24/03/2026
'இந்திக்காரன்', 'வடக்கன்' என வடபுலத்து மக்களை எல்லா இடது, வலது, புரட்சிகரத் தமிழ்தேசியம் பேசும் ஆர்வக் கோளாறுகளும் எந்த வேறுபாடும் இல்லாமல் இகழ்ந்து கொண்டிருக்கும் இதே காலத்தில் - அதே வடபுலத்து மாணவர்களும், பேராசிரியர்களும் பெரியாரியலை மிகத் தெளிவாகப் பரப்புரை செய்து கொண்டிருக்கின்றனர்.
பீகாரைச் சேர்ந்த பேராசிரியர் அரவிந்த் அவர்களும், மராட்டியத்தைச் சேர்ந்த பேராசிரியர் சஞ்சய் அவர்களும், அவர்களோடு இணைந்த தோழர்கள் இளையகுமார், விமல்பிரகாஷ், கலியபெருமாள், அரவிந்த், தம்பாட்டி, மணிமதன், இரஞ்சித், வினிதா, பிரகலாதன், இலக்கியா, கோகுல்ப்ரியன், சங்கீதா, வெற்றிச் செல்வி, தீபன், அனுஷ், நிகில், நீலேஷ்.....
போன்ற JMI, DU, JNU மாணவர்களும் இணைந்து புதுடெல்லி Don Bosco மய்யத்தில் மார்ச் 19, 20 ஆகிய இருநாட்களில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
Revamp, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாநாட்டில் இந்தியாவின் முக்கியப் பல்கலைக்கழகங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், 100-க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒரே நேரத்தில் 3 அரங்குகளில் என 9 அமர்வுகளில் 58 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வழியாகத் தலைமை உரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் Prince Ennares Periyar ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.
கல்வியாளர்கள், பேராசிரியர்கள், உயர்கல்வி மாணவர்களின் ஆய்வுப் பார்வையில் ஆங்கிலத்தில் பெரியாரைக் காணும் வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவும், பல புதிய பொறுப்புகளை ஏற்றியுள்ள நிகழ்வாகவும் ஆனது.
பெரியார் காலத்திலிருந்தே பல்வேறு தோழர்கள், அமைப்புகள் பெரியாரியலை வடமாநிலங்களில் கொண்டு சேர்த்து வந்துள்ளனர். எங்கள் தலைமுறைக்குரிய பங்கை திராவிடர் தளம், SFD சார்பில் நாங்களும் செலுத்தினோம்.
வடபுலத்தில் இதுவரை நடக்காத அளவிற்கு மிகப் பெரும் அளவில் கூடுதலாகப் பெரியாரியலைக் கொண்டு செல்ல உரிய வேலைகளைத் திட்டமிடுகிறோம். அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறோம். பணிகளைத் தொடர்வோம்!