28/08/2023
தன்னம்பிக்கைக்கு சாட்சி அந்த 644 கொக்குகள்!
இரண்டாம் உலக போரின் காரணமாக ஜப்பான், அமெரிக்காவின் முத்து துறைமுகத்தைத் தாக்கவே அதற்கு பதிலடி கொடுக்க விரும்பிய அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசி தாக்கியது. இத்தாக்குதல் பல லட்சகணக்கான மக்களை இறக்கவும், லட்சகணக்கானோரை பாதிக்கவும் செய்தது .
ஜப்பானின் ஹிரோஷிமாவைச் சேர்ந்த இரண்டு வயது நிரம்பிய சிறுமி சடோகோ ஸசாகியும் இந்த பாதிப்பிலிருந்து தப்பவில்லை .பாதிப்பின் தீவிரத்தை அறியாத சடோகோ மகிழ்ச்சியாகவே தனது பள்ளி வாழ்கையை அனுபவித்தாள். வருடங்கள் ஓடியதே தெரியாத சடோகோ ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்தாள். பள்ளியின் சிறந்த தடகள வீராங்கணையில் ஒருத்தியாக விளங்கிய சடோகோவின் கனவு ‘’ஒரு நல்ல உடற்பயிற்சி ஆசிரியராக வேண்டும்’’என்பதாக இருந்தது .
ஒரு நாள் தனது அணிக்கு அன்றைய வெற்றியை பெற்றுக் கொடுத்த பின்னர், மிக அதிகமான சோர்வையும், தலை சுற்றலையும் உணர்ந்தாள். விளையாட்டின் காரணமாக சோர்வு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணி மற்றவர்களிடம் இது குறித்து கூறவில்லை. மற்றொரு நாள் மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சடோகோ குறித்து சக மாணவர்கள் ஆசிரியரிடம் முறையிட்டனர்.
ஆசிரியர், சடோகோவின் பெற்றோரிடம் கூறவே அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ‘’லுயுகேமியா’’ எனும் ‘’அட்டம்பாம்’’ என்ற நோயால் பாதிக்கபட்டுள்ளதை கூறினார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். தனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி அறிந்த சடோகோ மிகவும் பயந்து அழுதாள்.
மருத்துவமனையில் நாட்கள் கழிந்த போது, ஒரு நாள் நலம் விசாரிக்க ஸசாகியின் நெருங்கிய தோழியான சிசுகோ தன் கைகளில் சில காகித கொக்குகளை கொண்டுவந்தாள். காகித கொக்குகள் குறித்து கூறும் போது, பல வருடங்களாக ஜப்பானில் வாழும் கொக்குகள் புனிதத்தின் அடையாளமாக விளங்குகின்றன. நோயுற்ற ஒருவர்,1000 காகித கொக்குகளை உருவாக்கினால் அவர் உடல்நலம் பெறுவார் . ஆகவே நீ 1000 காகித கொக்குகளை உருவாக்கு என அன்புக் கட்டளை இட்டுச் சென்றாள்.
சடோகோ காகித கொக்குகளை உருவாக்க முடிவு செய்தாள் . ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காகித கொக்குகளை உற்சாகமாக உருவாக்கிய போது ஓரளவு உடல் நலம் பெற்றாள். ஆகவே மருத்துவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தின் முடிவில் மீண்டும் நோய்வாய்பட்டாள். முன்பை விட மிக அதிகமான வலியும், வேதனையும் கூடியபோது கூட நம்பிக்கையை தளரவிடாமல் இருந்த போதும் கூட மீளா உறக்கத்துக்குச் சென்று விட்டாள் சடோகோ ஸசாகி. அவளால் உருவாக்கப்பட்ட காகித கொக்குகள் மொத்தம் 644.
சடோகோவை பெருமை படுத்த எண்ணிய வகுப்பறை தோழர்கள் 39 பேர் சேர்ந்து காகித கொக்கு சபையை உருவாக்கினர் . சடோகோவின் இறப்புக்குப் பின் மூன்று வருடங்களுக்கு பிறகு 1958 மே 5-ம் தேதி ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அவளுக்கென நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அவளின் நினைக்ச் சின்னம் இன்றளவும், நமக்கு உலகின் அமைதியைக் கூறி கொண்டே இருக்கிறது.
Sadako😭