22/03/2026
சிபிஐ(எம்) மற்றும் DYFI அமைப்பினரின் அதிரடிப் போராட்டத்தால் அம்பலமான படுகொலை:
சிங்கம்புணரி அருகே தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு - 3 பேர் கைது
சிங்கம்புணரி | மார்ச் 22, 2026
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தேனம்மாள்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி மாயமான வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) தொடர் அழுத்தம் மற்றும் களப்போராட்டத்தால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
தேனம்மாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்.
இவரது மனைவி பார்வதி, அவர்களின் மகள் சினேகா.
கடந்த 17.03.2026 அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாதவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது குடும்பத்தினர் கடந்த 19.03.2026 அன்று காலை S.V.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், காவல்துறையினர் இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
களத்தில் இறங்கிய சிபிஐ(எம்) மற்றும் DYFI:
காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் தோழர் A.R. மோகன் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க அவர் உடனடியாக களத்தில் இறங்கினார்.
அவரது வழிகாட்டுதலின்படி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக S.V.மங்கலம் காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
தோழர் சாந்தி - சிவகங்கை மாவட்டக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).
தோழர் சேதுராமன் - சிவகங்கை மாவட்டக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).
தோழர் *சத்தியசீலன்* - சிவகங்கை மாவட்டத் தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI).
தோழர் காந்திமதி - சிவகங்கை மாவட்ட சிங்கம்புணரி தாலுகா செயலாளர், சிபிஐ(எம்).
தோழர் தேன்மொழி - சிங்கம்புணரி கிளைச் செயலாளர், சிபிஐ(எம்).
தோழர் பக்ருதின் - பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர், சிபிஐ(எம்).
தோழர் குமார் - பொன்னமராவதி ஒன்றியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).
தோழர் பாலமுருகன் - பொன்னமராவதி ஒன்றியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்).
மாவட்ட செயலாளர் தோழர் ஏ.ஆர். மோகன் அவர்கள், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் (திருப்பத்தூர் உட்கோட்டம்) DSP அவர்களிடம் நேரடியாக பேசி உரிய அழுத்தம் கொடுத்ததையடுத்து, டிஎஸ்பி அவர்களின் உத்தரவின் பேரில் விசாரணை வேகம் எடுத்தது.
விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்:
விசாரணையில், மாதவன் கடைசியாக எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையம் எதிரே உள்ள மணி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்குச் சென்றது தெரியவந்தது.
அங்கு பணிபுரிந்து வந்த மாதவனின் மனைவியின் சகோதரர்கள் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது வெளியான உண்மைகள்:
சம்பவத்தன்று மாதவன் மற்றும் அவரது மனைவியின் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
மது அருந்தும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இருவரும் சேர்ந்து மாதவனைத் தாக்கியுள்ளனர்.
இதில் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலையை மறைக்க, பண்ணை அருகே குப்பைகள் கொட்டும் இடத்தில் 2 அடி ஆழத்தில் குழியைத் தோண்டி மாதவனின் உடலைப் புதைத்துள்ளனர்.
எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி, அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் வழக்கம்போல பணி செய்து வந்துள்ளனர்.
பண்ணை உரிமையாளர் சந்தேகத்தின் பெயரில் கைது:
புகாரை வாபஸ் செய்யுமாறு மாதவனின் மனைவியை வற்புறுத்திய பண்ணை உரிமையாளர் மணியின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதை சிபிஐ(எம்) தோழர்கள் கண்டறிந்தனர்.
தோழர்களின் விடாப்பிடியான கோரிக்கையை அடுத்து, அவரையும் ஒரு தரப்பாகச் சேர்த்து சந்தேகத்தின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் கொலையாளிகள் இருவருடன் சேர்ந்து பண்ணை உரிமையாளர் மணியும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர்.
உடல் மீட்பு மற்றும் தகனம்:
திருப்பத்தூர் DSP, S.V.மங்கலம், எஸ்.எஸ். கோட்டை, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில், வருவாய்த் துறையினர் (VAO மற்றும் RI) முன்னிலையில் இன்று (22/03/2026) மாலை 4 மணியளவில் மாதவனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு (Post-mortem) செய்யப்பட்ட பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்களின் விருப்பப்படி மாதவனின் உடல் சிங்கம்புணரி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
சாதாரண 'ஆள் காணவில்லை' என முடிக்கப்பட இருந்த வழக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சட்டப் போராட்ட முன்னெடுப்பால் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, படுகொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையின் மெத்தனத்திற்கு எதிராக கட்சித் தோழர்கள் ஆற்றிய இந்தப் பணி பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.