Young Leader Durai Vaiko இளம் தலைவர் துரை வைகோ

  • Home
  • India
  • Kulithalai
  • Young Leader Durai Vaiko இளம் தலைவர் துரை வைகோ

Young Leader Durai Vaiko இளம் தலைவர் துரை வைகோ Member Of Parliament ( Tiruchirapalli )

26/11/2024

*மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க*
*வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி!*

*வைகோ கண்டனம்*

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம் விட்டிருந்தது. அதில் ஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட், டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி ஆந்திரா மாநிலம் பாலேபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 7ஆவது ஏலம் நடத்தப்பட்டது. அதில் மேலூர் நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் (Tungsten) கனிமத்தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் Hindustan Zinc) நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் என்னும் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரிட்டாபட்டி கிராமத்தை 5000 ஏக்கர் (193.215 ஹெக்டேர்) பரப்பளவில் பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சுற்றி ஏழு சிறிய குன்றுகள் உள்ளன. 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக இப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. இப்பகுதி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். மேற்கண்ட குளம், ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

மேலும் இப்பகுதியில், 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன.

கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள அரிட்டாபட்டி கிராமம் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதி என்பதால் இங்கு வாழும் மக்கள் மலைக்குன்றுகளில் இருந்து வரும் மழைநீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சுரங்கம் அமைக்கப்பட்டால் நீர் ஆதாரமான 7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்.

மேலும் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் சுற்றுச்சூழல் தளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள மலைகளில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராஜாளி கழுகு போன்ற 250க்கும் மேற்பட்ட உயிரினங்களும் அழுங்கு மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற அரியவகை உயிரினங்களும் அழிந்து போகும்..

இப்பகுதியில் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், குடைவரைக் கோவில்கள், சமணர்ப் படுக்கைகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சான்றுகள் இத்திட்டத்தால் அழிக்கப்படுவதோடு அருகில் உள்ள பெருமாள் மலையில் உள்ள உயிரினங்களும் அழிக்கப்படும் என்பதால் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 16 பேரைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமான வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்திற்கு மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கும், சுற்றுச் சூழலைக் கெடுப்பதற்கும் மீண்டும் ஒரு அனுமதியை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரிட்டாப்பட்டியில் வேதாந்தா நிறுவனம் கனிம வள சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட எந்த அனுமதியும் வழங்கக்கூடாது,

மதுரை வட்டாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை போன்று இன்னொரு சுற்றுச்சூழல் சீரழிவுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.11.2024

ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் சந்திப்பு. இன்று (07.10.2024) திங்கள்கிழமை மதியம், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் த...
08/10/2024

ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் சந்திப்பு.

இன்று (07.10.2024) திங்கள்கிழமை மதியம், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களை, அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், நமது கழகத்தின் மூத்த உறுப்பினரின் கோரிக்கைக்காக சந்தித்து உரையாடினேன்.

அப்போது, என் கோரிக்கைகளை கவனித்து கேட்டுக் கொண்டதுடன், நம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை நலம் விசாரித்ததாகவும் கேட்டுக் கொண்டார். கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் உறுதியளித்தார்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
07.10.2024

நான், கமிட்டி உறுப்பினராக  பொறுப்பேற்று நடந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் - நாடாளுமன்ற துறைசார் நிலைக்குழுவின்...
08/10/2024

நான், கமிட்டி உறுப்பினராக பொறுப்பேற்று நடந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் - நாடாளுமன்ற துறைசார் நிலைக்குழுவின் முதல் கூட்டம்!

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு Standing Committee எனப்படும் நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராகும் வாய்ப்பு தரப்படும். அதிலும் 24 துறை சார்ந்த நிலைக்குழுக்கள் (டிஆர்எஸ்சி) உள்ளன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 21 மக்களவை உறுப்பினர்களும், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் committee members ஆக இருப்பார்கள். அதன் அடிப்படையில் எனக்கும் துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில், முக்கியமான Committee on Petroleum and Natural Gas துறையில் நிலைக்குழு உறுப்பினராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நானோ அதனை மறுத்துவிட்டு, திருப்பிக் கொடுத்துவிட்டு, என் விருப்பத்தின் படி Committee on Environment, Forests and Climate Change சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய துறையை உள்ளடக்கிய நிலைக்குழுவை தேர்வு செய்து, அதில் உறுப்பினர் ஆனேன்.

Committee on Petroleum and Natural Gas தான் உயர்ந்த கமிட்டி இதை வேண்டாம் என்றுவிட்டு Committee on Environment, Forests and Climate Change ஐ ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்று எல்லோரும் கேட்டபோது… “நான் அரசியலுக்கு வந்து நான்கு ஆண்டுகள் தான் ஆகிறது, ஆனால் நான் என் சிறுவயது முதலே இயற்கை ஆர்வலராக இருந்திருக்கிறேன்.

நாம், நம் பெற்றோர்களிடமிருந்து பெற்ற சொத்து அல்ல, இந்த பூமி; மாறாக, நாம் நம் பிள்ளைகளிடமிருந்து பெற்ற கடன். - என்ற புகழ்பெற்ற கூற்றின் படி பூமியை பாதுகாத்தல் எவ்வளவு முக்கியமானதென்று நான் அறிந்துள்ளேன். எனவே, இதுதான் எனக்கு விருப்பமான, என் இதயத்திற்கு நெருக்கமான கமிட்டி என்றேன்.”

அந்த நிலைக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று (07.10.2024) திங்கள் கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், கமிட்டியின் தலைவர் (Chairperson) திரு. புபனேஷ்வர் கலிடா அவர்கள் பேசிவிட்டு உறுப்பினர்களின் வரிசையில் என்னைப் பேச அழைத்த போது, நான், திருச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், மதிமுகவின் பிரதிநிதி என்று அறிமுகப் படுத்திக்கொண்டேன். அரங்கம் அமைதி காத்தது. உடனே வைகோ அவர்களின் மதிமுக என்றேன் அரங்கத்தில் இருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை பூத்தது.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், வாழ்வாதாரங்களை, இயற்கை வளங்களை பாதுகாக்க பாடுபடும் இயக்கத்தின் சார்பாக வந்திருக்கிறேன்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூட, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பைப் பெற்று தந்த மதிமுகவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்…

மண்வளத்தை கெடுக்கும், காற்று மாசை கொடுக்கும் சீமைக்கருவேல மரத்தை 10 ஆண்டுகளுக்குள் அடியோடு அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட, உயர் நீதிமன்ற ஆணையை பெற்றுக் கொடுத்த இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன்… என்று என் அறிமுகத்தின்போது பதிவு செய்தேன்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவையால் மனித குலம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்துவருகிறது. இதனால், சூறாவளிகள் போன்ற இயற்கை சீற்றங்களால் குறிப்பாக, தென்னிந்தியா வருடா வருடம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளம் 199 மக்களை பலிவாங்கி, உலக நாடுகளின் கவனத்தை பெற்ற பெரும் துயரமாக அமைந்தது. பல்லாயிரம் மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதி இன்றி, குடி நீரில் கழிவு நீர் கலந்து பெரும் இன்னலுக்கு ஆளான சோக வரலாற்றுக்கு சுற்றுச்சூழலை பாதுகாத்து பேணாமல் விட்டதே காரணமாக அமைந்துவிட்டது.

கடந்த ஆண்டு, சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலால் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் மக்களை பெரும் பின்னடையை சந்திக்க செய்தது. தனி நபர் மற்றும் அரசின் பொருளாதார இழப்பு 37 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டது.

அதனை தொடந்து தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில், வானம் இடிந்து பெய்தது போன்று பொழிந்த பெரு மழையால் ஏற்பட்ட மனித மற்றும் கால் நடைகளின் உயிரிழப்பும், தொழிலிழப்பும், பொருளாதார பேரிழப்பும் மக்களை இன்றுவரை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளது.

இது போன்ற இயற்கை சீற்றங்களால் பல லட்சம் உயிரிழப்புகள், பல்லாயிரம் கோடி பொருள் இழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் கனமழை அதிகரித்துக்கொண்டே செல்வது இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

சமீபமாக கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல நூறு குடும்பங்கள் உயிரோடு மண்ணுக்குள் புதைந்த கோர சம்பவம், இந்த ஒரே நாளில் கொட்டிதீர்த்த மழையால் நிகழ்ந்த விபரீதமென்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.

காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இவ்வாறான மாற்றங்களால் மனித குலம் உலகில் வாழ முடியாமல் போகுமோ என்ற பதிலற்ற கேள்வியை சூழலியல் அறிஞர்கள், காலநிலை மாற்றம் குறித்த ஆய்வாளர்களால் எழுப்பப்படுகிறது.

நான் மக்களை சந்திக்கும்போதெல்லாம்… “வாழும் ஊர் சரியில்லை என்றால் பிடித்த ஊருக்கு மாற்றமாகி போக முடியும். வசிக்கும் மாவட்டம் சரியில்லை என்றால் வேறொரு மாவட்டத்திற்கு குடிபெயர முடியும். நாடே சரியில்லை என்றாலும் கூட இன்னொரு நாட்டிற்கு இடம்பெயர முடியும். ஆனால், பூமித்தாய் சரியில்லாமல் போனால், நாம் எங்கு சென்று வாழ முடியும்?” - என்று சிந்திக்கத் தூண்டும் கேள்வியைக் கேட்டு, அதற்கு இயற்கையை பேணிக்காப்பது ஒன்றே தீர்வு என்று சொல்லிவருகிறேன்.

எனவே காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் சார்ந்த இந்த கமிட்டியில் உறுப்பினராக நான் இடம் பெற்றதற்கு என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வதோடு, இது எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதி நான் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

மேலும், நான் அனுபவத்தில் இளையவன், எனவே முன்னாள் ஒன்றிய அமைச்சர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா ஜெயராம் ரமேஷ் அவர்கள் போன்ற மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டுதல் படி சிறப்பாக செயலாற்றுவேன் என்று உறுதியளித்தேன்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை - 8
07.10.2024

மதிமுக முதன்மை கழக செயலாளர் அண்ணன் துரை வைகோ அவர்களது மகள் திருமண பத்திரிக்கையை வைத்து சமூக வலைதளங்களில் பலர் தங்களுடைய ...
07/10/2024

மதிமுக முதன்மை கழக செயலாளர் அண்ணன் துரை வைகோ அவர்களது மகள் திருமண பத்திரிக்கையை வைத்து சமூக வலைதளங்களில் பலர் தங்களுடைய சொந்த கருத்துக்கள் என்ற பெயரில் பலவற்றை தெரிவித்து வருகிறார்கள்.

அதிலும் சிலர் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கருத்துக்களை கூறுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பத்திரிக்கை சர்ச்சை குறித்து அண்ணன் துரை வைகோ அவர்களிடம் இன்று காலையில் நானே போன் செய்து கேட்டேன்.

அவர் சிரித்து கொண்டே எனது மகள் திருமணத்தை முக்கிய தலைவர்கள், குடும்பத்தினர், நமது தோழர்கள் வைத்து எளிமையாக நடத்த வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் நம் மீது அன்புள்ளம் கொண்டவர்கள் இதை சர்ச்சையாக்கி தமிழ்நாடு முழுவதும் விளம்பர படுத்தி உள்ளனர். அவர்களுக்கு என் நன்றி என்றார்.

நான் ஆச்சர்யமாக எண்ண அண்ணா இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டேன்.

இந்த திருமணம் முடிவு செய்த பின் எனது மகளிடம், உங்க தாத்தா திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர் .
உனது திருமணத்தை சீர்திருத்த திருமணமாக நடத்தலாமா என்று கேட்ட போது, அவள் அப்பா என்னுடைய திருமணத்தை இந்து பாரம்பரிய முறையில் நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார். எனது மகளாக இருந்தாலும் அவளது விருப்பத்தை மீறி செயல்பட எனக்கு விருப்பம் இல்லை. அதுபோக மணமகன் வீட்டார் எண்ணமும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. அதனால் தான் அந்த பத்திரிக்கை அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

என் சார்பில் கழக தோழர்களுக்கு அழைப்பதற்கு நமது கழக ஏடான சங்கொலியில் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்ட பத்திரிக்கையை தான் அளித்து இருந்தேன் என்றார்.(இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

நான் இருந்தாலும் அண்ணா ஒரு நல்ல காரியம் நடைபெறும் போது இது ஒரு சர்ச்சையாக கிளப்பும் போது வருத்தமாக உள்ளதே என்றேன்.

அதற்கும் அண்ணன் துரை வைகோ சிரித்து கொண்டே, நான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவன். எனக்கு ஒளிவு மறைவு இல்லை. நான் இறை நம்பிக்கை உடையவன் தான். அதை பொதுவெளியில் நானே தெரிவித்து இருக்கிறேன். கோவில்களுக்கும் செல்கிறேன். ஏன் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவித்த உடன் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்கு தான் சென்றேன். கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் கோவிலுக்கு எதிர்புறம் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவுடன் மற்ற மத வழிபாட்டு தலங்களான மசூதிக்கும் தேவாலயத்துக்கும் சென்று வழிபாடு செய்தேன்.

நான் அரசியலுக்கு வந்த போது கோவிலுக்கு செல்வதை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் திராவிட இயக்கத்தில் உள்ள நீங்கள் கோவிலுக்கு போகிறீர்களே என்றார். நான் அவரிடம் எனக்கு இறை நம்பிக்கை உண்டு என்று தெரிவித்தேன் மேலும் என்னை போன்ற இறை நம்பிக்கை கொண்ட பிற்படுத்தபட்ட மக்கள் இன்று கோவிலுக்குள் செல்ல காரணமானவர் தந்தை பெரியார், மேலும் அவரால் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற்று சமூகத்தில் உயர சமத்துவம் செழிக்க காரணம் அதனால் தான் நான் எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என்றேன்.
தந்தை பெரியார் இல்லாவிட்டால் சமூக நீதி இல்லை; சமத்துவம் இல்லை;
நாம் எல்லோரும் கோவிலுக்கு செல்லும் உரிமை கூட கிடைத்திருக்காது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

அந்த கருத்தில் இன்றும் உறுதியாக இருக்கிறேன்.

எனவே இது குறித்து நான் வருத்தப்பட என்ன இருக்கிறது. நான் அனைவரும் சமம் என்று நினைப்பவன். எனக்கு அனைவரும் ஒன்றுதான். விமர்சிப்பவர்கள் குறித்து நான் எந்த வருத்தமும் அடையவில்லை என்று முடித்தார்.

அண்ணன் துரை வைகோ அவர்களை இந்த நான்கு வருட அரசியல் பயணம் அவரை பண்பட்டவராக மாற்றியுள்ளது. ஏனென்றால் தன்னுடைய மகள் திருமணத்தை ஏற்பாடு செய்து அதற்குரிய பணிகளில் அலைந்து கொண்டு இருக்கும் போது, ஒரு திருமண பத்திரிக்கையை வைத்து கொள்கைவாதிகள் என்ற பெயரில் விமர்சிக்கும் போது நமக்கே கோபம் வருகிறது. ஆனால் அவரோ பண்பட்ட மனிதராக அவர்களுக்கு நன்றி என்கிறார்.

நமது தோழர்கள் விமர்சன கருத்துக்களை புறம் தள்ளுங்கள். நம் மக்கள் நல பணிகளை பாராட்ட முன்வராத அனைவரும் விமர்சனம் செய்வதற்கு ஓடோடி வரும் போதே அவர்களின் நோக்கம் புரிகிறது.

அவர்களின் கருத்துக்களை ஏற்காது நேரத்தை வீண்டிக்காது கடந்து செல்வோம். நமது பணிகளை மேற்கொள்வோம்.

மினர்வா ராஜேஸ்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மதிமுக இணையதள அணி

*மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் -  தீர்மானங்கள்*மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக்...
25/09/2024

*மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் - தீர்மானங்கள்*

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், இன்று 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் :1

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அமைச்சரவை செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று ஏற்றுக்கொண்டு உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று ஒன்றிய அரசு கூறுகிறது.

குழுவின் பரிந்துரைகளின் படி இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83 மற்றும் 172-ஆவது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு பாஜக அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது ஆகும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பதவிக்காலம் முடிவடையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகளை கலைக்க வேண்டியிருக்கும்.

மாநில சட்டப்பேரவை தேர்தல், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வருகிறது. மாநில சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த உரிமையை மாநிலத்திடமிருந்து பறித்துவிடும்.

இது அமலானால் சட்டப்பேரவையை கலைக்கும் உரிமை மாநில அரசிடம் இருக்காது, அதன் கட்டுப்பாடு மத்திய அரசிடம் சென்றுவிடும்.

கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் எந்தத் திருத்தத்தையும் செய்யலாம், ஆனால் அதன் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே நடைமுறை சாத்தியமற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 2

தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறபோது, இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகளாகி விட்டன.

தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்குவதும் இலங்கை மீன்பிடி தடை சட்டத்தின் படி கடுமையாக அபராதம் விதிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்திய அரசு, இலங்கையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரா குமார திசநாயக அரசுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் , கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை மீட்கவும், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் மீது விதித்துள்ள அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என மதிமுக உயர்நிலை குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 3

இலங்கையில் சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் ஈழத் தமிழினம் மீண்டு எழ முடியவில்லை. தங்கள் சொந்த இடங்களை இழந்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், ரத்த உறவுகளை பறிகொடுத்தவர்கள் என்று இனக்கலவரத்தின் துயரங்கள் சொல்ல முடியாத வேதனையை தந்து கொண்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படும் சூழல் அங்கு உருவாகியுள்ளது. தமிழர்களின் ஊர்ப்பெயர்கள் அழிக்கப்பட்டு, அந்த ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அந்த ஊர்களில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுகிறார்கள். புத்த விகாரங்கள் அமைக்கப்பட்டு, புத்தபிக்குகள் குடியேற்றம் உருவாக்கப்படுகிறது. புத்த விகாரங்களில் வழிபட ராணுவத்தினரும், சிங்களரும் அழைத்து வரப்படுகிறார்கள். தமிழர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் இதுவரை திருப்பித் தரப்படவே இல்லை. மாறாக, அவ்விடங்களில் சிங்களர்கள் குடியேற்றம் அமைக்கப்பட்டு, அரசு இடங்களை சிங்களர்களுக்கு தானமாக வழங்குகின்றனர். தொடர்ந்து இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவது தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கக் கூடிய திட்டமிட்ட சதித்திட்டம் ஆகும்.

இந்நிலையில் இலங்கைத் தேர்தலில் ஜேவிபி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று அனுரா குமார திசநாயக அதிபராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

ஈழத் தமிழர்களின் அரசியல் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாத சிங்கள இனவாத ஜேவிபி கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன.

இந்நிலையில் இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க இந்திய அரசு தேவையான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 4

மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக்கெடுப்புக்கான கருவிகள் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணரும், முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழுவை (Standing Committee on Statistics -SCoS) ஒன்றிய பாஜக அரசு கடந்தாண்டு ,2023 ஜூலை 13 ஆம் தேதி மாதம் அமைத்தது.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) அனைத்து புள்ளிவிவர ஆய்வுகளையும் மேற்பார்வையிட அமைக்கப்பட்ட புள்ளியியல் நிலைக்குழுவை ஒன்றிய அரசு கலைத்திருக்கிறது.

குழுவை கலைப்பதாக உறுப்பினர்களுக்கு தேசிய மாதிரி ஆய்வுகள் துறையின் இயக்குநர் கீதா சிங் ரத்தோர் அனுப்பிய மின்னஞ்சலில், “மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழு மற்றும் நிலைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதால், நிலைக்குழுவை கலைக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கணக்கெடுப்பில் தாமதம் மற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாமதம் குறித்து முந்தைய கூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றதாகவும், அது நிலைக் குழுவைக் கலைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் புள்ளியியல் நிலைக்குழுவின் (எஸ்சிஓஎஸ்) உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

புள்ளியியல் நிலைக்குழு தலைவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென், “புள்ளியியல் நிலைக்குழு கலைக்கப்பட்டதற்கானக் காரணத்தை அமைச்சகம் குறிப்பிடவில்லை. அவர்கள் ஒரு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தனர்,“என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்“தரவுகளின் முக்கிய ஆதார மான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் இன்னும் நடத்தப்படவில்லை” என்று கூட்ட ங்களில் தாங்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முறையான காரணமின்றி நிலைக்குழுவின் உறுப்பினர்களுக்குகூட தகவல் அளிக்காமல், அந்த குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.

புள்ளியியல் நிலைக் குழுவின் தலைவரிடம் கூட கலந்து ஆலோசனை மேற்கொள்ளாமல் திடீரென்று குழுவை ஒன்றிய அரசு கலைத்திருப்பது ஐயப்பாடுகளை ஏற்படுத்துகிறது.

2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றாண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கான நலவாழ்வு திட்டங்கள் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமே இந்த ஆட்சியின்போது ஏற்பட்ட கல்வி வளர்ச்சி தெரியவரும். அதுமட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களுக்கும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்துதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மிகவும் முக்கியமாக அடுத்து செய்யப்படவிருக்கும் தொகுதி மறு சீரமைப்பு 2021 சென்சஸ் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும்.

சமூக நீதியை முறையாக செயல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய அரசு புள்ளியியல் நிலைக் குழுவை கலைத்து,மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும் சூழலை திட்டமிட்டே ஏற்படுத்தி வருவது ஏற்கத்தக்கதல்ல.

ஒன்றிய அரசு உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று மதிமுக உயர்நிலைக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ரூ.17,614 கோடி மதிப்பிலான 19 வகை திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார் . இதன் மூலம் 64,968 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்; இதன் மூலம் 41,835 பேருக்கு வேலை கிடைக்கும்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின . இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசின் வேண்டுகோளை ஏற்று ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் செயல்பட முன்வந்துள்ளது. முதல்வரின் அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமுடன் செயல் படும் தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 6

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற இந்து தர்ம வித்யா பீடத்தின் பட்ட மளிப்பு விழாவில் பேசிய ஆர்.என்.இரவி, மதச் சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்து. மதச் சார்பின்மை என்பது ஒரு இடைச்செருகல். இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை என்று பேசி உள்ளார்.

மதச்சார்பின்மை, ஜனநாயகம், மொழிவழி மாநிலங்கள் என்பதெல்லாம் விடு தலைப் போராட்டத்தில் விளைந்த விழுமியங்கள். விடுதலை பெற்ற இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், மொழிகளுக்கிடையே சமத்து வமும் நிலைக்க வேண்டுமானால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக திகழ வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் மதச்சார்பின்மை என்கிற சொற்றொடர் அவசர நிலைக் காலத்தின் போது சேர்க்கப்பட்ட போதும் மொத்த அரசமைப்புச் சட்டமும், மதச் சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் என்ற அடித்தளத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பட்டறையில் உருவான ஆளுநர் ஆர்.என்.இரவி. மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக் கூறி வருவது கண்டனத்துக்குரியது.

ஆளுநர் ஆர்.என்.இரவி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் தொடுத்துள் ளார். அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுள்ள அவர் ஆளுநர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர், உடனடியாக அவரை குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 7

அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை ஒழித்துக் கட்டும் வகையில் வக்ஃபு சட்டம் 1995 திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது பாஜக அரசு.

வக்ஃபு வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களைத் தானமாகக் கொடுத்தனர். இப்படிப்பட்ட சொத்துக்கள்தான் வக்ஃபு வாரியத்தின் சொத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன.

இந்த சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, முஸ்லிம் மக்கள் நலனுக்கான பணிகளை ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம்.

பள்ளிவாசல் பராமரிப்பு, தர்கா பராமரிப்பு, முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றுக்காகச் செலவிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இப்படிப்பட்ட சொத்துகள் தானமாக வழங்கப்பட்டன.

தானமாக வழங்கப்பட்ட இடங்களின் பராமரிப்பையும் கண்காணிப்பையும் வக்ஃபு வாரியம் செய்தாலும், இடங்களை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல காலமாகச் சொத்துக்களைப் பராமரித்து வந்தார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வக்ஃபு வாரியத்திடம் சேர்த்தார்கள். இப்படிச் சொத்துக்களைப் பராமரிப்போரை முத்தவல்லிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த முத்தவல்லிகளை அறங்காவலர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

முத்தவல்லிகள் செயல்பாடுகளை முறைப்படுத்த 1954-ல் உருவாக்கப்பட்டதுதான் வக்ஃபு வாரியம்.

ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த வக்ஃபு வாரியம், முஸ்லிம் பெரியவர்கள் இறைப் பணிக்காக வழங்கிய பெரும் சொத்துக்களைப் பராமரித்துக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றது.

நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதுடன், வக்ஃபு சொத்துகளை அபகரித்து பறிக்கும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டம் 1995 (திருத்தம்) என்ற பெயரிலான மசோதாவை தாக்கல் செய்துள்ளது பாசிச மோடி அரசு.

பொதுவாக ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தங்கள் என்றால் ஒன்று, இரண்டு முதல் 10 திருத்தங்கள் வரை மேற்கொள்வார்கள்.

ஆனால் 40 திருத்தங்களை மேற்கொள்ளப் போகிறோம் என்று அறிவித்து அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள மத உரிமைகளை ஒழித்துக் கட்டியுள்ளது பாசிச மோடி அரசு.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கும் உரிமைகள் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாதா?

மேலும் இத்திருத்தங்கள் மூலம் நாடு முழுவதிலும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 7,85,934 சொத்துக்களைப் பறிமுதல் செய்து விருப்பம் போல் பயன்படுத்த பாஜக அரசு முனைந்து இருக்கிறது.

வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தவர் மற்றும் பெண்களை உறுப்பினர்களாக நியமிக்க இச்சட்ட திருத்தம் முறை செய்கிறது.

இதன் மூலம் வக்ஃபு வாரிய சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை இஸ்லாமியர் அல்லாதவருக்கு வழங்கியுள்ளது இந்த சட்ட திருத்தம்.

வக்ஃபு வாரிய சொத்துகள் மீதான முடிவுகள் எடுக்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியதன் மூலம், வக்ஃபு சொத்துக்களை இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கும் சதியும் அரங்கேறி உள்ளது.

வக்ஃபு வாரியத்திற்கும் அரசுக்கும் அல்லது தனி நபர்களுக்கும் இடையிலான சொத்து விவகாரத்தில் முடிவினை கூறக்கூடிய உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு அளித்ததில் இருந்து வக்ஃபு வாரிய சொத்துக்கள் இனி இஸ்லாமியரிடமிருந்து பறிக்கப்படுவதற்கான சட்டப்பூர்வமான வேலையை பாசிச மோடி அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்துத்துவக் கும்பலின் இஸ்லாமிய வெறுப்பும் வன்மமும், இந்து ராஷ்டிரிய கனவும் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும்.

மோடி அரசுக்கு ஆதரவு நல்கி வரும் நண்பர்களான ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இருவரும், மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, நாட்டின் பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டும் ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் முயற்சிக்கு துணை போகக்கூடாது என்று மதிமுக வலியுறுத்துகிறது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
25.09.2024

மாண்புமிகு முதல்வர் அண்ணன்  மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பா...
11/09/2024

மாண்புமிகு முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகளை கண்டடைவதை, உருவாக்குவதை தன் பெரும் கடமையாக கருதி தமிழ்நாட்டை (One Trillion Dollar Economy) ஒரு ட்ரில்யன் டாலர் பொருளதார மாநிலமாக முன்னேற்றும் மாபெரும் கனவை கண்டு, அதையே இலக்காக நிர்ணயித்து செயல்பட்டுகொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இந்தியாவிலேயே முன்மாதரி மாநிலமாக, சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு (TAMIL NADU Global Investors Meet - 2024) நடத்தப்பட்டது. இதன் மூலமாக பல்லாயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இலட்சியத்தை நோக்கிய பயணத்தின் இன்னொரு முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அவர்கள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில், கூகுள், மைக்ரோ சாஃப்ட் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் துறை (Tech Industries) நிறுவனங்களின் 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை பெற தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுநாள் வரை கையெழுத்தாகியுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்க உள்ளதால், பல்லாயிரக்கணக்கான படித்த, பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் (Jabil Industries) 2000 கோடி ரூபாய் முதலீட்டில் திருச்சி மாவட்டத்தில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னும் பல முதலீடுகள் எனது திருச்சி தொகுதி நோக்கி வர இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன்.

திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
10.09.2024.

ஆகஸ்ட் 15, 78'வது சுதந்திர தினம்..  மாவட்ட ஆட்சித் தலைவருடன் திருச்சியில் கலந்து கொண்டேன்..      இன்று (15.08.2024) திரு...
16/08/2024

ஆகஸ்ட் 15, 78'வது சுதந்திர தினம்.. மாவட்ட ஆட்சித் தலைவருடன் திருச்சியில் கலந்து கொண்டேன்..

இன்று (15.08.2024) திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற 78'வது சுதந்திர தின விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக, திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன்.

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இதே நாளில் தான் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர் தியாகத்தினாலும், சிந்திய வியர்வையினாலும், கொட்டிய ரத்தத்தினாலும், பெறப்பட்டது சுதந்திரம்.

நம்முடைய விடுதலைப் போராட்ட தியாகிகள் தங்களைப் பற்றியும், தங்களின் குடும்பத்தைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் சிறை சென்று, உயிர்த்தியாகம் செய்து நம் நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார்கள். அந்தத் தியாகிகளைப் போற்றும் வகையில், பெறப்பட்ட விடுதலையை ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம்.

பல்வேறு இனங்களையும், மதங்களையும், சாதிகளையும், மொழிகளையும் கொண்டதாக இருந்தாலும் “வேற்றுமையில் ஒற்றுமை “ என்ற அடிப்படையில் தான் நம் நாடு உருவாக்கப்பட்டது.

பலரின் உயிர்த் தியாகத்தால் பெறப்பட்ட இந்த நாட்டின் விடுதலையை பேணிக் காக்கும் விதமாக பிரிவினை சக்திகளை புறக்கணித்து, மனித நேயத்தை அரவணைத்து, சகோதரத்துவத்தை பேணி காப்போம்..!
நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம், பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன், மாவட்ட பொருளாளர் வைகோ பழனிச்சாமி, தொண்டர் அணி ராமர், வட்ட செயலாளர் சாதிக் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
15.08.2024

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து,தமிழகமெங்கும்,மறுமலர்ச்சி திமுக நடத்தும் மாபெரும் கண்டன ...
12/08/2024

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து,

தமிழகமெங்கும்,

மறுமலர்ச்சி திமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்தும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்! வைகோ அறிக்கைநுழைவுத்தேர்வு என்றப் பெயரில் தமிழக மாணவர...
09/08/2024

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்தும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்!

வைகோ அறிக்கை

நுழைவுத்தேர்வு என்றப் பெயரில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, தமிழ்நாட்டில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரை காவு வாங்கிய நீட் நுழைவுத் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் மோசடிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் தலைமையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

மறுமலர்ச்சி திமுக பொருளாளர் மு.செந்திலதிபன், திமுக மாணவர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

நீட் நீக்கப்பட வேண்டும், ஏன்? என்றத் தலைப்பில் கழக மாணவர் அணி நடத்தும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று மறுமலர்ச்சி திமுக குரல் கொடுத்து வருகின்றது. அதற்கு மேலும் வலுசேர்க்கின்ற வகையில் கழக மாணவர் அணி நடத்துகின்ற நீட் எதிர்ப்பு கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர் அணி நிர்வாகிகள், சென்னை மண்டல கழக நிர்வாகிகள் மற்றும் நாட்டின் எதிர்காலமாகிய மாணவச் செல்வங்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ எம்பி
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்'
சென்னை - 08
09.08.2024

Address

Trichy
Kulithalai
639104

Alerts

Be the first to know and let us send you an email when Young Leader Durai Vaiko இளம் தலைவர் துரை வைகோ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Young Leader Durai Vaiko இளம் தலைவர் துரை வைகோ:

Share