாடுகளைப் பறிமுதல் செய்த கண்டனத்திற்குரிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. காவல்துறையின் கண்காணிப்பை மீறி, இத்தகைய கும்பல்கள் மாடுகளைக் கைப்பற்றும் அத்துமீறல்களில் ஈடுபடுவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவான போதிலும், தமிழக அரசோ அல்லது தமிழக முதல்வரோ இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது சரியல்ல. முக்கியமாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏமாற்றமளிக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சமூக நீதித்துறை அமைச்சரும் தங்களுக்குரிய பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஷாஜகான் அவர்கள் துறை சார்ந்த எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த விவகாரத்தில் அச்சத்தில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குத் தைரியம் அளிக்கும் வகையிலான உடனடி ஆறுதல் நடவடிக்கைகளை அவர் அரசுடன் இணைந்து மேற்கொண்டிருக்க வேண்டும். எனவே, இந்த குர்பானி தடை உத்தரவு விவகாரத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு வெறும் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல; இது கால்நடைகளை பலியிடும் பாரம்பரிய வழக்கம் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் எதிரானது என்பதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வரும் மதச் சடங்குகளையும், பண்டிகைக் கால வழிபாட்டு உரிமைகளையும் மக்கள் வழக்கம்போல அச்சமின்றித் தொடர்வதை அரசு உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

29/05/2026
27/05/2026

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போது நடைபெறும் குர்பானி நிகழ்வு, காலம் காலமாகப் பிற மதத்தினரோடு இணைந்த ஒரு சிறந்த சமூக நல்லிணக்க விழாவாக, எவ்விதப் புகாரோ இடையூறோ இன்றி அமைதியான முறையில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

​தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இந்த எளிய பாரம்பரிய நடைமுறையில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்ற கவலையையும் அதிர்ச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பானது நீதிமன்றம் சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் நுழைந்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.எனவே, தமிழக அரசு மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதற்குரிய சட்டப்பூர்வ மேல்முறையீட்டு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

​மேலும், இந்தத் தீர்ப்பின் பின்னணியில் தேவையற்ற பதற்றமோ அச்சுறுத்தலோ ஏற்படாத வண்ணம், சிறுபான்மை மக்களின் குர்பானி போன்ற வழிபாட்டு உரிமைகளையும் பக்ரீத் கொண்டாட்டங்களையும் அரசு நிர்வாகமும் காவல்துறையும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். சட்டத்தின் கடமையும் சமூக நடைமுறையும் இணைந்து செல்வதே உண்மையான ஜனநாயகம் என்பதால், அரசு இதில் உரிய கவனம் செலுத்தி நல்லதொரு தீர்வைக் காண வேண்டும்.

​- முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

27/05/2026

தியாகத்தின் மேன்மையை பறைசாற்றும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னதமான தியாக வாழ்வை நினைவுகூரும் இந்நாள், நமக்குள் தியாக சிந்தனையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் விதைக்கும் நன்னாளாகும். சமூகத்தின் அறியாமையை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும், ஏதேச்சதிகார சக்திகளுக்கு எதிராக சமரசமின்றிப் போராடியதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிச்சலும், அறிவாற்றலும், அர்ப்பணிப்பும் நமக்கான மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

தியாகத்தை போற்றும் இந்நாளில், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்படவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நாம் உறுதியேற்போம்.

மக்களிடையே அன்பும், பரஸ்பர பாசமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரவும்; உலகெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கம் தழைத்தோங்கவும் இப்புனித நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

- முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

27/05/2026

வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வருவாய் ஆவணங்களை வழங்க வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

​வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசின் ‘உமீத்’ (UMEED) இணையதள ஆவணச் சரிபார்ப்பைக் காரணம் காட்டி, உத்தரப் பிரதேசத்தில் 31,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்களின் பதிவுகள் மிக அவசரமாக ரத்து செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் மற்றும் அவர்களின் மத ரீதியான உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்தோடுதான் பாஜக அரசால் இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

​பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் வழிபாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்து வரும் மசூதிகள், தர்காக்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள் போன்ற பாரம்பரிய பயன்பாட்டு வழி வக்ஃப் சொத்துக்களுக்கு (Waqf by user), முறையான டிஜிட்டல் வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்திற்காக வக்ஃப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அரசு நிலங்களாக மாற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி வரும் இத்தகைய சிறுபான்மை விரோத, வக்ஃப் சொத்து பறிப்பு நடவடிக்கைகள் போன்றதொரு இக்கட்டான நிலை தமிழகத்தில் உள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு எக்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

​ஒன்றிய பாசிச பாஜக அரசின் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (JPC) பரிசீலனையில் இருந்தபோதே, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அந்த மசோதாவிற்கு எதிராகத் தற்போதைய தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது மாநில மாநாட்டிலும், கொள்கை அறிவிப்புகளிலும் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, வக்ஃப் சட்ட திருத்தத்தைக் கொள்கை ரீதியாக எதிர்க்கும் தார்மீகக் கடமை ஆளும் கட்சிக்கு உண்டு.

​ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும், குறிப்பாக வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத பாரம்பரிய பயன்பாட்டு வழி அடக்கஸ்தலங்கள், தர்காக்கள் மற்றும் மசூதிகளைக் கண்டறிந்து, அவற்றிற்குரிய பட்டா, வரைபடம் மற்றும் வருவாய் ஆவணங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்க வருவாய்த்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

​மேலும், தமிழக வக்ஃப் வாரியத்தின் பதிவுகளையும், மாநில வருவாய்த்துறையின் நிலப் பதிவேடுகளையும் முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்த்து, அதில் உள்ள தொழில்நுட்ப மற்றும் ஆவண முரண்பாடுகளை அரசு நிர்வாகமே முன்நின்று சரிசெய்ய வேண்டும்.

​எதிர்காலத்தில் ஒன்றிய அரசின் எவ்விதத் தவறான டிஜிட்டல் ஆவணக் கெடுபிடிகளும் தமிழக வக்ஃப் நிலங்களைப் பாதிக்காத வண்ணம், அவற்றுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். வக்ஃப் சொத்துக்கள் என்பவை ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக முன்னோர்களால் இறைவழியில் அர்ப்பணிக்கப்பட்ட அறக்கட்டளைச் சொத்துக்கள் ஆகும். அவற்றை பாசிச சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது சமூக நல்லிணக்கத்தை விரும்பும் மக்கள் அரசின் கடமையாகும்.

​எனவே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில், முந்தைய திமுக அரசு மேற்கொண்ட சட்ட ரீதியான வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போன்று, வக்ஃப் சொத்துக்களைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளைத் தவெக அரசும் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chief Minister of Tamil Nadu

26/05/2026

தவெக அரசின் விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது!

தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது விவசாயிகளைத் தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் செயலாகும். ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார முறை என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பைத் தமிழக முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் விவசாயிகளைச் சிறு, குறு, பெரு விவசாயிகள் எனத் தரம் பிரிப்பது அநீதியானது. அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான உற்பத்திச் செலவைத்தான் எதிர்கொள்கின்றனர். எனவே, நிலத்தின் ஏக்கர் கணக்கில் பிரிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் அடிப்படையில் கணக்கிட்டுத் தள்ளுபடி வழங்க வேண்டும்.

மேலும், தற்போதைய அறிவிப்பால் 2 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டவர்களும்; கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற தோட்டப் பயிர்களைச் சாகுபடி செய்த விவசாயிகளும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடன் தள்ளுபடிக்கான கால வரம்பை 2025 மே என்று சுருக்காமல், 2024 ஆம் ஆண்டிலிருந்தே கணக்கிட்டு நீட்டிக்க வேண்டும்.

கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற தவெக-வின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு, இந்த அறிவிப்பின் மூலம் தற்போதைய அரசு 'அல்வா' கொடுத்து ஏமாற்றியுள்ளது. இதனால் தவெக அரசுக்கு வாக்களித்த விவசாய பெருங்குடி மக்களும், விவசாய அமைப்புகளும் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

எனவே, தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தொகையையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Address

Tirupur
641663

Telephone

+919786517144

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI வேட்டுவப்பாளையம் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI வேட்டுவப்பாளையம் கிளை:

Share