11/06/2026
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணக் கோட்டை (Jaffna Fort) என்பது வெறும் கற்களால் ஆன தற்காப்பு அரண் மட்டுமல்ல; அது தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த மிக முக்கிய இராணுவ ஆதிக்கத்தின் அடையாளமாக விளங்கியது.
1987-இல் தியாக தீபம் திலீபன் தனது உண்ணாநோன்புக் களத்தில் நின்றபோது, "யாழ்க் கோட்டையிலே நமது புலிக்கொடி பறக்க வேண்டும்” என்று ஒரு வரலாற்றுப் பெருங்கனவை விதைத்தார். அவர் மறைந்து சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து, 1990 செப்டம்பர் 26 அன்று, ஒரு நவீன போரியல் அதிசயத்தோடு அந்தக் கனவு எப்படி நனவானது?
1990ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அமைதிப்படை (IPKF) இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்தன.
1990 June மாதத்தில் "இரண்டாம் கட்ட ஈழப்போர்" வெடித்தது.
போர் தொடங்கிய உடனே, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த பெரும்பாலான இராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன் விளைவாக, யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதியில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்க் கோட்டைக்குள் இலங்கை இராணுவத்தினர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, நாற்புறமும் முற்றுகையிடப்பட்டனர்.
இலங்கை சிங்க ரெஜிமென்டின் (6th Sinha Regiment) 200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், உள்ளூர் காவல் துறையினரும் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டனர்.
கோட்டைக்குள் இருந்த வீரர்களில் மிக மூத்த அதிகாரியான கேப்டன் ஜெயந்த பெர்னாண்டோ (Lt. Jayantha Fernando)கோட்டைக்கு பொறுப்பாக இருந்தார்.
விடுதலைப் புலிகள் கோட்டையைச் சுற்றித் துப்பாக்கி மற்றும் மோர்ட்டார் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், உள்ளே இருந்த இராணுவத்தினருக்கு உணவு, குடிநீர் மற்றும் வெடிபொருட்கள் தீர்ந்துபோகும் பேராபாயம் ஏற்பட்டது.
கோட்டைக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்த இந்த முற்றுகையால் கோட்டையிலிருந்த வீரர்களுக்கு உணவு, ஆயுதங்கள் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் போனது.
படுகாயமடைந்த வீரர்களை வெளியேற்ற முடியாததால், அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்தது
இதற்காக இலங்கை விமானப்படை ஆபத்தான மீட்புப் பணியை 1990 ஜூலை 3 அதிகாலையில் செயல்படுத்தியது , அதன் பெயர் Operation Eagle.
புலிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மீட்பு ஹெலிகாப்டரைப் பாதுகாக்க, முதலில் 'SIAI Marchetti SF.260' ரக போர் விமானங்கள் மூலம் புலிகளின் நிலைகள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது.
பெல் 212' (Bell 212) ரக ஹெலிகாப்டர் ஒன்று, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கோட்டையின் கங்குப் பகுதியில் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து தரையிறங்கியது.
ஹெலிகாப்டர் தரையிறங்கிய சில நிமிடங்களில், கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் கோட்டையினுள் விரைவாக இறக்கப்பட்டன.
அதே நேரத்தில், அங்கிருந்த படுகாயமடைந்த வீரர்கள் மற்றும் சடலங்கள் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த ஆபத்தான துணிகர நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததால், அது அப்போது இலங்கை இராணுவத்தினரின் மத்தியில் பெரும் பலத்தையும் மன உறுதியையும் ஏற்படுத்தியது.
எனினும் முற்றுகைக்குள்ளான தமது வீரர்கள் முற்றிலுமாக அழியும் நிலையில் இருப்பதை உணர்ந்த இலங்கை அரசு, அவர்களை மீட்கவும் யாழ் நகரைக் கைப்பற்றவும் இரு முக்கிய கூட்டு இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டது.
இந்த ஒட்டுமொத்தப் பணிகளையும் வடக்கு பிராந்திய தளபதியான மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ முன்னின்று வழிநடத்தினார்.
கோட்டை முற்றுகையை உடைக்க தரை, கடல், வான் என முப்படைகளையும் இணைத்து "ஆபரேஷன் திரிவித பலய" (Operation Thrividha Balaya) தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் தரைவழித் தாக்குதலை வழிநடத்த இலங்கை இராணுவத்தின் இரு முக்கியப் படைப்பிரிவுகள் களமிறக்கப்பட்டன:
இந்த இரு படைப்பிரிவுகளை வழிநடாத்நியவர்கள் வேறு யாருமல்ல, லெப்டினன்ட் கேணல் கோத்தபாய ராஜபக்ச -காஜபா ரெஜிமென்ட் (1st Gajaba Regiment) மற்றும் லெப்டினன்ட் கேணல் சரத் பொன்சேகா -சின்கா ரெஜிமென்ட் (1st Sri Lanka Sinha Regiment).
கோட்டைக்கு வெளியிலிருந்து கோத்தபாயவும், சரத் பொன்சேகாவும் எத்தனையோ நவீன ஆயுதங்களோடு முற்றுகையை உடைக்க முயன்றனர்;
கோட்டைக்குள்ளே இருந்த ஜெயந்த பெர்னாண்டோவின் படைகளும் தங்களால் இயன்றவரை எதிர்த்து நின்றன.
"இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் முற்றுகையை உடைத்துவிடுவோம்" என்ற நம்பிக்கையோடு இலங்கை இராணுவம் நகர்ந்துகொண்டிருந்த அந்தத் தருணத்தில்தான், போர்க்களத்தின் திசையையே மாற்றிய அந்த அதிர்ச்சி அரங்கேறியது.
கோட்டையை நோக்கிப் பாய்ந்து வந்தன சில விசித்திரமான எறிகணைகள்!
அவை சாதாரண ஆயுதங்கள் அல்ல; தமிழ் மக்களின் சொந்தக் கண்டுபிடிப்பான கொடிய பிரம்மாண்ட எறிகணை.
விடுதலைப் புலிகளின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவின் சொந்தப் பொறியியல் அறிவைக் கொண்டு, உள்நாட்டிலேயே இந்த அதிரடி எறிகணையை வடிவமைத்திருந்தார்கள்.
அதன் வெடிப்புத் திறனும், அது ஏற்படுத்திய பேரழிவும் இலங்கை இராணுவம் அதுவரை போர்க்களத்தில் கண்டிராத ஒன்று!
கோட்டையின் தடிமனான சுவர்களையும், இராணுவத்தின் தற்காப்பு அரண்களையும் துண்டு துண்டாக உடைத்தெறிந்தது அந்த மோட்டரின் தாக்குதல்.
உக்கிரத்தைத் தாங்க முடியாமல், கோட்டைக்குள் இருந்த இராணுவத்தினரின் மன உறுதி முற்றிலும் துகள்களாக நொருங்கிப் போனது.
அங்கே என்ன நடக்கிறது? அங்கே தாக்குவது யார்? என்ன ஆயுதம் அது?" என்று மண்டைதீவில் பதற்றத்தோடு காத்திருந்த சரத் பொன்சேகாவும், கோத்தபாய ராஜபக்சாவும் உளவுத் தகவல்களைத் திரட்டியபோது அவர்களுக்குக் கிடைத்த ஒரே பதில்: "அங்கே தாக்குவது பசிலன்!"
சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த முற்றுகை அதிரடித் தாக்குதலால் இலங்கை இராணுவம் வரலாறு காணாத உயிர்ச் சேதங்களைச் சந்தித்தது. மேலும் கோட்டையைத் தக்கவைப்பது சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கோட்டையிலிருந்து படைகளைப் பின்வாங்க அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார்.
"பசிலன்" என்ற ஒற்றைப் பெயரைக் கேட்டதுமே, இனியும் கோட்டைக்குள் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்த இராணுவத்தினர், தங்களின் தளபதிகளான கோத்தபாயவும் சரத் பொன்சேகாவும் மண்டைதீவில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தலைதெறிக்க மண்டை தீவை நோக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.
நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி, "பசிலன்" என்ற ஒற்றைப் புலிப் போராளியின் நினைவாக இதற்கு "பசிலன் 2000" எனப் பெயரிடப்பட்ட அந்த எறிகணை கோட்டையில் ஆக்கிரமித்திருந்த அத்தனை சிங்களப் படைகளையும் விரட்டியடித்தது.
இதன்படி, 1990 செப்டம்பர் 26 அன்று, இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றிலும் கைவிட்டு, மண்டைதீவை நோக்கி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பின்வாங்கினர்.
இராணுவம் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில், விடுதலைப் புலிகளின் படையினர் கோட்டையினுள் நுழைந்து, அதன் மிக உயர்ந்த கொடிக்கம்பத்தில் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர்.
அன்று தியாக தீபம் திலீபனின் மூன்றாம் ஆண்டு நினைவுத் தினம். தாயகத்தின் ஊர் எங்கும் உள்ள கோயில் வளாகங்களில் மேடை போட்டு ஒலிபெருக்கியில் திலீபனின் ஐந்தம்ச கோரிக்கைகள் பற்றிய பேச்சுகள் உணர்வுப்பூர்வமாக ஒலித்துக் கொண்டிருந்தன.
திடீரென அந்தப் பேச்சுகள் நிறுத்தப்பட்டு, ஒரு முக்கிய அறிவிப்பு ஒலிபெருக்கியில் இருந்து மக்களின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது:
"கோட்டை வீழ்ந்துவிட்டது... கோட்டையில் புலிக்கொடி பறக்கிறது!"
"கோட்டையில் புலிக்கொடி பறக்க வேண்டும், மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும் அதை 650 போராளிகளுடன் 651வது ஆளாக வானில் இருந்து பார்க்க வேண்டும்" என்று திலீபன் மரணப் படுக்கையில் உதிர்த்த லட்சிய வரிகளில் பாதி அவர் மறைந்த அதே நினைவு நாளிலேயே ஈழ மண்ணில் சாத்தியமானது.
யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வீழ்ச்சிக்கு முதன்மைப் பங்காற்றியது 'பசிலன் 2000' எறிகணை.
வல்லரசு நாடுகளின் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி, தமிழர்களின் சொந்தப் பொறியியல் திறனாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவாக்கப்பட்ட "பசிலன் 2000", உலகப் போரியல் வரலாற்றில் தமிழ் மக்களின் இராணுவ மற்றும் உணர்வுப்பூர்வமான மாபெரும் வெற்றியை என்றென்றும் அழியாத எழுத்துக்களால் செதுக்கியுள்ளது.