27/10/2022
பாஜக 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு, போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை 10 மடங்கு உயர்த்தி உள்ளது. மாநில சுயாட்சி என பேச திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது. இந்த அபராதங்கள் மிக அதிகம் என சட்டத்தை நமது மாநிலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இருக்க வேண்டாமா? மாற்றியமைத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தால், திமுக மாநில சுயாட்சிக்கு தன்னால் இயன்ற முயற்சிகளை செய்கிறது என கூறலாம். அவ்வாறு செய்யாமல் பாஜக சொல்றான்; திமுக செய்றான் என சட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றினால், திமுகவை மத்திய அரசின் அடிமை என கூறுவதை தவிர வேறென்ன சொல்ல முடியும்.
போக்குவரத்து விதிகளை மீறினால் 1000, 5000, 10000 என அபராதம் விதிப்பது சரியான நடைமுறையா? ஒருசிலர் வெளிநாடுகளை உதாரணமாக காட்டி நல்ல சட்டம் என்கின்றனர். வெளிநாடுகளில் விதிமீறினால், அபராதம் விதிக்கப்படும். லஞ்சத்தில் ஊறி திளைக்கும் இந்தியாவில் இது சாத்தியமா? இந்தியாவில் சட்டம் போட்டு ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. சாலைவிதிகளை அனைவரும் பின்பற்றினால் அபராதம் கட்ட தேவையில்லையே என பலர் கூறுகின்றனர். இந்த வாதம் எப்படி உள்ளது என்றால், மக்கள் யாரும் குடிக்கவில்லை என்றால், டாஸ்மாக் அனைத்தும் தானாகவே மூடப்படும் என்பதற்கு சமமானது. அபராதம் விதிக்க வேண்டாம் என கூறவில்லை. ஏற்கனவே 100 என அபராதம் என்றால், தற்போது 200 என்று உயர்த்தலாம். அதை விடுத்து, மக்கள் கட்ட முடியாதபடி 1000, 5000, 10000 என அபராதம் விதித்தால், அது காவல்துறை லஞ்சம் பெறுவதற்கு தான் வழி வகுக்கும்.