04/07/2026
திராவிட முன்னேற்றக் கழக மாற்றுத் திறனாளர் அணி மாநில செயலாளர் பேராசிரியர் திரு T.MN. தீபக் அவர்களின் 02.07.2026 பத்திரிக்கைச் செய்தி,
தலைமையாசிரியர் பொறுப்புகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை முறையாக நடத்திட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக மாற்றுத்திறனாளிகள் அணி வலியுறுத்தல்!
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, விதிமுறைகளுக்குப் புறம்பாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு அரசாணை எண் 6-ன் பிரகாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் பட்டியல் (General) தனியாகவும், 4 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பட்டியல் (Quota) தனியாகவும் பிரிக்கப்பட்டு, காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 29/06/2026 அன்று வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில், பொதுப் பட்டியலில் வர வேண்டியவர்களை உள்ஒதுக்கீட்டுப் கோட்டாவில் கணக்கு காட்டியுள்ளனர். இதனால் கோட்டாவின் கீழ் வரக்கூடிய தகுதியான மாற்றுத்திறனாளிகள் பயனடையாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தம் பதவி உயர்வு வழங்கப்படும் 439 பணியிடங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு 17 இடங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுப் பிரிவுக்குச் சென்றது போக, மீதமுள்ள 13 இடங்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கோட்டாவில் காட்டப்பட்டுள்ளன. இந்த 13 இடங்களில், 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளின் பணிமூப்பு அடிப்படையில் பொதுப் பட்டியலிலேயே (General) சென்றிருக்க வேண்டியவை ஆகும். அதனை உள்ஒதுக்கீட்டுப் கோட்டாவில் கணக்கு காட்டியுள்ளதால், கோட்டாவின் கீழ் வர வேண்டிய மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அப்பட்டமான விதிமீறல் குறித்து, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர்கள், நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் திருமதி. மதுமதி IAS மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திருமதி. லட்சுமி IAS ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, ஆணையர் லட்சுமி IAS அவர்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு. கண்ணப்பன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "கலந்தாய்வை நிறுத்திவிட்டு, கோப்புகளை இன்று (03/07/2026) மாநில ஆணையத்திற்கு எடுத்து வாருங்கள்" என்று அறிவுறுத்தினார். அதற்கு இயக்குநரும் ஒப்புதல் தெரிவித்தார். ஆனால், சொன்னபடி கலந்தாய்வை நிறுத்தாமல், இன்று காலை 8:30 மணி முதல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு மேல் 'இறுதி பட்டியல்' (Final List) வெளியிடப்பட்டது. அதில் 2 மற்றும் 3-ஆம் பக்கங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பரிசீலனை செய்து, சுழற்சி முறையில் பொதுப் பட்டியலையும் கோட்டாவையும் பிரித்துக் காட்டியிருப்பதாகத் தலைப்பை (Title) மட்டும் மாற்றியுள்ளனர். ஆனால், உள்விவரப் பட்டியலில் பொதுப் பிரிவில் இருக்க வேண்டியவர்களை மீண்டும் கோட்டாவிலேயேதான் வைத்துள்ளனர். கடந்த 29/06/2026 அன்று வெளியான பட்டியலில் இருந்த தவறுகளை எதையுமே திருத்தாமல், வெறும் தலைப்பை மட்டும் மாற்றி மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதகமான அப்பட்டமான ஏமாற்றத்தைச் செய்திருக்கிறார்கள்.
இந்த மாற்றுத்திறனாளிகள் அமைச்சகம் முதலமைச்சர் அவர்களின் பொறுப்பில் இருந்தும், இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது மாற்றுத்திறனாளிகளைத் தமிழ்நாட்டில் அனாதையாக விட்டுவிட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முன்பு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வழிகாட்டுதலில், முன்னாள் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக எண்ணற்ற ஏராளமான நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். அவரது காலகட்டத்தில் பதவி உயர்வுகளில் இது போன்ற பிரச்சனைகள் ஒருபோதும் எழுந்ததில்லை.
இவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் வகுத்திருக்கின்ற முறைப்படியும் இந்திய பார்வையற்றோர் இணையம் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வு தீர்ப்பை, முறையாக பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam Deepak Nathan Thangam R DMK ITWing