05/05/2026
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாகப் பொது வாழ்க்கையில் என்னை அர்ப்பணித்து வருகின்றேன்.
இந்த நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் எத்தனையோ சோதனைகளைக் கடந்து, 2021 முதல் 2026 ஆண்டு வரை சிவகாசி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் அரிய வாய்ப்பை சிவகாசி தொகுதி மக்கள் எனக்கு வழங்கினீர்கள்.
இந்த ஐந்து ஆண்டுகளில், சிவகாசி தொகுதியில் பல சகாப்தங்களாக தீர்வு காணப்படாமல் இருந்த குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பல முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம். குறிப்பாக, பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் காப்பதிலும், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதிலும் எனது பணியை நிறைவாகச் செய்திருப்பதாகவே நம்புகின்றேன்.
கடந்த முறை வாய்ப்பளித்த மக்களுக்கும், எனக்குத் தோள் கொடுத்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய கூட்டணிக் கட்சியினருக்கும், இந்த முறை வாக்களித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களைப் போன்றவர்கள் பல ஆண்டுகள் போராட்டங்களுக்குப் பிறகு பெற்ற இந்த இடங்கள், இன்றைய இளம் தலைமுறைக்கு மிக எளிதாகவும், விரைவாகவும் கிடைத்துவிடுகிறது. எனவே, மக்கள் கொடுத்த இந்த வாய்ப்பை உணர்ந்து, மிகுந்த பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் மக்கள் பணியாற்ற வேண்டும் என வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றியோ, தோல்வியோ... எதுவும் என்னை பாதித்துவிடும் இடத்தில் நான் ஒருபோதும் இருந்ததில்லை. காரணம், நான் வெற்றிகளால் மட்டும் செதுக்கப்பட்டவன் அல்ல; ஆயிரம் தோல்விகளைக் கடந்து இந்த நிலைக்கு உயர்ந்தவன்!
என்றும் உங்கள் சேவையில்,
அசோகன்,
சிவகாசி சட்டமன்றத் தொகுதி.